மட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்களால் ஒரு
காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்தப்பட்டபோது நிகழ்த்தப்பட்ட “சியர்ஸ் லீடர்“ ஆட்டம் ஒட்டி பண்பாடு, உடைபற்றிய ஒரு விவாதம் எழுந்தது. அதற்கு முன்பு நடிகை செரேயாவின் உடைபற்றிய பத்திரிக்கைகள் விவாதம், நமிதாவின் உடைபற்றிய சட்டமன்ற விவாதம், தசாவாதார ஒலித்தகடு வெளியீட்டு விழாவில் மல்லிகா செராவத் உடைபற்றிய விவாதம். இப்படி உடைகள் குறித்து தமிழ் பண்பாட்டு காவல்நிலைய கண்காணிப்பு அதிகாரிகளான கலாச்சாரக் காவலர்கள் ஏற்படுத்தும் சமூக அழுத்தம் ஒரு தொடர் நிகழ்வாகிக் கொண்டுள்ளது. குறிப்பாக தையல் எந்திரங்களுடன் திரிந்து கொண்டிருக்கும் இவர்கள் ஒட்டுத் துணியில் சாலையோர வாழ்க்கை வாழும் மனிதர்கள் பற்றிய எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என்பது ஒரு நகைமுரண். பண்பாடு என்பது பெண்களால் உடுத்தப்படும் உடையின் அளவால் அளவிடப்பட்டே காக்கப்பட்டு வருகிறது. உடைகளைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் பேசத் துவங்கினால் கண்டிப்பாக பெண்ணியம் பற்றி பேசியே ஆக வேண்டும். காரணம் பண்பாடு என்பது பெண் உடல் தைக்கப்பட்ட சமூகம் பற்றிய பேச்சுதானே.
ஆண் மட்டுமே உள்ள ஒரு சமூகத்தை நம்மால் கற்பனை செய்துகொள்ள முடியுமெனில் பெண் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கும் இடம் புரியக்கூடும். அதில் பண்பாடு என்கிற சொல்லாடல் சாத்தியமா? என்கிற கேள்வியும் வரும். இதன் மறுதலையாக பெண் மட்டுமே உள்ள ஒரு சமூகத்தையும் கற்பனை செய்யலாம். அதிலும் இக்கேள்விகள் சாத்தியமே. ஆக, பண்பாடு என்பது ஆண் பெண் என்கிற இணைகளின் வழியே அர்த்தமாகும் ஒன்றே. அல்லது இந்த இணைகளை இயற்கை சார்ந்த அமைப்பிலிருந்து ஒரு சமூகம் சார்ந்த அமைப்பிற்கு மறுகட்டமைப்பு செய்வதே பண்பாடு எனலாம்.
தமிழில் பண்பாடு என்கிற வார்த்தை 75 ஆண்டுகால கண்டுபிடிப்புத்தான் என்றும் பழந் தமிழகத்தில் இன்று நாம் கூறும் பண்பாடு போன்ற பொருளில் தமிழில் திருவள்ளுவர் பயன்படுத்திய “சால்பு“ என்கிற பழஞ்சொல் புழுங்கியதையும், பண்பாடு என்பது மேற்குலகம் எழுதிய உலகவரலாற்றின் மீள்கண்டுபிடிப்புடன் புழக்கத்திற்கு வந்த ஒன்று என்கிறது தமிழை உலக ஆய்வுப் புலத்திற்குள் வைத்து பார்க்கும் ஆய்வாளரான பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ”தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் - மேற்குலகின் பங்கும் பணியும்” என்கிற நூல். இதன் பொருள் பண்டைய சமூகம் பண்பாட்டுக் கூறுகளை தனது இருத்தலுடன் உறவுகொண்டே புழங்கி வந்ததே தவிர அதை தனித்ததொரு பகைப்புலமாக வடிவமைத்துக் கொள்ளவில்லை என்பதுதான். குறிப்பாக பண்பாடு என்கிற ஒழங்கமைப்பு ஒரு மக்கள் கூட்டம் கணக்குழுவிலிருந்து (clan) இனக்குழுவாக (race) மாறுவதற்கான அடிப்படையாக உள்ளது. பண்பாடு என்பது இவ்வாறாக ஒரு குழு அடையாளமாக உள்ளது.
பண்பாடு என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது. பயன்பாட்டில் உள்ள வழமைகள் அதன் முதல்கூறு. பண்புகளின் மரபுத் தொடர்ச்சியாக வரும் பொதுமைகள், அதாவது வழமைகள் (customs) மற்றும் பழக்கங்கள் (manners). இவைகளும்கூட காலங்காலமாக ஒன்றே போல் வந்ததல்ல. ஒவ்வொரு சமூகம் இதனை தனது மதிப்படையில் தீர்மாணிக்கிறது. உயர் மதிப்பு கொண்டவற்றை நாம் வழமைகளாக பண்புகளின் பொதுமைகளாக அதாவது பண்பாடு என்பதாக நடைமுறையில் கைக்கொள்கிறோம். சான்றாக விருந்தோம்பல் என்பதை வள்ளுவர் வலியுறுத்தும்போது அதற்கு புறனடையாக வேறொரு பழக்கம் இருந்திருக்கலாம் அல்லது இப்பழக்கத்தை உயர் மதிப்புள்ளதாக மாற்றுவதன் மூலம் சமூகம் இதனை பின்பற்றச் செய்யலாம் என்பதே வள்ளுவரிடமிருந்து நாம் பெறுவது. இதனை தமிழர் பண்பாட்டுடன் மட்டுமே சுருக்கிப் பார்க்க முடியாது. எல்லா பண்பாடுகளிலும் அல்லது இனங்களிடமும் இப்பண்பு இருந்தே வந்திருக்கிறது என்பதும் அடிப்படையில் இனக்கலப்பிற்கான முன்முயற்சி என்பதாகவும் இதனை புரிந்து கொள்ளலாம்.
அடுத்து, பண்பாட்டின் அறம் சார்ந்தக் கூறு. பண்பாடு என ஒரு இனத்தின் அடையாளமாக முதன்மைப்படுத்தப்படுவது இக்கூறே. அதாவது இயற்கை Vs பண்பாடு என்பதை இருமை எதிர்வுகளாக கட்டமைத்து இயற்கையை பண்பாட்டின் மூலம் ஒழுங்கமைப்பதே அறவியலின் அடிப்படை. இயற்கையில் இயல்பானது என்பதை இயல்பற்றதாக கட்டமைப்பது பற்றியதே நமது கவனம். இந்தவகை அறம் சார்ந்தக் கூறையே பண்பாடு என்கிற புரிதலுடன் எடுத்தாளுகிறோம், மற்றவற்றை வழமைகளாக பாவிப்பதே சரியானது. பொதுவாக, பண்பாட்டை வழமைகளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் புரிந்து கொள்ளவே இதை இங்கு நாம் தனியாகச் சொல்ல வேண்டியுள்ளது.
பண்பாடு என்பதை நாம் இப்படி வரையறுத்துக் கொள்ளலாம், ஒரு உடலினை சமூகத்திற்கு ஏற்ப முன் நிறுத்துவதற்காக அதன் மீது எழுதப்பட்டிருக்கும் ஒரு சங்கேத மொழி என்று. அதாவது, ஒரு உடலானது என்ன செய்ய வேண்டும்? எப்படி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்? எப்படி தனது தானை (அதாவது ego-வை) கட்டமைத்துக் கொள்ள வேண்டும்? எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும்? எதற்காக துன்பம் அடைய வேண்டும்? என்பதை ஒரு கண்காணிப்பு கருவி போலக் கண்காணித்து உடலை வழிநடத்தும் ஒரு எந்திரம். அதற்காக அது கண்காணிக்கும் ஒரு முக்கிய தளம் பாலியலாகும். பாலியலை ஒடுக்குவது அல்லது முறைப்படுத்துவதன் மூலம் பண்பாடானது சமூக அமைப்பை அதன் ஆதிக்க வடிவிலேயே காக்கிறது. அதற்காக சில உடலியல் வேட்கைகளை (desires) புறமானதாக ஒதுக்கி அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
சான்றாக, ஓரினப்புணர்ச்சி (சரியான சொல் தன்பால் புணர்ச்சி என்பதுதான்) தடை செய்யப்பட்டு அதனை விலக்கியதன் மூலமே பண்பாடானது திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்களையும் காத்துவருகிறது. இவ்வொதுக்கல் மூலம் மையத்தில் இருபால் புணர்ச்சி என்கிற கலப்பின புணர்ச்சியை கட்டமைக்கிறது. அதுவே உடல்பாலியலின் அடிப்படையாக ஒழுங்கமைக்கிறது. இதிலிருந்து விலகிய பாலியலை ஒரு குற்றவியல் நடவடிக்கைப்போல பண்பாட்டு காவல் கண்காணிப்பு செய்யுமாறு ஒவ்வொரு உடலின் தன்னிலை என்பது கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாலியலில் எதை செய்வது? எதை தள்ளுவது? என்பதுவரை எல்லாம முன் தீர்மானிக்கப்பட்ட புனித அல்லது அறம்சார்ந்த கட்டமைவுகளுடன் உறவு கொண்டதாக உள்ளது. சான்றாக, இநதிய பாலியல் பற்றிய முக்கிய ஆவணமான காமசாத்திரம் இந்த இருபால் கலவி பற்றியே அதிகம் பேசுவதும் அதனை ஒரு புனித அற முறைமைக்குள், மத ஒழுங்கமைப்பிற்குள் கொண்டுவருவதையும் வாசிக்க முடிகிறது. ஆக, ஒரு உடல் தன்னைத்தானே கண்காணிப்பதற்கான ஒரு கருவியே பண்பாடு என்றால் மிகையாகாது. பண்பாட்டின் எழுதப்படாத விதிமுறைகள் ஒவ்வொரு உடலின் இயக்கத் தன்னிலையாக அதன் நினைவிலியில் உருவமைக்கப் பட்டுள்ளது. இது ஒரு உடலரசியல் நிகழ்வு. வேறுவிதமாக கூறினால் உடலின் வேட்கைகளை கண்காணிப்பதும், ஒழுங்கமைப்பதும்தான் பண்பாட்டின் அடிப்படை செயல்பாடு ஆகும்.
தன்பால் புணர்ச்சிக்கான உரிமைகள் மற்றும் ஆய்வுகள் குறித்து Queer Theory (தமிழில் இதனை கோணல்கள் பற்றிய கோட்பாடு என்கிறார்கள்) என்கிற ஒரு கோட்பாடு முன்வைப்பது என்னவென்றால் ஆண் மற்றம் பெண் என்கிற பாலின வேறுபாடு (gender difference)என்பது செயலூக்கமிக்க பல நிகழ்வுகளின் மூலமே கட்டப்படுகிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது பால்தன்மையற்றே இருக்கிறது. அதனை “நீ ஒரு ஆண்“ என்றோ அல்லது ”நீ ஒரு பெண்” என்றோ குறித்து பிரிப்பது முதல் நடவடிக்கையாக துவங்குகிறது. அதன்பின் பெயர்வைத்தல், உடைகள் போன்ற வேறுபாடுகள் மூலம் திரும்ப திரும்ப அந்த பால்வேறுபாட்டுச் செயல்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகைய திரும்ப திரும்ப நிகழத்தப்படும் பால்வேறுபாட்டுச் செயல்முறைகள் மூலம் அவ்வுடல் ஆண் அல்லது பெண் என்கிற பாலின அடையாளத்தை தனது தன்னிலையாக கட்டமைத்துக் கொள்கிறது. இக்குழுந்தைகள் வேறுபாட்டை தெளிவாக புரிந்து கொண்டு வளருமாறும் சூழ்நிலைகள் கட்டமைக்கப்படுகிறது. பள்ளித் துவங்கி மயானம்வரை இவ்வேறுபாடு பல்வேறு பண்பாட்டுக் காரணிகளால் திரும்ப திரும்ப அவ்வுடலுக்குள் பதிவுறுத்தப்படுகிறது. சிலகுடும்பங்களில் ஆண்குழந்தைகள் தங்குவதில்லை என்பதால் ஒரு குறிப்பிட்ட வயதுவரை ஆண்குழந்தைக்கு பெண்போல உடைஉடுத்தி தலையில் சடைபோட்டு காலில் கொலுசு அணிவித்து வைத்திருப்பார்கள். பன்னெடுங்காலமாக நிலவிவரும் இப்பழக்கம், ஆண் குழந்தையை பிடிக்கவரும் எமனை ஏமாற்றுவதற்கான ஏற்பாடு என்றாலும் இந்த நம்பிக்கையின் அடியில் உள்ள பாலினமாதல் என்பது ஒரு புறத்தோற்றம் அல்லது நிகழ்த்துதல்களின் (performing act) அடிப்படையே என்கிற கருத்தாக்கம் நிலவுவதைக் காணலாம்.
சான்றாக, "நான் உறுதியளிக்கிறேன்" என்கிற வாசகம் எப்படி ஒரு சத்தியப் பிரமாணமாக சொல்லும் உடலினை பொறுப்பேற்றுக் கொள்ளும்படி பணிக்கும் ஒரு செயலூக்கமுள்ள வாக்கியமாக இருப்பதைப்போல, "நான் பெண்" என்கிற வாசகமும் சொல்லும் உடலின் பொறுப்பிற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஒரு செயலூக்கமுள்ள வாக்கியமாக உள்ளது. இது 'பெண்' என்கிற சமூகம் முன்வைத்திருக்கும் வரையறைகளை உறுதியுடன் ஏற்கும் ஒரு செயலூக்கமுள்ள நடவடிக்கையாகும். இந்த பெண்பற்றிய கருத்தமைப்பு என்பது ஒவ்வொரு சமூக அமைப்பிலும் புதிதாக வரையறைக்கு உட்படுத்தப்பட்டு ஒழங்கமைக்கப்படுகிறது. அதன் ஒரு புற அடையாளக்கூறே பெண் உடைகள் பற்றிய ஒழுங்கமைப்பும். இந் நடவடிக்கைகளே பெண்-னை ஒரு பாலினமாக உருவாக்குகிறது.
பெண் கருத்தரிப்பதற்கான தயார் நிலையை அடைந்தவுடன் அதாவது வழக்கமான சொற்ப் பயன்பாட்டில் 'பூப்பெய்துதல்' அல்லது 'சடங்கான'-வுடன் செய்யப்படும் நிகழ்வுகள் அப்பெண் உடலை ஒரு இயற்கை மாற்றத்திற்கு ஏற்ப இன-விரிவாக்க பாலியல் தயாரிப்பிற்கான உடலாக அறிவிப்பதையும் அந்த சடங்குகள் வழி அப்பெண் உடல் அந்த மாற்றத்தை தன்னுணர்வு மிக்கதாக ஏற்று தனது தன்னிலைக்குள் அம்மாற்றத்தை கட்டமைத்துக் கொள்வதற்கான முயற்சியாகும். இங்கு பெண் உடல் பொது தளத்திலிருந்து அல்லது அதன் விளையாட்டுப் பரப்பிலிருந்து பிரித்து இருட்டான உள்கட்டுகள் எனப்படும் தனித்தளத்திற்குள் இறுத்தப்படுகிறது. பெண் ஒரு இருட்டின் நிரந்தரக் குறியீடாகவும், நிழலாகவும் இருப்பற்றவளாக மாற்றப்படுகிறாள். ஆணின் கதைகூறலில் ஒரு புரியாத புதிராக மாறுகிறாள். பண்டைய சமூகங்கள் இந்தப் புதிரை பெண்ணிற்கு தெய்வத்தன்மையும் பேய்த்தன்மையும் தந்து கட்டமைக்கப்பட்ட கதையாடல்கள் வழி எதிர்கொண்டது. நவீன சமூகம் பெண்ணை ஒரு நுகர்வுப் பண்டமாக மாற்றும் நவீன கதையாடல்கள் வழி இதனை எதிர்கொள்கிறது. அவளது உடலை பால்வேதிமங்கள் வழிந்தோடும் ஒரு பாய்மத் தன்மையுள்ள பிளாஸ்டிக் பொம்மையாகவும், தனது காமவிளையாட்டிற்கான ஒரு களமாகவும் கட்டமைத்து அதனை சுற்றி நுகர்விற்கான வெறியையும் உருவாக்கி வைத்துள்ளது.
இதன் உச்சமாக இன்று அமேரிக்க-ஐரோப்பிய-ஜப்பான் போன்ற நாடுகளில் பெண்களின் பௌதீக உடலுக்கு பதிலாக சிலிகன் பொம்மைகள் பயன்படுத்தும் ஒரு நிலை உருவாகி வருகிறது. பெண் உடலின் ஒவ்வொரு உ
றுப்பையும் ஒரு இனவடிவத்திலிருந்து நுகர்வாளரின் விருப்பிற்கு ஏற்ப தேர்ந்து உருவாக்கப்படும் இந்த நிஜபொம்மைகள் (real doll) பெண்ணின் சதைகளைப் போன்ற குலைவுத் தன்மையுடன் துளைகள் மற்றும் முலைகளுடன் உருவாக்கித் தரப்படுகிறது. ஜப்பானிய முகத்துடனும், ஆப்பிரிக்க மார்புகளுடனும், பிரித்தானிய இடுப்புடனும் கொண்ட ஒரு பலபண்பாட்டுப் பெண் உடலை அதன் தசைச்சூட்டுடன் நீங்கள் பெறமுடியும். அப்பெண் உடலுக்கு உங்கள் கற்பனைகளுக்கான ஆடைகளை உடுத்தி ரசிக்க முடியும். உங்கள் அருகே ஒரு மௌனப்பதுமையாக அல்லது தமிழ் பண்பாட்டு உலகம் முன்வைக்கும் பதிவிரதையாக 'கணவனே கண்கண்ட தெய்வம்' என உங்கள் அருகே படுததுக் கிடக்கும் தமிழ் “மறமும்“, “அறமும்“, “வீரமும்“ கொண்ட பதிகளைப்போல. மணைவியாகிய அலலது துணைவியாகிய 'பத்தினியின்' உச்சநிலைப்பற்றி கவலையோ மனக்கிலேசமோ “குற்ற உணர்வோ?” அடைய வேணடியதில்லை. உங்கள் கேள்விகளைக் கேட்டு சம்மதம் சொல்லும் “மௌனமே சம்மதப்” பதுமைகளாக இருக்கும். இந்நிலையில் பாலியல் என்பது என்னவாக ஆகியுள்ளது? காமம் என்பது என்ன? காத்திருத்தலும், ஊடலும், காதலும் என்ன? என்கிற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இவற்றில் காத்திருத்தலும் காதலும் என்ன? என்று இந்த “பிளாஸ்டிக் சகோதரிகளை” முன்வைத்து தனது கட்டுரை ஒன்றில் சங்கத் தமிழையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு கேள்விகளை எழுப்புகிறார் பெருந்தேவி. (காலச்சுவடு-இதழ்-83 காத்திருத்தல் எனும் துக்கம், துக்கம் தவிர்த்தல்.) இவ்வாறாக பெண் உடல்கள் பிளாஸ்டிக்குகளாக மாற்றப்பட்டு ஆணின் வேட்கை என்பது விரைப்பின் வெறியாக உருவாகி உள்ளது.
ஆக, பால் (sex) என்பது உயிரியல் நிலமையிலும் பாலினம் (gender) என்பது பண்பாட்டு நிலமையிலும் கட்டமைக்கப்படுவதாகும்.
பெண் என்பது பிறப்பு அல்ல அது ஒரு செயலூக்கமுள்ள ஒரு நிகழ்வாகும் (Performative Act) என்கிறது கோணல்கள் பற்றியக் கோட்பாடு. ஒரு குழந்தையை பெண்ணாக உணரவைப்பது இத்தகைய பண்பாட்டு நடவடிக்கைகள்தான். அதேசமயம் பாலினத்தை ஒருவர் தேர்வு செய்துகொள்ள முடியாது, ஏனெனில் பிறக்கும்போதே ஒருவர் ஏதேனும் ஒரு பால் அடிப்படையில்தான் குறியிடப்படுகிறார். அல்லது பாலினமாதல் என்கிற செயலுடன் ஒரு உடலின் தன்னிலை உருவாக்கம் என்பது துவங்குகிறது. இங்கு தனது பாலினத்தை தன்னுணர்வுடன் தேர்வு செய்து கொள்ளும் அடிப்படை உரிமையைக் கோரும் திருநங்கைகளை (அரவானிகள்) இத்துடன் இணைத்துக் காணலாம். இவர்களை புனிதப்படுத்தியோ அல்லது கேவலப்படுத்தியோ மையத்திலிருந்து ஒதுக்கி தள்ளுகிறது சமூக அதிகாரம். பாலியல் நடவடிக்கைகளில் இருபால் புணர்ச்சி மட்டுமே அங்கீகரிக்கப்படுவதற்கு இந்த பாலின வகைப்பாடு என்கிற செயல் அவசியமான ஒரு சமூக நடவடிக்கையாகும். இதற்காகத்தான் தன்பால் புணர்ச்சி பாலினமாதல் என்கிற செயலுக்கு எதிரானதாக இருக்கிறது மற்றும் இந்த ஒழுங்கை குலைத்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டு உள்ளது என்கிறார் இதனை ஆய்வு செய்த ஜுதித் பட்லர் என்கிற ஆய்வாளர். நவீன சமூகங்கள் தன்பால் புணர்ச்சியை பாலியிலில் ஒரு தனி வகையினமாக மாற்றியதன்மூலம், அதனை மனப்பிறழ்ச்சி அல்லது நோய்த்தன்மையுடன் இணைத்து விளிம்பிற்கு தள்ளி இருபால் புணர்ச்சியை மையமானதாக கட்டமைத்துள்ளது.
எதார்த்தத்தில், பண்பாடு என்பது உள்ளிருந்து உருவாகுவதில்லை அல்லது அடையாளப் படுத்தப்படுவதில்லை, அது மற்றக் குழுக்களுடன் அல்லது மற்றமையான ஒரு உடலுடன் ஆன இயக்கத்தில், உறவில், வேறுபாட்டில் கட்டமைந்து இறுகுகிறது. காரணம் பண்பாடு என்பது மற்றவராலோ அல்லது மற்றக் குழுவினராலேயே அர்த்தப்படுத்தப்படுகிறது. அர்த்தம் என்பதே பிறருடன் ஆன இணைவிலேயே உருவாகுகிறது. அல்லது பிறர் பற்றிய உணர்வின் வழியாக மட்டுமே சாத்தியம். அதாவது, இரு தனித்த உடல்களுக்கோ பொருள்களுக்கோ அர்த்தம் அவசியமில்லை, அவை இணைவதன் வழியாகவோ அல்லது ஒன்றை ஒன்று எதிர்கொள்வதின் வழியாகவோ உருவாகுகிறது. ஆக, ஒரு குழு தனது பண்பாட்டை புரிந்துகொள்ள அதனை வேறுபடுத்தி அர்த்தமாக்கும் பிறிதொரு குழு தேவை. அவ்வகையில் பண்பாடு என்பது பிற குழு ஒப்பிடல் இல்லாமல் சாத்தியமி்ல்லை. இரண்டு குழுக்கள் ஒன்றையொன்று எதி்ர்கொள்ளும்போது அவற்றின் தன்னிருப்பின் அல்லது வித்தியாசப்படுத்தலின் அடையாளச்செயலாக உருவாவதே பண்பாடு. அதேநேரத்தில் பிற குழுக்களினை ஒப்பிட்டு உயர்ந்தது, தாழ்ந்தது என்கிற மதிப்பிடல் வழியாக அது ”பண்பாட்டு அரசியலாக” வடிவெடுக்கிறது. இப்பண்பாட்டு அரசியல் காலனிய அரசாட்சிகளுக்குப்பின் உலகமயமானதாக மாறுகிறது. உலக மனிதனும் அவனுக்குமான சாராம்சமும் உருவாகுகிறது. அதாவது, மனிதன் என்கிற ஒரு வகைத்திணை உருவாகுகிறது. இந்த வகைத்திணை பண்பாடு என்கிற வகைத்திணையின் ஒரு விளைவாகும். அதாவது பண்பாடற்ற ஒரு உடல் மனிதானாக கருதப்படுவதில்லை, ஒரு விலங்காகவே குறியிடப்படுகிறது.
பண்பாடு என்பது வரலாற்று வகைத்திணை மட்டுமல்ல அது ஒரு அரசியல் வகைத்திணையுமாகும். உண்மையில் பண்பாட்டிற்குள்தான் மனித உடல் நடப்பட்டு விளைகிறது. இப்படியாக விளைந்த உடல்களில் ஆணுடல், பெண்ணுடல் என்பதாக பாலின உடல் உருவாக்கம் நிகழ்கிறது. இவ்வாறாக, இயல் உடலை பண்பாட்டு உடலாக மாற்றாமல் எந்த குழுவும், அரசும், சமூகமும் உருவாகியிருக்க முடியாது. புதிய அரசியல் மற்றும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப இவ்வரையறைகள் மறுவரை செய்யப்பட்டப்படியே இருக்கிறது. ஒரு உடல்- அங்கங்களற்ற உடல்களான (body without organ) மண்ணுடன், நிலத்துடன், குழுவுடன், சமூகத்துடன், குடும்பத்துடன் மற்றும் மதத்துடன் இணைப்பதின் வழியாக உடலை நிலமயப்படுத்துதல் (territorialization) என்கிற செயல் நடைபெறுகிறது. ஒரு உடலை நிலத்துடன் பிணைப்பதின் வழியாகவே பண்பாடு என்கிற செயல்பாடும் துவங்குகிறது. ஒவ்வொரு வரலாற்றுக் கட்டங்களிலும் இந்த நிலமயமாக்கல் என்பது புதிய குழுவின் பண்பாட்டால் நிலத்தகர்ப்பு (deterritorialization) செய்யப்பட்டு அப்புதியக் குழுவின் பண்பாட்டுக் கூறுகளால் மறுநிலமாக்கல் (reterritorialization) செய்யப்படுகிறது. ஆங்கிலேயக் காலனி இந்திய பண்பாட்டை இவ்வாறாகத்தான் மறு கட்டமைப்பு செய்தது. இந்தியாவின் முந்தைய மரபுகளை தகர்த்துவிட்டு தனது பண்பாட்டுப் புலத்தை கட்டமைத்து, இந்திய சமூகத்தை மறுவரையறை செய்தது. ஆகவேதான், ஆங்கிலேயக் காலனியின் பார்வைப்புலம் இல்லாத இந்தியப் பண்பாடு என்பது சாத்தியமற்றதாக இருப்பதை உணரலாம்.
குறிப்பாக தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொள்வோம். அகம்Xபுறம் என்கிற சங்கக்காலப் பிரிவு தமிழ் பண்பாட்டின் ஒரு உயர்ந்த மாண்பாக முன் வைக்கப்படுகிறது. இந்த பிரிவினை வழியாக உடல் உற்பத்தி (காதல் - காமம் - அகம் - பெண்மை-பெண் உடல்) என்பதும் உடல் வலிமை அல்லது காப்பது (வீரம்-போர்-புறம்-ஆண்மை-ஆண்உடல்) என்பதாக குறியிடப்படுகிறது. “விழுப்புண் இல்லாத மார்புகள் பெண்களால் தழுவப்படாது“ என்பதன் அடிப்படையில் பெண் காதலைப் பெற போர் என்கிற வீரச்செயலில் ஈடுபடும்படி ஆண் உடல் கட்டமைக்கப் படுகிறது. பொருளாதாரம் எனும் ஆணிரைக் கவர்தல் மற்றும் பாலின்பப் பொருளாக பெண்ணைக் கவர்தல் என்பதற்காகவே போர் என்பது நிகழ்கிறது. இன உற்பத்தி, இன வலிமை என்கிற இரண்டு கண்ணோட்டங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒருவகை உடலரசியல் நிலைகளே அகம், புறம் என்கிற பிரிவினை. இதுதான் தமிழக அரசுமுறை உருவாக்கத்தை காப்பாற்றிய ஒன்று. இதன்வழிதான் தமிழ்பண்பாடு கட்டிக் காக்கப்பட்டு வருகிறது.
மேலும், சங்க இலக்கியங்களில் வரும் “நெய்யனி மயக்கம்“ போன்ற கிளர்ச்சி நிலைகள் “கார்னிவல்“ கொண்டாட்டங்கள் பிந்தைய மதப் பண்பாட்டு ஆதிக்கத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆக, பண்டைய தமிழர்களிடம் இருந்த ஒரு உடல் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை என்பது முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக பெண் ஒரு வளமையான நிலமாக உருவகப்படுத்தப்பட்டு ஆழமாக உழுது பயிர் இட வேண்டிய ஒரு களமாக (site) மாற்றப்பட்டுவிட்டால். பெரும்பாலான மதங்களின் புனிதமறைகள் பெண்ணை ஒரு வளமான நிலமாக உருவகப்படுத்துவதன் அடிப்படை இதுதான். பெண் வெளி (feminine space) என்பது பெண் களமாக (feminine site) மாற்றப்பட்டுவிட்டது. இதைதான் இன்றைய பண்பாட்டு வரலாறு சாதித்துள்ளது.
இவ்வாறான பெண் வெளியை காக்க கட்டமைக்கப்பட்டதே ஆண் என்கிற உடல். ஆக, ஆண் என்கிற கட்டமைவே பெண் என்கிற மையத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது. பெண் உடலை தனது ஆதிக்கத்திற்குள் வைப்பதே ஆணியத்தின் இருத்தலைச் சாத்தியப்படுத்தும். அதனால்தான் பெண் என்கிற கருத்துருவத்தை மையமாகவும் அவளது உடலை விளிம்பிலும் வைத்து ஒடுக்குகிறது ஆணியம். ஒருபடிக்கு மேலாக பெண்ணை தெய்வநிலைக்கு கொண்டு சென்று இயக்கமற்றவளாக புனிதப்படுத்தி ”மென்மையாக” ஒடுக்கி வைக்கிறது. இன்றைய பண்பாடு என்பது ஆணியம் கட்டமைத்த ஒன்று. இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஆணியம்தான் பண்பாடு என்கிற தொழில் நுட்பத்தையே வரலாற்றின் வகைத் திணையாகக் கண்டுபிடித்து அது குறித்து ஆய்வுகள் மற்றும் பேச்சுகளை பெருக்கி உள்ளது. கருத்துருவ நிலையில் பெண் இயற்கை என்றால் ஆண் பண்பாடாக உள்ளான். அதனால்தான் ஆண் எல்லா சமூகங்களிலும் கலாச்சாரக் காவலனாக உள்ளான். பெண்ணுக்கு ஆணால் கையளிக்கப்பட்டிருப்பது அதீத பாலியல் வேட்கைக் கொண்ட பேய்நிலை அல்லது பாலியலை முற்றிலுமாக ஒடுக்கிய தெய்வீக நிலைதான். காட்டேறி, நீலி போன்ற பேய்நிலைகள் அதீத பாலியல் வேட்கை கொண்ட உடல்களாக தொண்மங்கள் கட்டப்பட்டுள்ளதை இவ்வாறே நாம் புரிந்து கொள்ள முடியும். இது உலகெங்கிலும் உள்ள தொண்மங்களாகும். மேற்றிசை நாடுகள் மற்றும் கிரேக்க ரோம பண்பாடுகளில் டிராகுலா துவங்கி பல பேய்நிலை வகைகள் இத்தகைய மிகைக்காமநிலையின் உருவக வடிவங்களே.
இத்தொண்மங்களின் தோற்றமூலம் என்பது இயல்பான பாலியலை தனிவகையாக பிரித்து அதனைக் கட்டுப்படுத்தி அதீத பாலியல் வேட்கையாக மாற்றி அதை ஒடுக்கியதின் விளைவே. இந்த ஒடுக்கம் பெண்களை ஹிஷ்டீரியா எனும் மனநோய்க்கு ஆளாக்குகிறது. இதற்கு பண்டைய மருத்துவர்களான அவிசேனா, காலன் போன்றவர்கள் துவங்கி 19-ஆம்நூற்றாண்டு நவீன மருத்துவர்கள்வரை சிகிச்சை முறையாக முன்வைத்தது, பாதிக்கப்பட்ட பெண்களை பிற பெண் பணியாளர்கள வைத்து கைகளால் மஸாஜ் செய்தல் அதாவது சுயமைதூனம் செய்தல் அல்லது உடலின் பாலியில் வேட்கையை தணிக்கும் செயற்கை வழிமுறைகள்தான். 1963-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பீட்டர்வான் போரிஸ்ட் (Pieter van Foreest) என்பவரால் வெளியிடப்பட்ட மருத்தவ தொகுப்பு நூலில் இந்நோய் ”கருப்பை நோய்” என்றும் ” தாய்மையின் மனஅழுத்தம்” எனவும் குறிப்பிடப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்சொன்ன வழிமுறைகளே சொல்லப்பட்டுள்ளதை Technology of Orgasm என்ற நூல் குறிப்பிடுகிறது.
மீராநாயரால் எடுக்கப்பட்ட காமசாஸ்த்ரா என்கிற படத்தில் பாலியலை ஒடுக்கிய ஒரு பெண்பாத்திரத்திற்கு ஏற்படும் வயிற்று வலி நோய்க்கு சிகிச்சை அளிக்க வருவார் ஒரு மருத்துவர். அப்பெண் உடல்முழுக்க அந்நிய ஆண் பார்வை படக்கூடாது என்பதால் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கும். போர்வையின் மையத்தில் உள்ள கிழிக்கப்பட்ட ஓட்டை வழியாக தனது கைகளை உள்ளே நுழைத்து அப்பெண் வயிற்றைச் சோதிப்பார் மருத்துவர். ஆணால் அப்பபெண்ணோ அவரது கைகைள எடுத்து தனது தெடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்வாள். மருத்துவர் இரண்டு மூன்றுமுறை முயன்றும் இது தொடர உடனே இது வேறுவிதமான நோய் என்று திரும்பிவிடுவார். பெரும்பாலான பெண்களின் மனநோயக்கு காரணமான பாலியல் ஒடுக்கத்தை நுட்பமாகச் சொல்லும் ஒரு காட்சி இது. இதற்கான சிகிச்சையாக இருந்த சுயஇன்பம் செய்தல் என்பது இன்று ஒரு குற்றவியல் மன அமைப்புடன் உறவு கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒடுக்கம் தற்சமயம் உடைகள் வழியாக கண்காணிக்கப்பட்டு இறுக்கப்படுகிறது. உடலை முழுக்க மறைப்பதன் வழியாக பண்பாடானது பெண் பாலியல் பற்றிய ஒரு சொல்லாடல்களத்தை கட்டமைக்கிறது. இச் சொல்லாடல்களத்தில் பெண் என்பவளது உடல் ஒரு நுகர்வுப் பண்டமாகவும் அதை சந்தைப்படுத்தும் உரிமை பொதுமக்களுக்கு இல்லை என்பதாகவும் அப்படி பொதுமக்கள் இந்தவகை உடைகளை உடுத்தி உடலை வெளிப்படுத்துவதன் வழியாக சமூகத்தின் பாலியல் வேட்கை ஒரு கட்டத்தில் தணிந்து அடங்கி அது வேறாக மாறிவிடும் என்பதால் அதனை நுகர்வு வெறிக்குள் வைப்பதையே இப்பண்பாட்டுச் சொல்லாடல்கள் வழிச் செயல்படுத்துகிறது சமூக அதிகாரமானது.
இங்கு நாம், ஒரு வரலாற்று உண்மையை புரிந்துகொள்வது அவசியம். ஆங்கிலேய காலனிக்கு முந்தைய இந்திய மக்கள் மேலாடையின்றி உடலை முற்றிலும் வெளிப்படுத்தக்கூடிய (இன்றைய பொருளில் கவர்ச்சியான) உடைகளையே அணிந்ததாக வரலாற கூறுகிறது. ஆங்கிலேய ”விக்டோரியன் பண்பாடு” என்பது கழுத்து முதல் கால்வரை மறைக்கும் நீண்ட “கவுனை“ அணிவதுதான். இதுவும்கூட மேல்தட்டு வர்க்க உடையே. உழைக்கும் மக்களின் உடை அல்ல. இந்த உடையை மாற்றியமைத்து இன்றைய இரு-துண்டு (2 piece) உடைகளாக ஐரோப்பிய பண்பாட்டை மாற்றியமைத்தது இந்தியப் பண்பாடுதான். ஆங்கிலேய எஜமானர்களிடம் தங்களது இடத்தை உறுதி செய்ய 'ஆங்கிலேய மதாம்கள்' இந்தியாவின் இந்தவகை உடைகளின் வெளிப்படும் கவர்ச்சித் தன்மையை பயன்படுத்த துவங்கியதாக இதனைக் கொள்ளலாம். பரங்கிப் புண் எனப்படும் பால்வினை நோயை இந்திய பெண்களின் உடலில் பரவவிட்ட ஆங்கிலேயர்களின் கிளர்ச்சி வெள்ளை உடலைவிட கருப்பு உடல் மீதான மிகுக் காமமாக வெளிப்பட இவ்வுடைகள் சார்ந்த கவர்ச்சி காரணமாக இருந்ததையே இவை காட்டுகிறது.
விக்டோரின் பண்பாடுதான் நிர்வானமாக (அம்மணமாக அல்ல) இருந்த நமது கடவுள்களை ரவிவர்மா என்கிற ஓவியரைக் கொண்டு ஆடைகட்டி “அழகு” பார்த்தது. இவர் இந்துப் பெண் கடவுள்களை தென்னிந்திய பெண்களின் பண்பாட்டை ஒட்டி வரைந்தார். இன்றைய உடல் மறைக்கும் முழுமையான உடைகள் அடிப்படையில் இந்தியப் பண்பாட்டிற்கு அந்நியமானதே. இன்றைய பாலியல் உயிர்த்தலுக்கானதாக இல்லை. துரிதகதியில் சாவை நோக்கிச் செல்லும் மரணத்தின் உத்திக்கானதாக உள்ளது. முழுமையடைந்த பாலியல், வேட்கைகளை ஏற்படுத்தாது. வேட்கையே நிறைவடையாத குறைத் தன்மையால் வருவதுதான். பெருக்கப்பட்ட பாலியல்தான் இந்த வேட்கையை உயிர்ப்புடன் வைத்து சமூகத்தின் மொத்த உடலையும் அதை நோக்கித் திருப்பி விடுகிறது. உடல்சார்ந்த மரணத்திலிருந்து உடல்சார்ந்த உயிர்த்தலுக்கு பாலியலை மாற்ற வேண்டும். அதற்கு முதலில் உடல் குறித்த இந்த கவர்ச்சி உணர்வுகள் அதன் நுகர்வுத் தன்மையிலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும். கவச்சியில் சிக்கிக் கொண்டுவிட்ட நமது புலன்களை அழகியல் நொக்கியதாக திருப்ப வேண்டும்.
பிரச்சனைகள் நாம் மேற்சோன்ன நடிகைகள் அல்லது பொதுவாக இன்றையப் பெண் அணியும் உடையில் இல்லை. அதனை ஒரு சரக்காக மாற்றி சங்கேதப்படுத்தியிருக்கும் ஆரோக்கியமற்ற நமது ஒடுக்கப்பட்ட பண்பாட்டில் உள்ளது. துணிவிலகியவுடன் மனம் விலகி உடல் வெலவெலக்கும் நமது பாலுணர்வின் பலவீனத்தில் இருக்கிறது. உடல் தெரிய ஆடை உடுத்தும் ஒரு பெண் உடல், ஒரு ஐரொப்பியனுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதில்லை, நமக்கோ அதுதான் மிகப்பெரிய கவர்ச்சி. காரணம் பாலுணர்வு பற்றி நம்மிடம் உலவும் மர்மங்களும், புனைவுகளும், ஆண்-பெண் இருவரையும் பழகவிடாத பண்பாட்டு இறுக்கமுமே காரணம்.
ஒருவேளை இதனை அனுமதித்தால் உடனடியாக எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் “தவறான“ நடைமுறைகளை பின்பற்றி பண்பாடு கெட்டு சீரழிந்துவிடும் என்று பய உணர்விற்கு ஆட்பட வேண்டியதில்லை. இப்பயம் வரக் காரணமான ஊகங்கள்
- எல்லா ஆண்களும் பெண்களும் எதையும் செய்ய முடியாத இறுக்கமான மனநிலையில் ஒருவகை மனோவியல் வன்முறையில் இருப்பதாக எண்ணுவது.
- குடும்பம் போன்ற நிறுவனங்கள் சிதைந்து எல்லாம் தனியர்களாக சீரழிந்து விடுவோம் என்று எண்ணுவது.
- அதீத பாலியல் நடவடிக்கைகளால் சமூகம் வன்முறையானதாக மாறிவிடும் ஒழுங்கு குலைந்துவிடும் என நம்புவது.
- பாலியல் பற்றிய சிந்தனைதவிர வேற சிந்தனைகளே மனிதருக்குள் இல்லை என்று எண்ணுவது.
இவற்றிற்கு எந்த ஆதாரங்களும் அடிப்படைகளும் இல்லை. இவை எல்லாம் மனிதன் மிருக உணர்வு கொண்டவனாக பக்குவப்படாதவனாக உள்ளான் என்கிற பண்பாட்டு காவல்காரர்களின் ஊக அடிப்படையில் வருவது. அப்படியே இவை நிகழ்ந்தாலும் ஒரு தலைமுறைக்கு மேல் இவை தொடரப் போவதில்லை. காரணம், மனித உடல் என்பது தான் உயிர் வாழ்வதற்கான ஒரு சமூக அமைப்பை தானே உருவாக்கிக் கொள்ளும். அது இயற்கை சார்ந்த பண்பு. இதுநாள்வரை, மனிதகுலத்தை கசக்கிப் பிழிந்ததற்காக இந்த ஒரு ”தலைமுறைப் பலியிடலை” புராதன சமூகங்களின் சடங்கான கூட்டுப் பலியிடலாக எண்ணி நிகழ்த்துவதைத் தவிர வேறு என்ன செய்வது?
இங்கு பொதுப்புத்தியில் பதிவுறத்தப்பட்டிருக்கும் பார்வையே உடல்களை வேறுபடுத்தி உணரச் செய்வதாக உள்ளது. அதாவது, பாலியல் தொழிலாளியும் அல்லது நடிகைகள் அல்லது பொதுவாழ்வில் உள்ள மகளிரும் குடும்பப் பெண்களாக கருதப்படும் இலட்சியப் பெண்களும் ஒரேவகை பெண்கள்தான். பாலியல் தொழிலாளி மட்டுமே வெளிப்படையாக கவர்ச்சிக்காட்டி வருவதில்லை. மேல்தட்டு மற்றும் அதை நகல் செய்யும் பெண்களும்மகூட கவர்ச்சி மோகத்தில்தான் உள்ளார்கள். சேவல் கொண்டையைத் தூக்கி நடக்குமாம் பெட்டையைக் கவர. இன்னும் சேவல் பண்ணையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாலியலின் அழகுணர்ச்சி நுகர்வின் வழியாக கவர்ச்சியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சனை. காரணம் சரக்குகளின் சுற்று வட்டத்தை நம்பி இயங்கும் உலகும் அதனை விற்பனை செய்யும் முதலாளிகளும் அதற்காக கட்டமைக்கப்படும் நுகர்வுப் பாண்பாடுமே. ஆண்கள் ஏன் கவர்ச்சியாக உடை அணிவதி்ல்லை என்றோ உடைப் பிரச்சனைகள் குறித்து பெண்களோ அதிகம் கதைப்பதில்லையே ஏன்? நாம் ஆண்கள் என்கிற வகையில் இதனை அலசிக் கொண்டிருப்பதும்கூட நமது உள்மன பயம் சார்ந்த ஒன்றுதான்? பிரச்சனை இந்த நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வும் இயக்கமும் அவசியம் என்பதே. வரலாற்றில் மதங்கள் செய்து வந்த தையற்காரன் பணியை இன்றைய பண்பாட்டு காவலர்கள் செய்ய முற்படுவதே காரணம். இதன் பொருள் கவர்ச்சியான உடைகள் தேவை என்பதல்ல, அவை கவர்ச்சியாகக் கட்டமைக்கப் பட்டுள்ளதுதான் பிரச்சனை.
- ஜமாலன். jamalan.tamil@gmail.com - தீராநதி - ஆகஸ்ட் 2008
images:
1. Young Tormented Girl Pablo Picasso
2. தனது நிஜபொம்மையான பிளாஸ்டிக் காதலியுடன் பேட்டியளிக்கும் காதலன்.








10 Comments:
யப்பா..என்ன சொல்வது. அசத்தல் பதிவு.
நன்றி தங்கவேல் மாணிக்கம்.
நாம் ஆண்கள் என்கிற வகையில் இதனை அலசிக் கொண்டிருப்பதும்கூட நமது உள்மன பயம் சார்ந்த ஒன்றுதான்?///
மிகச்சரியான சுய விமர்சனம். பெண்ணியம் பேசும் ஆண்கள் கூட குறிபிட்ட ஆண் பார்வையில் இருந்தே பேசுகிறார்கள்.
// நாம் ஆண்கள் என்கிற வகையில் இதனை அலசிக் கொண்டிருப்பதும்கூட நமது உள்மன பயம் சார்ந்த ஒன்றுதான்?// தப்பிவிட்டிர்கள் ;)). தேவையான பதிவு நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கழ் .
அருமையான பதிவு
தயவு செய்து பதிவின் எழுத்துக்கள் பெரியதாக இருந்தால் நன்று
ottakuththar said...
//மிகச்சரியான சுய விமர்சனம். பெண்ணியம் பேசும் ஆண்கள் கூட குறிபிட்ட ஆண் பார்வையில் இருந்தே பேசுகிறார்கள்.//
உண்மைதான். ஆண்நிலை என்கிற தன்னிலை பற்றிய பிரக்ஞையின்றி எழுதினால் பெண்ணியம் குறித்து நமது பேச்சானது பெண்களுக்கு அறிவரை ஆலோசனை அல்லது வழிகாட்டும் ஆசிரிய
அல்லது உயர் மணொபாவத்தை நம்மை அறியாமல் அடைந்துவிடக் கூடியது. அதனால் பெண்ணியம் குறித்து எழுத்தில் சயவிமர்சனம் என்பது அவசியம்.
புரிதலுக்கு நன்றி.
saki said...
//தப்பிவிட்டிர்கள் ;)). //
என்ன இது கொலைவெறித் தாக்குதலாக உள்ளது. அயுதத்துடன் ஆண்களுக்கு எதிராக அலைவதப்போல உள்ளது.
//தேவையான பதிவு நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கழ் .//
நன்றி.
sharevivek said...
//அருமையான பதிவு
தயவு செய்து பதிவின் எழுத்துக்கள் பெரியதாக இருந்தால் நன்று//
வருகைக்கம் கருத்துக்கும் நன்றி. கட்டுரை பெரிதாக உள்ளதால் எழுத்தை சிறிதாக ஆக்க வேண்டியதாக உள்ளது. உங்கள் ஆலோசனை கணக்கில் எடுத்துக்கொள்கிறேன்.
அருமையான பதிவு.
ஆங்கிலேயர் வருகைக்கு முன் நாமிருந்த நிலையை இப்ப அவுங்க எடுத்துக்கிட்டாங்க. கழுத்துமுதல் காலவரை மூடும் கலாச்சாரத்தை ( அதுவும் இந்த வெப்பம் அதிகமுள்ள சூழலில் வேர்வைவழிய நசநசக்கும் நிலை) நம்ம தலையில் நாமே ஏத்திக்கிட்டதுதானே. நமக்கு எப்பவும் மேல்நாட்டைப் பார்த்துக் காப்பி அடிச்சே ஆகணும்.
நம்மூர் தையல்காரர்களும் என்ன சொன்னாலும் கழுத்தை இறுக்கும்படித்தான் தைச்சுத் தர்றாங்க.
பண்பாட்டுக் காவலர்கள் தங்கள் கடமையைச் செய்யறாங்க:-))))
துளசி கோபால் said...
//அருமையான பதிவு.//
வருகைக்கு நன்றி.
//ஆங்கிலேயர் வருகைக்கு முன் நாமிருந்த நிலையை இப்ப அவுங்க எடுத்துக்கிட்டாங்க. கழுத்துமுதல் காலவரை மூடும் கலாச்சாரத்தை ( அதுவும் இந்த வெப்பம் அதிகமுள்ள சூழலில் வேர்வைவழிய நசநசக்கும் நிலை) நம்ம தலையில் நாமே ஏத்திக்கிட்டதுதானே. நமக்கு எப்பவும் மேல்நாட்டைப் பார்த்துக் காப்பி அடிச்சே ஆகணும்.//
ஆமாம் சரியாகச் சொன்னீர்கள்.
//நம்மூர் தையல்காரர்களும் என்ன சொன்னாலும் கழுத்தை இறுக்கும்படித்தான் தைச்சுத் தர்றாங்க.//
அப்படியா? :)
//பண்பாட்டுக் காவலர்கள் தங்கள் கடமையைச் செய்யறாங்க:-))))//
:)))
Post a Comment