பாலினமாதல், சொர்க்கம், நிறம், கனவு, விளையாட்டு - ஈரானிய திரைப் படங்களை முன்வைத்து.

நான் பார்த்த மிகக்குறைவான ஈரானியக் கலைப்படங்களில் (இப்படி பிரிப்பதில் உடன்பாடில்லை என்றாலும்) சில்ரன்ஸ் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைஸ் மற்றும் ஆப்பிள் பார்த்துள்ளேன். சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்த பாரன் மற்றும் அம்மாவின் விருந்தினனை சோ்த்துக்கொள்ளலாம். இப்படங்கள் எல்லாவற்றிலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. அவற்றில் முக்கிய பாத்திரங்கள் சிறுவர்கள் அல்லது சிறுமியர்கள். ஈரானியப் படங்கள் அழுத்தமாக வாழ்வை அதன் அவலத்தைச் சொல்லக் கூடியவை. ஈரானிய கலாச்சாரத் தனித் தன்மைகளையும் உலகு பற்றிய மனிதார்த்த சிந்தனைகளையும் உள்ளடக்கியவை. இப்படங்கள் குறித்த பரவலாக்கத்திற்கும் ஏற்படத்தப்படும் விழிப்புணர்விற்கும் உலக அரசியல் போக்குகளுடன் உள்ள உறவு பிறிதொரு ஆய்விற்கு உரியது. உலக அழகியாக இந்திய குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க பெண்கள் தோ்ந்தெடுக்கபட்டபிறகு அதன் தாக்கம் உள்ளுர் அழகிப் போட்டிகளாகவும், அழகு என்பதில் மஞ்சள், குங்குமம் என்கிற உள்ளுர் அழகியலை காஸ்மட்டிக்ஸ் கொண்டு மாற்றீடு செய்ததும், அந்த அழகுப்பொருள் வியாபரம் பெருகியதும், இந்த படத்திலாவது தன்னுடன் நடிக்கமாட்டாரா என அறிக்கை விட்டு “தள்ளாத வயதிலும் பொல்லாத புலியென“ காத்துக் கிடக்கும் ரஜனியின் ”பாலி கோலி ஹாலிவுட்” நாயகி ஐஸ்வர்யா ராய் கிடைத்ததும்தான் மிச்சம்.

குறிப்பாக பாரன் (இப்படம் குறித்து நண்பர் டிசெவின் பதிவு422737225_0bd342d889 இங்கு) சவுதி அரேபியாவில் உள்ள ஆப்கானிகளின் அனுபவத்துடன் ஒப்பிடவைத்த ஒன்று. ஆப்கானிய ஆண்கள் அகதியாக கார் கழுவுதல் துவங்கி செருப்பு தைத்தல் வரையும், பெண்கள் சாலைகளில் பிளாஸ்டிக் பூ விற்பது, சிறுவர்கள் சூயிங் கம் விற்பது என பார்க்கவே மனம் சங்கடப்படும் காட்சிகள் அவை. சில ஆப்கானியர்கள் கார்பெட் கடைகள் மற்றும் உணவுச்சாலைகள் வைத்து நடத்திய போதிலும் பரவலாக அவர்களது நிலை என்பது பாரனில் வரும் அடையாள அட்டை இல்லாமல் பணிபுரியும் “நித்தியக் கண்டம் நீண்ட ஆயுசு“ சிக்கலுடன் உறவு கொண்டதே. அமேரிக்க ரஷியப் பனிப்போரின் கோர முகத்தை அவர்களது கண்களில் வழியும் சோகம் சொல்லிக் கொண்டே இருக்கும். போதைப் பொருளாதாரத்தாலும், போர் பதற்றங்களாலும் அரைப் பைத்திய நிலைக்கு ஆளான ஆப்கானியர்கள் ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியலின் கொடூரத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பாரன் படம் போர் பற்றி நேரடியாக சொல்லாவிட்டாலும் போரின் வன்முறையை நமக்கு அற்புதமாக உணர்த்தி விடுகிறது.

பாரன் பாலினமாதல் எ188478307_ca02fc1517னகிற அரசியல் பிரச்சனையையும் முன்வைக்கும் ஒருபடம். அதேபோல் ஆப்கானியப்படமான ஒஸாமாவும். (இப்படம் குறித்து நண்பர் நிவேதாவின் பதிவு இங்கு) இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை குடும்பத்தை காக்க ஆப்கானிய சிறுமிகள் ஆண்வேடமிட்டு வேலைக்கு செல்வது. ஏகாதிபத்திய வேட்டைக் காடுகளாக்கப்பட்ட காபுல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பற்றிய கதைகள். போர் நிகழும் காலங்களைவிட முடிந்தபிறகான காலங்களில் ஏற்படுத்தம் பாதிப்புகள்தான் அதிகம். பாரனில் ஆப்கான் எல்லையைத் தாண்டி ஈரானில் பணிபுரியும் போரினால் பாதிக்ப்பட்ட குடும்பத்தின் ஆப்கானிய சிறுமி, ஒஸாமாவில் அதே போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிற்குள்ளேயே பணிபுரியும் ஆப்கானிய சிறுமி. இரண்டுமே இஸ்லாமிய நாட்டில் அதன் சமூகப் பின்னணியில் நடைபெறுகிறது.

இவை இரண்டிற்கும் இத்தாலிய இயக்கநர் பியார் பாவ்லோ பசோலினியின் “1001 அரேபிய இரவுகளி”-ல் வரும் ஒரு கிளைக்கதையான “நூருல்தீன் VM__CR0,0,334,334_SS90_ ஜமாரூத் கதை”-க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அக்கதையில் ஜமாரூத் ஒரு அழகான அறிவுள்ள அடிமை. “அரேபிய இரவுகளி“-ல் வரும் ஆண்களைவிட பெண்கள் அறிவாற்றலும் சாமர்த்தியமும் மிகுந்தவர்கள். (நமது தொலைக்காட்சி நெடுந்தொடர் பெண் பாத்திரங்களைப்போல.:-D) பெண்ணரசியல் பேசும் கதைகள் அவை என்று கூறலாம். நூருல்தீன் என்கிற வேலையற்ற இளைஞன் மீதான கவர்ச்சிக் காரணமாக ஜமாரூத் தனது சம்பாத்தியத்தில் சேர்த்த பணத்தை தந்து தன்னையே ஏலத்தில் எடுக்கச் சொல்வாள். அந்த அடிமையின் அறிவாற்றலால் அவள் எஜமானன் அவள் விரும்பும் நபருக்கே தன்னை விற்றுக்கொள்ளும் உரிமையைக் கொடுத்திருப்பான். அவ்வூரின் வயதான செல்வந்தனிடம் ஏலத்தில் போக விரும்பாமல் நூருல்தீன் வழியாக தன்னையும் அவள் விடுதலை செய்துகொள்வாள். அந்த செல்வந்தனுக்கு நீலநிறக் கண்கொண்ட ஒரு “கிறித்துவ“ வேலையாள் (கதையில் இப்படித்தான் குறிக்கப்படுகிறது) இருப்பான். அவன் அவளை கடத்திச் சென்றுவிட, அவள் தப்பிச்செல்ல... ஆண்வேடமணிந்து அவள் ஒரு நகரை நோக்கிச் செல்ல, நகர்வாயிலில் காத்திருக்கும் அந்நகர் மக்கள் அவளை முடிசூட்டி அரசனாக ஆக்கிவிடுவார்கள். காரணம் அந்த நகரின் மன்னன் இறந்துவிட அந்நாட்டு வழக்கப்படி யார் வெளியிலிருந்து நகருக்கு முதலில் வருகிறார்களோ அவர்களே அந்த நாட்டின் இளவரசியையும் மணந்து அரசனாக வேண்டு்ம். ஆண் வேடமணிந்த ஜமாரூத் அரசனாகிவிடுவாள். பெண்ணை ஆண் வேடமிட்ட பெண் மணந்து கொள்வது என்பதாக கதைபோகும். (சமீபத்தில் மாலை மாற்றிக்கொண்ட நம்நாட்டு பட்டத்து ராணிகளை போட்டு இதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.:-D குறிப்பாக நண்பர் டிபிசீடிக்கு இந்த எச்சரிக்கை) இதனை பாலியல் புனைவு நுட்பத்துடன் அருமையான ஒரு செவ்வியல் படமாக எடுத்திருக்கிறார் இத்தாலிய இயக்கநர் பியார் பாவ்லோ பசோலினி. இவர் பற்றிய ஒரு தனிப்பதிவே போடவேண்டும். உடலரசியல் பற்றிய பல நுட்பமான கருத்தாக்கங்களைக் கொண்ட படங்களை எடுத்துள்ளவர். ஆக, இந்தக் கதையும் பாலினமாதல் அரசியலுடன் உறவுகொண்ட ஒருகதை. இந்த 3 கதைகளிலும் பெண் ஆண் உடையில் வந்து ஆணாக வாழ்கிறார்கள் தனது இருத்தலுக்காக. இது எல்லாம் இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள்தான் நடைபெறுகிறது. இந்த படங்களின் ஒற்றுமை மற்றும் அதன் அரசியல் பற்றிய பிறதொரு சந்தர்பத்தில் தனிப்பதிவாக பேசலாம்.

The Color of Paradise 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது. நண்பர் பைத்தியக்காரனின் இப்படம் குறித்து விமர்சனம் (நன்பர் நிவேதாவின் இப்படம் குறித்த பதிவு இங்கு)நுட்பமாக அவதானித்து எழுதப்பட்டுள்ளதுhorse. ஆனால் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் கூறியதுபோல ரசனைவாத அடிப்படையிலான விமர்சனமாக இருந்தாலும் சில காட்சிகளின் தனித்தன்மைகளை விளக்கியுள்ளார். மேலதிகமாக எனக்கு தோன்றிய சில குறிப்பு பொருளை விளக்க முயற்சிக்கிறேன் இங்கு. சினமாவிற்கும் நாவலுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் அக உலகை முன்வைப்பதில் உள்ள பிரச்சனைதான். நாவல் அக உலகை குரல்கள் அல்லது விவரணைகள் வழியாக சொல்லிவிடக்கூடிய சாத்தியங்களைக் கொண்டது. சினிமாவில் அப்படி எதுவும் பண்ணமுடியாது. பழைய பாலசந்தர் படங்களில் வரும் சூத்ரதாரி போனறு துருத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை பயன்படுத்தவது யதார்த்த சினிமாவிற்கு பொருந்தாது. இயக்குநர் தனது காட்சி அமைப்புகள் வழியேதான் இதனை உணர்த்த முடியும். அப்படிப்பட்ட சில காட்சிகளை பைத்தியக்காரன் விளக்கியுள்ளார். அவற்றின் குறிப்புபொருள் தொல்காப்பியத் தமிழில் “இறைச்சி” அல்லது பானினியத்தின் த்வனிப்பொருள் முக்கியமானது. இதழியலில் ஒரு பாலபாடம் உண்டு. யானை நடந்தால் செய்தி இல்லை, விழுந்தால்தான் செய்தி என்பது. வாழ்க்கையை அப்படியே காட்டுவது கலையாகிவிடாது. வாழ்க்கையின் நுட்பமான கட்டமைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவதும் அதனை கட்டுடைப்பதுமே தற்போதைய கலையின் முக்கிய பணியாக உள்ளது. அவ்வாறு சொர்க்கம் என்கிற மதங்கள் முன்வைக்கும் பெரும்புனைவை கட்டுடைக்க முயலும் ஒரு படமே கலர் ஆஃப் பேரடைஸ்.

இப்படம் முன்வைக்கும் ஒரு முக்கிய கேள்வி மதங்கள் குறிப்பாக இஸ்லாம் முன்வைக்கும் சொர்க்கம் என்பது குறித்த வர்ணனைகளில் உள்ள சிக்கலை கேள்விக்கு உட்படுத்துகிறது. இப்பூமியில் கண் தெரியாத ஒருவனுக்கு வண்ணமயமான சொர்க்கத்தின் வர்ணத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும், கண் தெரியாத ஒருவருக்கு நிறம் என்பது குறித்து என்ன உணர்வு அல்லது படிமம் இருக்கும். அதாவது கண் தெரியாத ஒருவன் தனது கனவை விளக்குவதாகக் கொள்dreamவோம் அதில் நிறம் பற்றிய என்ன உணர்வை அவன் வெளிப்படுத்துவான். கனவுக்கு நிறம் உண்டா?என்கிற வாதம் ஒன்று உள்ளது. இதனை அடிப்படை படிமமாகக் கொண்டு ல.ச.ரா. என்கிற எழுத்தாளார் பச்சைக்கனவு என்கிற கதையை எழுதியுள்ளார். பள்ளிப்பருவத்தில் படித்தது கதை நினைவில் இல்லை. கதையின் கரு கனவின் நிறம் என்ன? என்பதுதான். பதிவுலக நண்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். கருப்பு வெள்ளையா? வண்ணமா? எனது துணைவியார் அடித்து சொல்கிறார் கனவு “கலரா“-கத்தான் வரும் என்று. எனது மகளோ கருப்பு வெள்ளை என்கிறார். உங்கள் கனவின் நிறம் என்ன? நண்பர் சர்வேசன் கவனிக்கவும். ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால், உங்கள் சர்வே ரிப்பேர்ட் இந்த ஆய்விற்கு பயன்படும்.

இப்படத்தில் நான் புரிந்து கொண்டது இதுதான். சொர்க்கத்தில் மதுவும் கூரிய கண்களுடைய (ஈருல்-ஹைன்) பெண்களும், எண்ணற்ற பெண்களை அனுபவிப்பதற்கான கட்டற்ற ஆற்றலும் உண்டு என்பதாக சொர்க்கம் பற்றிய ஒரு மிகப்பெரிய புனைவு இஸ்லாத்தில் உள்ளது. (பெண்ணுக்கு எண்ணற்ற ஆண்கள் சொர்க்கத்தில் உண்டா? என்கிற இஸ்லாமிய பெண்ணியலாளரின் பாத்திமா மொ்னஸியின் கேள்வி ஒன்று உள்ளது.) பரவலாக இந்த “உன்னதம்” பற்றிய புனைவு எல்லா மத சொர்க்கங்களிலும் உண்டு. (அப்பறம் இங்குள்ள மணைவியே அங்கேயும் என்றால் அது சொர்க்கமா? இது குறித்து நண்பர் கோவியார் மற்றும் ரத்ணேஷ் கருத்து அறிய ஆவல். :-D) இங்கு உள்ள பிரச்சனை இங்கு அதனை அனுபவிக்காதவனுக்கு சொர்க்கத்தில் அது கிடைப்பதன் மூலம் அதனை எப்படி அனுபவமாக உணரமுடியும் என்பதுதான். இதனை நிறத்தின் மூலம் விளக்க முயல்கிறது இப்படம். ஒரு கண்பார்வையற்றவனுக்கு வண்ணமயமான சொர்க்கம் என்ன அர்த்தத்தை அல்லது அழகை தரமுடியும். (கண் பார்வையற்றவர்களுக்கு நிறம் தெரியுமா? என்பதை நண்பர் வவ்வால்தான் சொல்லவேண்டும்.) இதில் நிறம் என்பது ஒரு குறியீடு. அது அடைய முடியாததின் குறியீடு. இச்சமூகத்தில் வறுமை என்பது நிறம் உணர முடியாதவாறு ஒரு மக்கள் கூட்டத்தை பிறதொரு மக்கள் கூட்டம் வைத்திருக்கும் ஒரு குருட்டு நிலைதான். ஒருவன் கண்பார்வையற்றவனாக இருப்பதற்கு கடவுளை காரணம் காட்டலாம். ஆனால் ஏழையாக இருப்பதற்கு இந்த சமூக அமைப்பே காரணம். இந்த இரண்டும் பயனிக்கும் ஒரு தளம்தான் காட்சிகளாக விரிகிறது படத்தில் முகமதும் அவனது தந்தையுமாக. கடவுளுக்கு பிரியமான நெருக்கமான கண்பார்வையற்றவனைக்கூட இந்த லெளகீக உலகில் வைத்துக் கொள்ள அவனது தந்தைக்கு பொருளாதாரம் தேவைப்படுகிறது. ஒருவன் இறைவனால் பார்வை பறிக்கப்பட்டவன் மற்றவனோ புதிய கடவுளான பணமில்லாததால் குருடாக்கப்பட்டவன். இருவருக்குமே சொர்க்கம் என்பது நிறமற்றதுதான். இவ்வுலகில் குருடாக இருத்தல் என்பது மதங்களின் அறங்களைப் பின்பற்றிச் செல்வதுதான். இந்த அறங்களை பின்பற்றியவன் சுவர்க்கத்தில் தரப்படும் கட்டற்ற திறந்த உலகில் எதை அனுபிவிக்க முடியும் என்பதுதான் இப்படம் எழுப்பும் கேள்வி. இப்படத்தில் அருவியல் தவறி விழுந்துவிடும் மகனை காப்பாற்ற முடியாமை என்பது ஒருவகையில் கடவுளுக்கு தரப்படும் பலிச்சடங்குதான். அம்மகனின் இறப்பை நிகழ்த்துவது அவனது உள்மன வேட்கையே.


சுவர்க்கம் பற்றி மற்றொரு கேள்வியுடன் வந்த இவரது முந்தைய படமான ”சில்ரன்ஸ் ஆப் ஹெவன்” (நண்பர் நிவேதாவின் பதிவு இங்கு) படத்தில் உலகமயமாதல், நுகர்வு வெறி மற்றும் வெற்றி்க்கொள்ளும் வேட்கை என்கிற நுட்பமான அரசியல் விமர்சனங்கள் உண்டு. அது வெற்றி என்பது என்ன? மனிதcoh05_300dpi குலத்தின் வெற்றி குறித்து வெறியை வேட்கையை நுட்பமாக விமர்சிக்கும் அப்படம் தனது தளத்தை உலகமயமாக்கல் வரை விரித்து சொல்லக்கூடிய அரசிலைக் கொண்டிருக்கிறது. போட்டி என்றால் என்ன? போட்டி எப்படி பார்வையாளனை சார்பு நிலை எடுத்து ஆட்ட விதிகளுக்குள் இழுத்து விடுகிறது என்கிற பலவற்றைப் பேசிய படம். விளையாட்டின் விதி வெற்றிக்கான உந்துதலே தவிர வெற்றியடைந்தே தீர்வேன் என்கிற வெறி அல்ல. காரணம் வெற்றி என்பது ஏற்படுத்தும் மகிழ்வு என்பது மதிப்பு மிக்கதாக கட்டமைக்கப்பட்ட சமூக விதியால் வருவதே.

இப்படத்தில் தனது தங்கை ஷீ-வை தொலைத்துவிட்ட ஒரு அண்ணன் அவளுக்கு ஷீ வாங்கித் தருவதற்காக ஒரு ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வான். அப்போட்டியல் அவன் கலந்துகொள்ள காரணமே அதில் இரண்டாவது பரிசாக உள்ள ஷீ தான். கடுமையான பயிற்சிக்குப் பிறகு அப்போட்டியல் ஓடும்போது மிகவும் சுயகட்டுப்பாட்டுன் முதலாவதாக வரக்கூடாது என்பதற்காகவும் இரண்டாவதாக வருவதற்காகவும் தனது ஒட்டத்தை கட்டுப்படுத்தி ஓடுவான். அவன் ஒவ்வொருமுறை பின் தங்கும்போதும் அவனது தங்கையின் முகம் நினைவில் வர ஓடுவான். இறுதியில் அவன் பின் தங்கிவிடும் நிலையில் அவனது பள்ளியைச் செர்ந்தவர்களின் ஆர்ப்பாட்டம் அவனையும் தொற்றிக்கொண்டு தன்னையறியாமல் முதலில் ஓடிவந்து மயங்கிவிடுவான். . மயக்கமடைந்த அவன் விழித்தவுடன் முதலில் கேட்பது தான் இரண்டாவதுதானே என்பதுதான். அவன் முதலாவதாக வந்ததற்கு பாராட்டுகள் நடக்கும்.coh03_300dpi அவனைத் தூக்கி கொண்டாடுவார்கள். அவன் முதலாதாக வந்ததையே வெறுத்து அந்த வெற்றி அவனுக்கு அர்த்தமற்றதாகி தங்கையிடம் மன்னிப்பு கேட்பான். அவளும் ஷீ இல்லாமல் வெற்றிக்கோப்பையுடன் வந்த அவனை முகச்சுழிப்புடன் பார்த்துவிட்டு அகலுவால். கால்களின் கொப்பளங்களின் வலி ஷீ கிடைக்காத வேதனை குணிந்த தலையுடன் அவனை இப்படி உட்கார வைத்தவிட்டதுடன் முடியும்படம் திரையைவிட்டு நமது அக உலகிற்குள் ஓடத்துவங்கிவிடுகிறது. (இறுதிக் காட்சியில் அவர்களது தந்தை குழந்தைகளுக்கு ஷீ வாங்கி வருவது என்பார்வையில் அதிகப்படியான ஒரு காட்சியே.) இதுதான் குழந்தைகளின் சுவர்க்கம். இந்த உலகில் கிடைக்காத சொர்க்கம் வேறு உலகில் கிடைப்பதால் பயன் என்ன? இதில் அவனது வெற்றி மறுஉலகிற்கான குறியீட்டைக் கொண்டுவிடுகிறது. இங்கு வறுமை உனக்கு, கடவுளிடமோ சொர்க்கம் என்கிற விதிவாதம் இங்கு கேள்விக் குறியாகிறது. “ஏழைகளின் சிரிப்பில் இறைவன்“ என்கிற ஏமாற்று வேலைதான் அவனுக்கு கிடைத்த வெற்றி என்பது. அவனுக்கு தேவை வெற்றியல்ல வாழ்க்கை. தனது தங்கையுடன் கூடிக்களிப்பதற்கான வாழ்க்கை. அதை அந்த போட்டி தரவில்லை. உலகம் மகிழ அவனுக்க கிடைத்தது வெற்றிவீரன் என்கிற பட்டம். அது சொர்க்கமல்ல அந்த குழந்தைகளுக்கு.

இதுதான் உண்மையான விளையாட்டு. இப்படம் இன்றைய அனைத்த வெற்றி, வெறி, ஏன் போர், தன்முனைப்பு அத்தனையும் கேள்விக்குட்படுத்தம் ஒரு படம். இங்கு வெற்றி என்பதை எப்படி அளவிடுவது? தனக்கு மகிழ்வை தராத வெற்றியின் பொருள் என்ன? இக்கேள்வியை நாம் இன்று நட்சத்திர விளையாட்டாக தொலைக்காட்சிகள் மற்றும் ஊடக உலகத்தால் மாற்றப்பட்டுள்ள கிரிக்கெட்டை முன்வைத்து கேட்பது அவசியமான ஒரு அரசியல் நடவடிக்கை ஆகும். 50 டாலர் தினப்படியில் கவாஸ்கர் காலத்தில் விளையாடப்பட்டுக் கொண்டிருந்த கிரிக்கெட், இன்று டெண்டல்கர் காலத்தில் மில்லியன் கணக்கில் வருமானம் உள்ள ஒன்றாக மாறியுள்ளதற்கு யார் காரணம்? கிரிகெட்டில் கிடைக்கும் வெற்றி என்பது எது? அது யாருக்கு சாதகாமானது? அதில் யார் பயனடைகிறார்கள்? அதுதரும் மகழ்வின் எச்சமாக நமது மன அமைப்பில் கட்டப்படும் அரசியல் எது? என்பதும் இதனுடன் தொடர்புடைய கேள்விகள்தான்.

-ஜமாலன். (20-03-2008)

குறிப்பு- இப்பதிவில் நண்பர்களின் பெயர்கள் நட்படிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

11 Comments:

கோவி.கண்ணன் said...

//(அப்பறம் இங்குள்ள மணைவியே அங்கேயும் என்றால் அது சொர்க்கமா? இது குறித்து நண்பர் கோவியார் மற்றும் ரத்ணேஷ் கருத்து அறிய ஆவல். :-D) //

ஐயையோ,

நான் எதையாவது சொல்ல, அப்பறம் மனைவிக்கு விசயம் தெரிந்தால், மானிடப்பிறவியே நரகம் ஆகிடும். இந்த விசயத்தில் நான் கோழை !
:)

ரத்னேஷ் தைரியமாக கருத்து சொல்வாரா பார்ப்போம்.

ஜமாலன் said...

வாங்க கோவியாரே நன்றி.

வீரம் என்பது கோழையில்லாதைப்போல நடிப்பது என்பதால். கோழை என்பதை உங்களது வெளிப்படையாக வீரமாக கருதுகிறேன்.
:)

கையேடு said...

வணக்கம் திரு. ஜமாலன்,


"children of heaven" திரைப்படம் குறித்தான விமர்சனம் மிகவும் பாதித்தது.

கனவு: இது குறித்து அதிகமாக புரிதலில்லாதபோதும் எதையாவது சொல்லித்தான் ஆகவேண்டுமா என்று தோன்றினாலும், வாசித்ததைப் பகிர்ந்துகொள்கிறேன். பல நேரங்களில் கனவினைத் தொடர்ந்த விழிப்புநிலையை நோக்கிய நகர்வு கனவாகப் பாவிக்கப்பட்டுவிடுகிறது என்கின்றனர். ஒரு சிலர் கனவு என்பதே தாம் என்ன கனவு கண்டோம் என்பதை விழித்துக்கொண்டவுடன் நினைவிலிருக்கக்கூடாது என்றும் கூறுகின்றனர்.

கனவில் நிறங்கள் சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன், சாத்தியம் இல்லையென்றால் நிறங்கள் குறித்து ஒருவரின் கனவில் என்ன வரும்?

பிறவியிலேயே கண்பார்வையற்றவர்களின் கனவுகளில் ஒலி மட்டுமே கேட்கும்(கேட்கும் சக்தி உடையவராயிருந்தால்).

கண்பார்வை - இது டார்வினையே குழப்பிய அல்லது முழுவதுமாகப் புரிந்து கொள்ளப்படாத ஒன்றாக வைத்த சிக்கல். மனித விலங்கிற்கு மட்டுமே இவ்வளவு வகையான நிறங்களைப் பிரித்தறியச் சாத்தியப்பட்டிருக்கிறது. அப்படியானால் பொருட்களுக்கான நிறத்தைக் கொடுப்பது பொருளா நமது கண்களா? எதற்கெடுத்தாலும் பரிணாமத்திலேயே விடை தேடுவது என்பது ஒரு வியாதி போல் ஆகிவிட்டது. மன்னிக்கவும்..

பார்வை குறித்து திரு. வவ்வால் அவர்களின் சுவாரஸ்யமான பதில் என்னவாக இருக்கும் என்று பார்க்க ஆவலாயிருக்கிறேன்.

ஜமாலன் said...

வாங்க கையேடு..

கனவு பற்றிய உங்கள் விளக்த்திற்கு நன்றி. அத குறித்த சில உளவியல் விளக்கங்கள் உள்ளது. அது குறித்து பின்னர் விரிவாக பேசலாம்.

நிறம் என்பது என்ன? என்பது குறித்து விரிவாக இப்பதிவிலேயே பேச ஆசைதான், பதிவு நீ்ண்டு கொண்டே போவதால் அதனை எழுதவில்லை. உங்களுக்கு தெரியும் நிறத்தின் அறிவியல் என்பது. நிறம் என்கிற ஒன்று ஒளியின் நிறமாலை உறிஞ்சலில், எஞ்சி வெளிப்படும் ஒன்று. நிறம் என்கிற ஒன்று பொருளில் இல்லை. நமது பார்வையிலும் இல்லை. பொருளை துலக்கப்படுத்தும் ஒளியில்தான் உள்ளது.

புற ஒளி அற்ற நிலையில் நமது பார்வையும் இல்லை. எனவே, ஒளியின் பொரட்கள் மீதான விளைவுதான் நிறம் என்பது. இது தத்துவ கோட்பாடுகளுடன் இணையாக பேசக்கூடிய ஒரு கருத்து. நிற்க. விஞ்ஞானம் படித்துள்ள உஙகளுக்கு இது என்னைவிட கூடுதலாகத் தெரியும்.

நன்றி.

TBCD said...

இது எச்சரிக்கை மாதிரி தெரியல்ல..வேறு யாருக்கோ, தானிக்கு முகவரியும், முன் பணமும் கொடுக்கிறாப்ல இருக்கு.. :)

//
(சமீபத்தில் மாலை மாற்றிக்கொண்ட நம்நாட்டு பட்டத்து ராணிகளை போட்டு இதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.:-D குறிப்பாக நண்பர் டிபிசீடிக்கு இந்த எச்சரிக்கை)
//

கனவுகளுக்கு உண்மையில் நிறம் இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் எண்ணம்.. கண்ணை மூடிக் கொள்ளச் சொல்லிவிட்டு அப்போது நான் உங்களள கையயைத் தொட்டால்.. தொடூணர்வு இருக்கும்..

தொட்டது நான் என்றுத் தெரியும்..
ஆனால்..என் உருவம் தெரியாது..
ஏன்னா கண் மூடியிருக்கும்.
அதுப் போல் தான் கணவும்..மணக்கண்ணுக்கு உருவம் கொடுக்கத் தெரியாது.

நீங்க பதிவில் கண்பார்வையற்ற நிலைக்குத் தானே அனைவரும் போக வேண்டும், கண்களை மூடிவிட்டப் பின்..என்ன, நமக்கு முன்னரே பார்த்த விசயங்கள் என்பதால், அது திரைப்படம் போல் ஓடும் என்றுத் தோனுகிறது..

பார்வையற்றவர்களுக்கு கனவு வருதே..அதெப்படி.. :)

கனவு என்பது ஒரு உணர்வாகத் தான் இருக்க முடியும்..
*****
கல்லூரி திரை விமர்சனம் என் நினைவுக்கு வந்தது..

// வாழ்க்கையை அப்படியே காட்டுவது கலையாகிவிடாது. வாழ்க்கையின் நுட்பமான கட்டமைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவதும் அதனை கட்டுடைப்பதுமே தற்போதைய கலையின் முக்கிய பணியாக உள்ளது.//

கையேடு said...

வணக்கம் திரு.ஜமாலன்.

சில விடைகள் கிடைத்தன. அதனால் பகிர்ந்து கொள்ளலாமென்று மீண்டும் வந்தேன்.

1.கனவின் நினைவு - கனவு காண்பவர் எந்த நிலையில் விழிக்கிறார் என்பது பொருத்து அவருக்கு கனவின் நினைவுகள் இருக்கின்றன. உதாரணமாகக் கனவுடன் கண்களின் இயக்கம் பெரிதும் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவர் கனவு காணும்போது அவரது விழிகளில் அசைவுகள் இருப்பது அறியப்பட்டிருக்கிறது. இதனை REM studies (Rapid Eye Movement) என்று அழைக்கின்றனர். இப்படியான அசைவுகளின் போது எழுப்பினால் அவர்களுக்கு கனவு நினைவிலிருப்பதும், அவ்வசைவுகள் முடிவுற்றபின் சிறிது நேரம் கழித்து எழுப்பினால் அவர்களுக்கு அது நினைவிலில்லாமல் போவதும் அறியப்பட்டிருக்கிறது. ஆனால், இவ்விழிகளின் அசைவிற்கும் கனவில் தோன்றும் பிம்பங்களின் அசைவிற்கும் தொடர்பிருப்பதாகக் கருதப்பட்டது, பின்னர், அது தவறு என நிருபிக்கப்பட்டுள்ளது.

2.கனவில் நிறம் - கனவு குறித்த ஆராய்ச்சிகள் 1930-40 காலங்களில் மிகவும் அதிகமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், அக்காலகட்டங்களில் வண்ணப்படங்களும், திரைப்படங்களும் அதிகமாகப் புழக்கத்திலில்லாததால் பெறும்பாலும் கனவுகள் கறுப்பு-வெள்ளை என்ற முடிவுகளையே அளித்ததாகக் கூறுகின்றனர். 1942 ல் 10% முடிவுகள் கனவின் வண்ணங்கள் சாத்தியம் என்றும், 1952- வரை அது 9% முடிவுகல் மட்டுமே கனவின் வண்ணங்கள் சாத்தியம் என்றும் அறியப்பட்டுள்ளன. 1950 ஆம் ஆண்டிலிருந்து முழுநீள வண்ணத் திரைப்படங்கள், மற்றும் வண்ணப் புகைப்படங்கள் ஆகியவை அதீத புழக்கத்திற்கு வந்த பின்னர் இது அதிகரித்திருக்கக் கூடும் என்று அனுமானிக்கின்றனர். 1962- ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வில் 83% முடிவுகள் கனவில் வண்ணங்கள் சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கின்றன. ஆனால், இது மக்களின் கனவு குறித்தான perceptionல் ஏற்பட்ட மாற்றமேயன்றி கனவு எப்போதும் கருப்பு-வெள்ளையாகவேதான் இருந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லையென்று குறிப்பிடுகின்றனர்.

3.தங்களுடைய ஒளிச்சிதறல் குறித்த கருத்தில் முழுவதும் உடன்படுகிறேன்.

//அத குறித்த சில உளவியல் விளக்கங்கள் உள்ளது. அது குறித்து பின்னர் விரிவாக பேசலாம்.//

இது குறித்த உங்கள் கட்டுரையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

நெடிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

SBTVD said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the SBTVD, I hope you enjoy. The address is http://sbtvd.blogspot.com. A hug.http://sbtvd.blogspot.com/

Multifuncional said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Impressora e Multifuncional, I hope you enjoy. The address is http://impressora-multifuncional.blogspot.com. A hug.

ஜமாலன் said...

TBCD said...

//இது எச்சரிக்கை மாதிரி தெரியல்ல..வேறு யாருக்கோ, தானிக்கு முகவரியும், முன் பணமும் கொடுக்கிறாப்ல இருக்கு.. :)//

நண்பரே இதல்லாம் புரிஞ்சி தானி எடுத்துவருவதற்கு அவர்கள் என்ன டிபிசடியா....:)))

//பார்வையற்றவர்களுக்கு கனவு வருதே..அதெப்படி.. :)

கனவு என்பது ஒரு உணர்வாகத் தான் இருக்க முடியும்..//

கனவு குறித்து உங்கள் கருத்தக்கள் பரிசீலிக்கப்படும். அது ஒரு உண்ர்வுதான். அது ஒரு கதைகூறல்போன்று கண்டபின் வின்க்குவதில்தான் உள்ளது. நன்றி.

//கல்லூரி திரை விமர்சனம் என் நினைவுக்கு வந்தது..//

நன்றி. பல நண்பர்கள் அந்தவகை விமர்சனத்தை என்னிடம் எதிர்பார்க்கவில்லை என்று கூறும்போது நிங்கள் ஒருவர் மட்டுமாவது அதை பாராட்டியுள்ளீர்கள். நன்றி.

ஜமாலன் said...

கையேடு said...

//வணக்கம் திரு.ஜமாலன்.//

நண்பரே.. திரு. என்றல்லாம் விளிக்க வேண்டியதில்லை. சாதரணமாகவே பயன்படுத்தலாம்.

//சில விடைகள் கிடைத்தன. அதனால் பகிர்ந்து கொள்ளலாமென்று மீண்டும் வந்தேன்.//

நன்றி. இதற்கெல்லாம் அனுமதி தேவையில்லை. விளக்கம் கிடைக்கும்வரை வாருங்கள். வாய்ப்பிருந்தால் தனிப்பதிவாகவொ தொடராகவோ போடுங்கள்.

நீங்கள் கூறும் REM பற்றி தூக்கம் பற்றிய ஒரு விஞ்ஞானக்கட்டுரையில் படித்துள்ளேன். உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது.

கனவின் நிறம் குறித்த எனது அனுபவம்கூட நிறத்தடன் உறவுடையதுதான். இதில் ஒரு முக்கியமான குறிப்பை தருகிறீர்கள். அது நிறம் பற்றிய மன்அனமானம் அல்லது அனுபவம் இல்லாமல் சாத்தியமில்ல என்பது.

//இது மக்களின் கனவு குறித்தான perceptionல் ஏற்பட்ட மாற்றமேயன்றி கனவு எப்போதும் கருப்பு-வெள்ளையாகவேதான் இருந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லையென்று குறிப்பிடுகின்றனர்.//

இது ஒரு முக்கியமான கருத்தாக்கம்.

//3.தங்களுடைய ஒளிச்சிதறல் குறித்த கருத்தில் முழுவதும் உடன்படுகிறேன்.

//அத குறித்த சில உளவியல் விளக்கங்கள் உள்ளது. அது குறித்து பின்னர் விரிவாக பேசலாம்.//

இது குறித்த உங்கள் கட்டுரையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.//

நன்றி. முயற்சிக்கிறேன். நீங்கள் கூறழய பர்சப்ஷன் பற்றியதும் அந்த உளவியல் விளக்கங்களில் ஒன்றுதான்.
தொடரலாம் இந்த உரையாடலை நமது விஞ்ஞானப் பதிவாக..

//நெடிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்//

இன்னும் பெரிதாக உங்களிடம் எதிர்பார்த்தேன். தனிப்பதிவாக போடலாம் என்று ஒர உரையாடலாக.. இதற்கெல்லாம் மன்னிப்பு தேவையில்லை. பெரிதாக இருப்பது மகிழ்ச்சியே...

ரவிசங்கர் said...

the color of paradise, baran, children of heaven திரைப்படங்களை இங்கு பெறலாம்.