இடமாற்றம் அல்லது நன்றி அறிவிப்பு

வலைப்பதிவுலக நண்பர்களுக்கு...

"இடமாற்றம்" என்கிற தலைப்பில் 11-ஆம்வகுப்பில் "நீ மலர்/நான் செடி/ஏனென்றால்/இடம் மாறுவது/நீ தானே" - என்று வகுப்பு பெண்ணை மனதில் வைத்து ஒரு கவிதை எழுதி அதை நாங்களே அச்சடித்த பத்திரிக்கையில் போட்டு இறகு முளைத்த குதிரையில் ஏறி கவிஞர்களை எல்லாம் ஏளனமாகப் பார்த்து உலகை ஒரு சுற்று சுற்றி தட்டாமலை ஆடிய தலைப்பு இது. முதல்காதல் முதல்கடிதம் முதல்மணைவி முதல்தாய் முதல்அப்பா முதல்அண்ணன் முதல்முத்தம் முதல்ஜீரம் இப்படி பல முதல் (சினமாக் கவிஞர்களுக்குத்தான் தெரியும் மற்ற முதல் எல்லாம்) போல இதுவும் ஒரு முதல்கவிதை... வார்த்தை மாம்சமானது அதனால் அதனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன் இங்கு.

ஒருவாரம் தமிழ்மணத்தின் 'பால்கனி'யில் (பால்கனி பாப்பா என்றெல்லாம் அரசியல் எல்லாம் பேசமாட்டேன்) நின்று கொண்டு எனது முதல் அறிமுகத்தில் குறிப்பிட்டது போல நடத்திய ஜீகல்-பந்தி அல்லது கதம்பக் கச்சேரி இன்றுடன் முடிவடைகிறது. அதற்கு முதலில் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி.

இந்த ஒருவாரத்தில் உற்சாகப்படுத்திய நண்பர்கள், புதிதாக வந்து பின்னொட்டமிட்டு வாழ்த்திய, படித்து விமர்சித்த நண்பர்கள், எட்டிப்பார்த்துவிட்டு நேரத்தை வீணாக்காமல் திரும்பி போனவர்கள், படித்தவிட்டு 'என்னத்த எழுத' என்று பின்னோட்டமிடாமல் போனவர்கள், மின்அஞ்சலில் வாழ்த்து சொல்லிய நண்பர்கள் என எல்லோருக்கும் என் நன்றிகள்.

இந்த ஒரு வாரக்காலத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. குஜராத்தில் முஸ்லி்ம்களுக்கு எதிராக நடந்த கோத்ரா கலவரம் ஒரு இனசுத்தீகரிப்பு படுகொலைகள் என அம்பலமாக்கியிருக்கிறது தெஹல்கா. வழக்கம்போல் தமிழகம் இரண்டு வார்ததைகளை மட்டும் திருத்திவிட்டு அமைதியாகி விட்டது "தீபாவளி ரிலீஸ் என்ன?" என்று. ஒன்று 'நடந்த' என்பதை 'நடத்திய' மற்றொன்று 'கலவரம்' என்பதை 'திட்டமிட்ட படுகொலை' என்பதாக. இவ்விரு வார்த்தைகளை திருத்த தெஹல்கா பத்திரிக்கை கடுமையாக ஆறு மாதங்கள் உழைத்திருப்பது அப்படியே மெளனத்தில் காற்றில் பறந்து கலந்து விட்டது. இதற்கான கண்டணத்தை தோழர் கார்கியின் மீள்பதிவு வழியாக முன்வைத்திருக்கிறேன்.

மற்றொன்று ஈழத்தில் அதிகரிக்கும் இனப்படுகொலைகள். உலக நாகரீகம் வெட்கித் தலைகுனியும் இந்த பாசிச கொடூரத்தை பதிவு மூலமாக கண்டித்திருக்கிறேன். இவை இரண்டைத் தவிர மருத்தவர் புகழேந்தியை அறிமுகப்படுத்தி எனது செயல்பாடுகள் பற்றிய குற்ற உணர்வை சமப்படுத்த முயன்றேன். அதை ஒட்டி வந்த டாக்டர் புருணோவின் அமெரிக்க மருத்துவ சோதணையை அம்பலப்படுத்த பயன்படுத்திக் கொண்டேன். நண்பர் ராமாநுஜத்தின் 'காந்தியின் உடலரசியல்" என்கிற ஒரு நல்ல நூலை அறிமுகப் படுத்தினேன். இவற்றைத் தவிர மற்றெல்லாம் வழக்கம்போல் சுய புலம்பல்கள் அல்லது பொதுப் புலம்பல்கள்தான்.

நாளைமுதல் உங்களுடன் நானும் தமிழ்மணத்தின் உள்கட்டிற்கு இடம்பெயர்கிறேன் புதிதாக வரும் நட்சத்திரத்தை வாழ்த்தி. இனி உள்கட்டில் அலையும்போது உங்களை எதிர்கொண்டு கைகுலுக்கலாம் அல்லது மோதி கீழே விழலாம்.

எனது ஜமாலன் என்கிற புனைபெயருக்கு காரணமான வலைப்பதிவின் முன்னொடியான மாலன் மின் அஞ்சலில் வாழ்த்தினார். ஆணந்த விகடனில் பணியாற்றும் அருள் எழிலனும் மின் அஞ்சலில் வாழ்த்தினார். இருவருக்கும் நன்றிகள்.

நண்பர்களின் எதிர்பார்ப்பை ஓரளவாவது பூர்த்தி செய்திருப்பேன்.. இல்லாவிட்டாலும் உங்களை விடுவதாகவும் இல்லை.

நகுலன் கவிதைப்போல...
யாரது ராமச்சந்திரனா என்றேன்..
ஆம் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கெட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்ல
.

- இனி ராமச்சந்திரன்போலத்தான் நமது அடையாளங்கள் முட்டி மோதி அலைவதைத்தவிர..

மீண்டும் ஒருமுறை அனைவருக்கம் நன்றி கூறி விக்ரமாதித்யன் கவிதையுடன் முடிக்கிறேன்.

வித்தியாசம் அதிகமில்லை
நான் கவிதை எழுதுகிறேன்
என் மகன் தீப்பெட்டி படம் சேகரிக்கிறான்.

அவ்வளவுதான்....
அன்புடன்
ஜமாலன்.

யாழ்நகரமும் தமிழனின் தினவாழ்வும்.

ஈழப்போரில் தமிழர்களை கொண்று குவித்து உடல்களை ஏற்றிச் செல்லும் மிகக் கொடுமையான பாசிசத்தை வெளிப்படுத்தும் சிங்கள பேரிணவாத அரசு 1996-ல் ஈழமக்களை வெளியேற்றியபோது எழுதப்பட்டு காலக்குறியில் வெளியிடப்பட்டது. நகலச்சாக காலக்குறி மிகக் குறுகிய வட்டத்தை மட்டுமே அன்று கொண்டிருந்ததால். இங்கு அதனை தற்சமயம் வெளிப்படும் சிங்களப் பேரிணவாத அரசின் பாசிசப் படுகொலைகளைக் கண்டித்து மீள்பதிவடுகிறேன்.

யாழ்நகரமும் தமிழனின் தினவாழ்வும்.

தினவாழ்வு என்கிற மலங்கழிக்கும் வேலைகளுக்கு மத்தியில் தமிழக மக்கள் யாழ்நகரில் நடைபெறும் போரைக் கண்டித்து ஒருநாள் முழுகதவடைப்பு (1996-ல் செய்தது. இன்று கண்டன அறிக்ககைள்கூட வெளிப்படவில்லை.) நடத்தியிருக்கிறார்கள். பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். நம் 'தமிழ்ழ்த்த்த.... தலைவர்கள் தங்களது ஆட்சிபீட அபிலாஷைக்கு ஏற்ப 'காய்தல், உவத்தல் இன்றி...' ஒன்றுகூடி வடம் பிடித்திருப்பது பெரிய விஷயம்தான். இப்படி சில அதிசயங்கள் எப்பொழுதேனும் நிகழ்ந்துதான் தொலைத்து விடுகிறது. மனத்துணிவை இழக்கச் செய்யும் இப்போரும்கூட ஒருநாள் மறதி எனும் போதையில் ஆழ்த்தப்பட்டுவிடும். ஆனால், குழந்தைகளை தங்கள் மார்புகளிலும், தோளிலும், வயிற்றிலும் சுமந்தபடி நகரைவிட்டு வெளியேறும் எண்ணற்ற ஈழத்தமிழ் மக்களுக்குள் ஒரு கொடுங்கனவாய், நினைவாய் காலமெல்லாம் உள்ளுக்குள் இறங்கி வன்முறையில் ஆழ்த்தப் போகும் துயருக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? மனிதன் இழப்பதற்கு தன் உடல்களைத்தவிர ஏதுமற்றவனாக ஆக்கப்பட்டுவிட்ட இந்த கொடூரம் நமக்குள் மெளனமாய் உறைந்துபோனது எப்படி? எதன் பொருட்டு மனிதர்கள் அழிக்கப்பட்டாலும் அதன் மீது காறி உமிழும் துணிச்சல் அற்றுப் போனது ஏன்? சுத்த ஆரிய இரத்த வெறியன் ஹிட்லரால் அன்று ஜொமனியல் யூதர்கள் விஷ வாயுவிற்கு பலியாக்கப்பட்டதை, ஏதுமறியாத, இன்னும் பிறக்கக்கூட இல்லாத ஜப்பானிய எதிர்கால சந்ததியினரை அமேரிக்க ஆணு ஆயுதம் தாக்கி அழித்ததை போரின் வெற்றியாக கண்டுகளித்த நம் சுரணையற்றத்தனம், இன்று மனிதர்களை மனநோயாளிகளாக ஆக்கும் போரின் கொலைவெறி மூர்க்கமாக வளர்ந்து நம்மை அழிக்கத் துவங்கி உள்ளது. இதனை அன்றே அடியோடு துடைத்தழிக்க முடியாமல் போனது ஏன்? அணு ஆயுதங்களாலும், உயிர்பறிக்கும் கொலைவெறி தொழில்நுட்பங்களாலும் அளவிடப்படும் நாகரீகமும், அறிவும், வளர்சியும் நமக்கு தேவையா? யாழ் மட்டுமல்ல இன்னும் பல நகர்கள் வரலாற்றின் கோர நாடகத்தில் அழிந்தும், அழிக்கப்பட்டும் வருகின்றன. இதனை எதிர்க்கும் உணர்வற்று இருப்பது எதனால்? கடைசியில் மதங்களாலும், அரசியலாலும், அதிகார வெறியாலும் பாதுகாப்பற்றவனாக தனியனாக ஆக்கப்பட்டிருப்பது ஏன்? மனித உடலை காப்பாற்ற லாயக்கற்ற இந்த அரசுகளும், ஆட்சிகளும், வாழ்க்கை முறையும் தேவையா? எங்கிருந்து துவங்கியது இந்த அழிவு? யார் தந்த உரிமை இது? எதை நோக்கி இந்த அழிவு? மனித வளர்ச்சிக்கா? அல்லது தேசப்பற்றா? தியாகமா? மனித வளர்ச்சிக்காகவெனில், மனிதனை அழித்து மனிதனை வளாக்கும் இந்த உலகும், இதன் அறிவும், நாகரீகமும் தேவையா?

உலக மக்கள் அனைவரையும் சிக்கவைக்கப்பட்டுள்ள இந்த பொறியில் இருந்து தப்ப, ஏகாதிபத்திய சதிவலையை அறுத்தெறியப்போகிறோமா? அல்லது நாமும் ஒருநாள் ஈழத்தமிழனைப்போல, போஸனியனைப்போல, பாலஸ்தீனியனைப்போல, சோமாலியனைப்போல, ஆப்பிரிக்கனைப்போல ... அதிகாரவர்க்கத்தால் அனாதையாக ஆக்கப்படும் நாளை எதிர்நோக்கி உள்ளோமா? ஒரு ஆப்பிரிக்கன் ஒடுக்கப்பட்டபோது, ஒரு கருப்பன் இழிவுபடுத்தப்பட்டபோது, தாழ்த்தப்பட்டவன் என்று சகமனிதனுக்கு சாணிப்பால் புகட்டியபோது நாம் சாதித்த மெளனம் இன்று நம்வீட்டு கொல்லையில் சொந்த இனத்தினர் மீதான போராக வந்து நிற்கிறது. என்ன செய்யப்போகிறோம்?
போஸ்னிய முஸ்லிம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கடத்திச் செல்லப்பட்டு "Concentration Camp"-களில் செர்பிய விந்து பாய்ச்சி, செர்பிய இனவிருத்திக்காக "செட்னிக்குகளைப் பெற்றுத்தா"-வெனச் சொல்லிச் சொல்லிக் கூட்டமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, துப்பாக்கி முனையில் குழந்தைகளை பிரசவித்து, அப்பிள்ளகைளை தனியாக பிரித்து செர்பியராக வளர்த்து வரும் கொடுமைக்கு நாம்தான் மெளனசாட்சி. இன்று அது யாழ் நகரிலும், நாளை அது உலகெங்கும் நடைபெறலாம். இக்கொடுமைகள் தொடர வேண்டுமா? இவையெல்லாம் நம்மிடம் வெறும் இரக்கத்தையும், பரிவுணர்ச்சியை மட்டுமே உருவாக்கமெனில், அதிகார வர்க்கத்தைவிட மிக மோசமான வன்முறையை அம்மக்கள் மீது நாம் செலுத்துகிறோம் என்றே பொருள். அவர்களுக்கு தேவை நம் பரிவுணர்ச்சி அல்ல? நமது எதிர்ப்புணர்வு! நமது பலம்! கடைசி மனிதனாக ஆக்கப்பட்ட போதிலும், சக மனித உடலின் மீது வாஞ்சையும், காதலும் கொண்டு அதைக் காக்கத் துடிக்கும் நம் உணர்ச்சி! இவையெல்லாம் அமுக்கப்பட்டு, மெளனப்படுத்தப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு, காயடிக்கப்பட்ட ஒரு பிண உடலை சுமந்து திரிவதும், அதற்கு நாகரீகம் என்கிற அரிதாரம் பூசி அறிவு என்கிற ஆடை அணிவித்து அரசியல், ஆட்சி இன்னபிற பெயரிட்டு ஏகாதிபத்தியம் கட்டுவித்துள்ள மன அமைப்பு தரும் எச்சில் சுகத்திற்காக இன்னும் நாம் இந்த சவ உலகில் வெறும் சதைப்பிண்டமாய் சமையப்போகிறோமா? அல்லது உயிர்ப்புள்ள மனிதனாக வாழப்போகிறோமா?

என்றேனும் ஒருநாள் 'மனித வாழ்வு' அமையாதா? என்கிற ஏக்கத்துடன் எத்தனை நாள் ஏங்கித் தவிக்கப் போகிறோம்? ருவாண்டா உள்நாட்டுப் போரில் கொலைசெய்யப்பட்ட கறுப்பின உடல்களை 'புல்டோசர்' வைத்து வாரிக்கொட்டி (இன்று ஈழத்தில் லாரிகளில் குவிக்கும் தமிழரின் உடல்களைப் போல்) மூடியபோது மனித உடல்கள் வெறும் குப்பைகளாய் ஆக்கப்பட்டுவிட்ட கோரத்தை, கெள்வி எழுப்பாமல் போனதன் காரணம் என்ன? கொடுமைக்கெதிராக குரல் கொடுப்பதும் போராடுவதும் 'தீவிரவாதம்' என முத்திரைக் குத்தி நம் போராட்டத்தை செல்லாக்காசுகளாக்கி வரும் அதிகாரத்திற்கு இனயும் நாம் பணிந்துதான் போகவேண்டுமா? 'வளர்ச்சி' என்கிற பெயரால் நாகரிகம் போர்த்திய நகரத் தெருக்களில் கூக்குரலிட்டு ஊர்வலம் போவது அநாகரிகம் எனக்கூறி எலும்பும் தோலுமாய் ஆக்கப்பட்ட கிராம வயல்வெளிகளில் ஒதுக்கித் தள்ளும் 'நாகரிகத்தை' நாம் ஒதுக்குவோம். நமக்கான வாழ்வை, நமக்கான நாகரிகத்தை, நமக்கான சாலைகளை நம் இடங்களில் நாம் உருவாக்குவோம். 'இதுதான்' என உருவாக்கி நம்மீது திணிப்பதை எதிர்பதையன்றி வேறு வழியில்லை. இன்று 'வதை' கொண்டு மனித வாழ்வைக் கட்டுப்படுத்தும் உலகத்தை நாம் அமைதி கொண்டு மாற்றிட இயலாது. 'மாறிடும்' என மாறாமல் சோம்பியிருந்து கொண்டு மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் நாம் மாறினால் ஒழிய 'மாற்றம்' மாற்றமற்ற நம் உடல்களை பலிவாஙகிக் கொண்டேயிருக்கும், மாற்றம் நம் வெளிகளி்ல் ஏற்படாதவரை.

-ஜமாலன்-கான் (காலக்கறி ஜனவரி 1996)

கலைகிறது மோடி மந்திரம்

குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு ஒட்டி நடந்த கலவரமும், அந்த ரயில் எரிப்பும் திட்டமிட்ட செயல் என்பதையம் அதற்கு காரணமான சங்பரிவார் அமைப்புகளையும் பல உண்மை அறியும் குழுக்கள் துவங்கி பல அறிவுஜீவிகள், ஜனநாயகவாதிகள் வரை தொடாந்து சொல்லி வருகின்றனர். அத்தனையும் செவிடன் காதில ஊதிய சங்காக நமது அரசியல் அமைப்புகளிலும் அதன் தலைவர்களிலும் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. அடுத்து நடந்த தேர்தலில் இதையே வீரமிக்க செயலாக காட்டி முஸலிம்களை பயமுறுத்தி பெரும் வெற்றியைப் பெற்றது மோடி அரசு. இப்பொழுது தெகல்கா என்கிற நிறுவனம் சில உண்மைகளை படம்பிடித்து காட்சி ஊடகத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளது.

இணைப்பு: http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107gujrat_sec.asp


இன்றைய உலகம் காட்சி ஊடக உலகமாகிவிட்டதால் இத பெரும் அளவில் வெகுஜன தளத்தை பாதிக்கலாம். பிரச்சனை இவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்கள் இல்லை. பெரும்பாலான ஊடகங்கள் செய்தி என்ற அளவில்தான் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவையும் நாளடைவில் மற்ந்த போகலாம். அல்லது வரும் தேர்தலுக்கு முஸலிம்கள் மத்தியில் மீண்டும் மோடி பற்றிய பய உணர்வை பதற்றத்தை ஏற்படுத்தி அவை அவருக்ககு சாதகமான வாக்காக மாறலாம். ஏனென்றால் எதிர்மறை அம்சங்களின்மீது ஈர்ப்பு கொண்ட மக்கள் கூட்டம். கதாநாயகைனவிட வில்லனை நேசிக்கும் ஒரு எதிர்-செயல் மனநிலை என்பதே நமது மக்களின் கும்பல் உளவியலாக (mass psychology) உள்ளது. தனியராக இவர்கள் உளவில் வேறு. கும்பலாக மாறும்போது அல்லது பொதுவில் இணையும்போது.. ஆட்பட்டுவிடும் ஒரு கும்பல் மனப்போக்கே நிலவுகிறது. இச்சூழலில் ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகள் தீவிரமடைந்திருக்கும் இந்நிலையில் நமது மக்கள் சாதிக்கும் கள்ள மெளனம் பெரும் அயற்சியையே தருகிறது.

கொத்ரா சம்பவம் ஒரு இனசுத்திகரிப்பிற்கான செயல்திட்டம்தான். கூறியது கூற வேண்டாம் என்பதால், நமது எதிர்ப்புணர்வை பதிய வைக்க.. நண்பர் கார்கி அவர்கள் பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன். இக்கருத்தை எனது உணர்வில் என்னைவிட சிறந்த மொழிநடையி்ல் வெளியிட்ட நண்பர் கார்கியின் அனுமதியுடனும் நன்றியுடனும்.. மீளபதிவாகிறது.

மோடியின் ராமராஜ்யம்.

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது. இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும், அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது.ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.

அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன் அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.

ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்? இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.

இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில் ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!

ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம் இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும்ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம் என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.

ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

கார்கி
(கார்கியின் இணைப்பு: http://kaargipages.wordpress.com/)

பின்குறிப்பு: கட்டுரையின் அழுத்தம் (நிறம் மாறியவை) என்னுடையது. ஈழத்தில் நடைபேறும் படுகொலைகள் குறித்த கண்டனம் பிறிதொரு பதிவாக வெளியிடப்படுகிறது.

திணைக் கோட்பாடும் புது விமர்சனமுறையும்

திணைப்பற்றி எனக்கு அவ்வளவு ஆழமாக தெரியாது. அப்புறம் எதுக்கு அதபத்தி எழுத வந்த என்று கேட்காதீர்கள். சும்மா நட்சத்திரம்னா நாலும் தெரியனும்ல அல்லது அப்படி தெரிஞ்சாமாதிரி காட்டிக்குனும்ல... அதுக்குத்தான்.

தமிழை நான் முறையாக படித்தவன் இல்லை. எனது துறை வேறு (இயற்பியல்). கல்லூரிக் காலங்களில் குடந்தைக் கல்லூரியில் கவிஞனாக தேர்வு செய்யப்பட்டு மற்ற கல்லூரிகளுக்கு போட்டிக்கு கலலூரி சார்பாக அனுப்பப்பட்டிருக்கிறேன். அதெல்லாம் மேத்தா பாணி உலகை புரட்டும் நெம்புகோல் கவிதைகள்தான். தஞ்சை சரபோஜி கல்லூரிக்கு நான் நெம்பகோலுடன் போய் இறங்கி புரட்டலாம் என்று பார்ததேன். ஒரு சகா கடப்பாறையுடன் வந்து என்னை நெம்பிவிட்டான். அப்புறம் வாராவாரம் கல்லூரி தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தி்ல் எதாவது ஒரு பொருள்பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். கலாப்ரியா கவிதைகளில் கானிபலிஸ தொண்மங்கள், பிம்பங்கள் அப்படி இப்படி என்று பயமுறுத்தும் கட்டுரைகள். தமிழ்துறைத் தலைவர் படிப்பதற்கு முன்பு கட்டுரை சமர்பித்து தணிக்கை செய்தே பேச அனுமதிப்பதாகக் கூறிவிட. விடைத்துக் கொண்டு வந்துவிட்டேன். இலக்கிய சுதந்திரமா? கொக்கா?

சவுதி வந்தபிறகு தமிழை முறையாக படிக்க முயன்றேன். முதலில் மங்களகரமாக கப்ஸா (சவுதியின் தேசிய உணவு நம்ம ஊரு கப்ஸா இல்ல) சாப்பிட்டுவிட்டு துவங்கினேன் தொல்காப்பியம். அதனை குறுக்கும் மறுக்குமாக உரையாசிரியர்கள் துணையுடன் படித்து பொருள்கொள்ள முனைந்தபோது. உருவான சிந்தனைகளை ஒரு கட்டுரையாக எழுதினேன். இலக்கண நூல்களின் அரசியல், அவை எப்படி ஒரு சமூகத்தை கட்டுகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அக்கட்டுரை பல விவாதங்களுக்குள்ளானது. (நாம எழுதி நாலுபேரு பேசுலனா எப்படி?) ஏனென்றால், பல சிறு சிறு நிலங்களைத் (பன்னிரு நிலங்கள் பற்றிய குறிப்பு உள்ளது தொல்காப்பியத்தில்) தொகுத்து தொல்காப்பியம்தான் தமிழ் என்கிற அரசை, நாட்டை கட்டமைத்தது என்பதே எனது வாதம். அது போகட்டும். தொல்காப்பியம் படித்த பிறகு எனக்கு தமிழின் ஒரு தனித்தவமான விமர்சனமுறை திணைக்கோட்பாட்டில் இருப்பதையும் அதை ஏன் நவீன விமர்சனத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்கிற எண்ணமும் ஏற்பட்டது. அதற்கான முயற்சியே இவ்வெழுத்து. தமிழறியா என்போன்ற பாமரனும் புரியும் வண்ணம் இதனை எழுத முயல்கிறேன்.

எனக்கு புரிந்த வகையில், திணைக்கோட்பாடு என்பது சூழலும், அது குறித்த உணர்வுகளையும் இணைக்கும் முதல், கரு, உரிப் பொருள்களைக் கொண்ட ஒரு அர்த்தமாக்கும் அமைப்பு. முதல் பொருளான நிலம் (இடம்), காலம் (பொழுது) ஆகியவற்றிற்குள் உள்ள 'கரு' -ப்பொருள்களை மொழிக்கு 'உரி'-த்தான பொருட்களாக ஆக்கி, அதனை ஒட்டி சமூக வழக்குகளை (ஒழுக்கத்தை) உருவமைக்க முயலும் ஒன்று. அதாவது, ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கு என ஒரு குறிப்பிட்ட உணர்வுகளை (கூடல், இரங்கல் இப்படி...)யும், அவ்வுணர்வுகளுக்கான காலம், தடப்வெப்ப சூழல் ஆகியவற்றையும், அதனை வெளிப்படுத்தக்கூடிய பொருள்களையும் கொண்ட ஒரு ஆய்வுமுறை. இம்முறையில்,ஒரு குறிப்பிட்ட உணர்வுநிலைக்கு மாறான உணர்வுநிலைக்கு படைப்பின் உள்தளம் மாறுவதை, படைப்பில் எதிர்கொள்ளும் பொருளைக் கொண்டு தடம் உணரலாம். அதாவது, பிரிவைச் சொல்வதான ஒரு படைப்பின் மெல்தளம் இயங்கும்போது, ஆசிரியனின் அறிதலற்ற நிலையில், புணர்ச்சிக்கான கருப்பொருள்கள் எதிர் கொள்ளப்பட்டால், அதன் உள்தளம் (படைப்பின் நினைவிலி தளம், அதாவது ஆழ்தளம்), பாலியில் அல்லது புணர்ச்சி பற்றியதான வேட்கையில் அமைந்திருப்பதாக அதனை சுட்டலாம். இச்சூழலில், திணைக்கோட்பாட்டையே, நவீன தமிழ் நிலத்திற்குத்தக புத்தாக்கம் செய்ய வேண்டிய தேவை எழலாம். அதாவது ஐந்திணை நிலங்களைப்போல ஆறாம்திணையாக வலையும் வலைசார்ந்த இடமும் என தற்போதைய வலை உலக தமிழிற்கு விரிவுபடுத்துவதுபோல்.

ஒவ்வொரு பொருளும், நீர் முதல் நிலம் வரை, பூ முதல் மிருகம் வரை, ஒரு குறிப்பிட்ட உணர்வுநிலைக்குள் குறிநிலைப் படுத்தப்பட்டுள்ளதால், படைப்பில் எதிர்கொள்ளப்படும் பொருட்களைக் கொண்டு, படைப்பின் உள்ளார்ந்து இயங்கும் உணர்வு தளத்தை அனுகமுடியும். அல்லது, பூஃக்கோவின் ஒப்புமை அடிப்படையில். இத் திணைக் கோட்பாட்டைக் கொண்ட சமூகத்தின் அறிதல்முறை வளர்ச்சியை அறியலாம். இது தமிழின் சுயமான அறிதல்முறையை வளர்த்தெடுக்க உதவும். அல்லது இம்முறையில் படைப்பை ஆய்வு செய்து பார்க்கும்போது, படைப்பிற்குள் அகழ்ந்து, படைப்பை வேறு அர்த்தத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

தொல்காப்பியம் முன்வைக்கும் இறைச்சி என்கிற கோட்பாடு, இத்திணைக்கோட்பாட்டின் மையமான அர்த்தமாக்கும் அமைப்பாகும். அதாவது வடமொழியில் 'த்வனி' எனப்படுவதற்கு இணையான ஒரு கருத்தாகும். இறைச்சி என்பது அதாவது, ஒருவன் களவில், அதாவது காதலி்ல் ஈடுபடும்போது, பிரிதல் திணைக்குரிய கருப்பொருளை எதிர்கொண்டுவிட்டால், அவனது காதல் பிரியும் தருணம் வந்துவிட்டது என்று குறிப்பால் உணர்த்தப்படுவதாகப் பொருள் கொள்ளப்படும்.

உதாரணமாக பிரிதலின் அதாவது பாலையின் கருப்பொருள் பறவையான பருந்து. களவில் உள்ள தலைவன் பருந்தை எதிர்கொண்டாலோ அல்லது பருந்து குறித்த பேச்சோ வந்துவிட்டால் அவன் பிரிவதற்கான தருணம் வந்துவிட்டது என்று பொருள். அல்லது தோழியானவள் பருந்தை தனது பேச்சின் மூலம் தலைவனுக்கு குறிப்புணர்த்துவாள். அவன் பிரிய வேண்டிய தருணத்தை உணர்த்த. தற்சமயம் புறநானூறு, அகநானூறு கைவசம் இல்லாததால், உதாரணங்களுடன் சுட்ட இயலவில்லை. உரையில்லாத இணைய நூலகங்கள் மூலம் அதனை புரிவதும் சிரமம். (உரையுள்ள இணையச் சுட்டிகள் பதிவுலக நண்பர்கள் தநதால் நன்றாக இருக்கும்.) இந்த திணைக்கோட்பாட்டை ஒரு அட்டவணைப்படுத்தினால். நிலங்களுடன் இவை எவ்வாறு குறியீட்டு மொழில் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளமுடியும். (அட்டவணை XL Sheet-ஆக இருப்பதால் இங்கு எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. பதிவுலக நண்பர்கள் எப்படி என்று கூறினால் அதனை குறிப்புடன் தனிப்பதிவாக வெளியிடலாம். ) இது சூழலியல் குறித்த பழந்தமிழரின் அறிவை நமக்கு காட்டுவதாக இருக்கும்.

-ஜமாலன் (25-10-2007)

அஞ்சு ரூவா மருத்துவர்.... பகுதி-2

எனது முந்தைய பதிவிற்கு வந்த பின்னோட்டங்களில் டாக்டா புருணோ அவர்கள் ஒரு நீண்ட பின்னோட்டம் இட்டுள்ளார். இதில் அமேரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை எப்படி ஒரு சோதனைக்களமாக பயன்படுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு சாதகமாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். மருத்தவ துறையை கட்டுப்படுத்தம் அதிகாரம் கொண்ட ஒரு குழு "Ethical Commette" என்பது. அக்குழு அனுமதியின்றி பிற நாடுகள் எந்த சோதணைகளையும் செய்ய முடியாது. அப்படி ஒரு அறக்குழுவுடன் நடந்த விவாதத்தை இதில் சுட்டிக் காட்டியுள்ளார். அதனால் அதனை இங்கு அவரது அனுமதியுடன் மீள்பதிவு செய்கிறேன். அலோபதி மற்றும் சித்த மருத்துவ முறைகள் குறித்த விவாதம் ஒன்று நடந்தப்பட்டுள்ளது டாக்டர் புருணோவின் வலைத்தளத்தில். அதன் சுட்டிகள் இறுதியில் உள்ளன. மேலதிகமாக இது குறித்து தேடல் உள்ளவர்களுக்காக..

இனி புருணோவின் கருத்துக்கள்....

தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் கை நரம்புகளின் திறனை சோதிக்க ஒரு பரிசோதனை செய்யஅமேரிக்க மருத்துவர்கள் எண்ணினார்கள்


இதில் தப்பு ஓன்றும் இல்லை தான்

ஆனால் சோதனை என்னவென்றால் கையில் சிறு அறுவை சிகிச்சை செய்து(!!!) சில எலக்ட்ரோடுகளை பொறுத்தவேண்டுமாம் (??) அப்படி அறுவை சிகிச்சை செய்தபின் கை விரல்கள் முன்னைவிட மோசமாகவும் வாய்ப்புள்ளது.... (இதுஎப்படிஇருக்கு) முன்னேற்றமடையவும்வாய்ப்புண்டு... ஆனால்அதற்கு வாய்ப்பு கம்மி..... சுமார் 1 சதவிதம்..... அதாவது ஆயிரம் நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்தால் 10 நோயாளிகளுக்கு கை சிறிது குணமாகும், 10 நோயாளிகளுக்கு கை அப்படியே இருக்கும்.... 980 நோயாளிகளுக்கு மோசமாகும் :( :(

இதை விட கொடுமை ஒன்று உண்டு...... ஒப்பிட்டு பார்ப்பதற்கு (to compare with a physiological reflex arc) இந்த அறுவை சிகிச்சை செய்ய தொழுநோய் (மற்றும் எந்த நோயும் இல்லாத) 5 volunteers வேறு வேண்டுமாம்....... (சோதனை முடிந்தபின் கை ஹோகயா )
யார்செய்த புண்ணியமோ இது ethics committee முன் வந்தபோது நமது மருத்துவர்களில் ஒருவர் தூங்காமல் இருந்தார்....

கேட்ட கேள்விகளும், அதற்கு ஆராய்ச்சியாளர்கள் அளித்த பதில்களும்

Q கேள்வி: Why do you want to do this research in India . Why can't you do it in AmericaA பதில்: Leprosy is more prevalent in India. Leprosy is almost eradicated in Our country. So we want to do that here (சரி)

Q : Why do you want to choose the Volunteers from India. You have a lot of healthy people in your country. Isn't it ??A : Since we want to compare the results, we need to choose both the cases (தொழுநோயாளிகள்) and controls (ஆரோக்கியமானவர்கள்) from the same locality (ஆஹா !!)

Q: what will happen if a volunteer (ஆரோக்கியமானவர்) is not able to use his / her hand after your procedure (A : we are fully qualified surgeons and we have full confidence in our capability that our surgery will be a success. (எங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு)

Q: The committee clears the proposed clinical trial, but at least two of the volunteers should be from the Test Team.அதாவது ஆராய்ச்சி குழுவில் (அமேரிக்கர்களில்) இருவரிடம் அறுவை சிகிச்சை செய்தபின்னர் இந்தியர்களிடம் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது......

-----அனுமதி பெறவந்தவர் அடுத்த விமானத்தில் திரும்பி சென்றுவிட்டார் என்பதை நான் சொல்லவேண்டுமா....

Why I have written this long story is to highlight the fact
1.That there is something called as Ethical Committee
2.Clearance has to be got from that committee for Any Clinical Trial
3.The Ethical Committee was a very low key affair in those days (and they had full libertry)
4.But now, every clinical trial starts as a very high profile function, with two or three ministers or Collector / SP as the chief guest
5.They apply for clearance AFTER this grand function
6.This puts a lot of pressure on the doctor, who is potrayed as ANTI - DEVELOPMENTAL.

http://bruno.penandscale.com/2006/01/misuse-of-ayurveda.html

http://bruno.penandscale.com/2005/05/ayurvedic-side-effect.html


- டாக்டர் புருணோ.

இந்த உயிர்கொல்லி ஆயுதங்கள் அரசு அனுமதியில்லாமல் ரகசிய உளவுத்துறை முகவர்கள் மூலம் பல மூண்றாம் உலக நாடுகளில் செய்யப்பட்டுவருவதை சொல்கிற ஒரு தமிழ் படம் ஈ. இயக்குநர் ஜெகந்நாதன் சமூகப் பொறுப்புணர்வுடன் அப்படத்தை எடுத்திருந்தார். படத்தின் பிற தமிழ் சினமாவின் வியாபார உத்திகளான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களால் படம் எதிர்பார்த்த அளவில் மக்களிடம் கருத்தரீதியாக சென்றடையவில்லை.

நண்பர்கள் இதுபோன்ற மருத்தவர்களை நினைவு கூறுகிறார்கள். அனைவருக்கும் நன்றி.


இதர மருத்துவர்களிலிருந்து மருத்தவர் புகழேந்தி வேறுபடும் தளம் அவர் எதிர்த்து நிற்கும் அரசியல்தான். அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் தொழில்நுட்பத்தை தனது அஞ்சு ரூவால் எதிர்த்து நிற்கிறார் என்பதுதான்.

"அதிகாரத்தின் முன் உண்மையை மட்டும் பேசினால் போதாது. உண்மையாகவும் இருக்க வேண்டும்" என்ற பூஃக்கோவின் வாசகத்திற்கான உதாரணமாக இருப்பவர் புகழேந்தி.

அஞ்சுரூவா மருத்துவரும் அமேரிக்க ஏகாதிபத்தியமும்

சீனப்புரட்சியின்போது செயல்பட்ட வெறுங்கால் வைத்தியர்கள் போல மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட மருத்துவர் புகழேந்தி நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம். மதுரை மருத்துவக் கல்லூரியில் 'கோல்ட் மெடல்' பெற்றவர். தகுதியும் திறமையும் நிறைந்தவர். நிறைய பணம் பண்ணக்கூடிய தொழில் வாய்ப்பு இருந்தும் அணு உலையால் பாதிக்கப்படும் கல்பாக்க மக்களுக்கு சேவை செய்வதை தனது முதல் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருபவர் வெறும் 5 ரூ கட்டணத்தில். அவரது பெயரே அஞ்சுரூவா டாக்டர்தான். ஒரு சாதாரண அறையில் தங்கிக் கொண்டு தொலைபேசி வசதிகூட இல்லாமல். சென்ற வருடம் எனக்கு ஒரு மருத்துவப் பிரச்சனைக்காக அவரை பார்ப்பதற்காக தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தெரியும் அவர் அந்த வசதியைக்கூட வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார் என்று. அவர் தங்கியிருக்கும் இல்லத்திற்கு தொடர்பு கொண்டுதான் அவரைப் பிடிக்க முடியும். தற்சமயம் அலைபேசி ஏதேனும் வைத்துள்ளாரா? என்ற தெரியவில்லை. மக்கள் பணி என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் அவர். இதை எழுதும்போது குற்றஉணர்ச்சிதான் மிஞ்சுகிறது எனக்கு.

ஒருமுறை நண்பர் ஒருவரின் மகளுக்கு விஷ ஜுரம் வந்தபோது வடபழனியில் ஒரு மருத்துவமணையில் பல டெஸ்டுகள் எடுத்து கனிசமான பணத்தை பிடிங்கிவிட்டு இறதியில் இது வைரஸ் பீவர் என சில மாத்திரைகளை தந்து ஆஃப்ஷர்வேஷனில் வைத்துப் பார்க்கலாம் (மீட்டர் ஓடனும்ல) என்று ஸ்டைலாகக் கூறி பெட்டில் தங்க வைத்துள்ளனர். மருநாள்தான் மருத்தவர் புகழேந்தியை தொடர்புகொண்டு இதைக் கூறமுடிந்தது. கல்பாக்கத்திலிருந்து அவர் வந்து பார்த்துவிட்டு கூறிய செய்தி ஆச்சர்யமாக இருந்தது. "முதலில் இது வைரஸ் பீவர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரியும். அப்படி இருக்கையில் பிளட் டெஸ்ட் எடுத்து என்ன தீர்மாணிக்க போகிறார்கள். நேரடியாக சிகச்சை அளிக்காமல். இப்படித்தான் மருத்தவமணையும் ஆய்வுக்கூடமும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள்" என்று கூறினார். உடனே பெட்டை காலி செய்துவிட்டு அவர் தந்த மாத்திரைகளில் 2 நாட்களில் குணமாகிவிட்டது. டாக்டரிடம் காட்டினால் 1 வாரத்தில் குணமாகிவிடும். காட்டாவிட்டால் ஏழு நாட்களில் குணமாகிவிடும் என்பதைப்போல இருக்கிறது இது.

எனது ஒன்றுவி்ட்ட சகோதரன் ஒருவன் 10-ஆண்டுகளுக்கு முன்பு மருந்துக்கடை வைத்திருந்தான். அவன் கடைக்கு அருகே கிளினிக் வைத்துள்ள ஒரு மருத்துவருக்கும் இவனுக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டாம். எந்த நோயாளி சளி, ஜீரம் என சாதரணமாக வந்தாலும் 'என்ன இவ்வளவு வீக்கா ஆயிட்டீங்க ஒரு குளுகோஸ் போட்டுருவோம்' என உடனே டிரிப்ஸ் 2 அல்லது 3 எழுதிவிடுவாராம். ஒரு டிரிப்ஸ்க்கு 20 ரூ கமிஷனாக மருத்தவருக்கு பொய்விடுமாம். சிலவேளை அறுவை சிகிச்சைக்கான துணைப்பொருள்கள் துவங்கி டிரிப்ஸ் வரை திரும்ப பாதிவிலைக்கு இவன் கடைக்கே வந்துவிடுமாம். மருத்துவ துறையும் மருத்தவ தொழில் நுட்பமும் மர்மப்படுத்தப்பட்டிருப்பதால், மக்களிடம் கூட்டுக் கொள்ளை என்பது எழுதாக்கிளவியாய் நடந்து வருகிறது. இந்தவாரம் ஊடகங்களை கலக்கடித்துக் கொண்டிருக்கும் சீருநீரக மோசடி செய்து தொடர் மருத்தவர்கள் கைது... என்கிற பணத்திற்காக பிணம் தின்னும் மருத்துவர்கள் மத்தியில் மருத்தவர் புகழேந்தியின் பணி ஒப்பிட முடியாது உயர்ந்து நிற்கிறது.


அவர் மருத்தவ பணியோடு மட்டுமின்றி மருத்தவம் சார்ந்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார். அத்துறையில் நடைபெறும் எகாதிபத்திய சுரண்டலை அம்பலப்படுத்தவென இதுபோன்ற நூல்களை கடுமையான ஆய்விற்கு பின்பு வெளியிட்டு வருகிறார். இவரது எய்ட்ஸ் குறித்த சிறு நூல் பற்றிய அறிமுகத்தை எனது இவ்வார நட்சத்திரப் பதிவில் (பளிச்சென பத்துபேர் பார்க்க முடியும் என்பதால்) இடலாம் என்று எழுதினேன். அதற்குள் தியாகு பதிவில் அதனை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எனது பதிவைவிட அப்பதிவு முழு நூலின் சுருக்கத்தையும் தந்துள்ளது. அதனால் நூல்குறித்த கருத்தை விட்டுவிட்டேன். பதிவுலகின் வழியாக பல இடங்களுக்கும் பரப்பப்பட வேண்டிய கருத்து இந்நூலில் உள்ளது என்பதால் இப்பதிவின் சுட்டியை அறிமுகப்படுத்தவே இப்பதிவு. சுட்டி கீழே...http://thiagu1973.blogspot.com/2007/10/hiv.html


பதிவலக வாசகர்கள் அதுவும் அமேரிக்க ஐரோப்பியாவில் உள்ள நண்பர்கள் இதில் குறிப்பிட்ட நூல்களையும் அதனை ஒட்டிய ஆய்வுகளையும் பதிவிட்டால் அணு ஆயுதத்தைவிட பன் மடங்கு அழிவுத்தரக்கூடிய உயிரியல் ஆயுதங்களை அம்பலப்படுத்தலாம். இது இன்றைக்கான அவசியமான சமூகப்பணியாகும்.

மருத்துவதுறையில் நிலவும் நவீன மாயைகளில் ஒன்று. மருத்தவர் தொழிலுக்கு நேர்மையானவர் என்பது. பிற தொழில் செய்பவர்களை அவ்வளவு எளிதாக நம்ப மாட்டோம். ஆணால், மருத்துவர்கள் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். அவர்கள் நேர்மையுடன்தான் நடந்துகொள்வார்கள் என்கிற கருத்து பொதுபுத்தியில் பதிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்தவர் என்பவர்கள் மனிதரிலும் மேம்பட்டவர் என்பதான ஒரு பிம்பமும் நிலவிவருகிறது. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் நிலவும் உறவிலும் ஒரு மேல்-கீழான படிமுறை அமைப்பு நிலவிவருகிறது. ஒருவர் மருத்தவர் ஆவதற்கான செலவினங்கள் மக்களிடமிருந்து பெறப்படுகிறது என்பது வேறு. ஒரு உடலை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான முழுசுதந்திரமம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. தனது உடலை அதீத நம்பிக்கையின் விளைவாக ஒருவர் மருத்துவரிடம் ஒப்படைக்கிறார். மருத்தவமுறையும் சிகிச்சையும் மிகவும் மர்மமான ஒரு சடங்குபோல நடை பெறுகிறது. அது குறித்து யாரும் கேள்விகள் கேட்பதில்லை. அவ்வப்போது வெளிப்படும் ஒன்றிரண்டு பிரச்சனைகள் மட்டுமே பிரச்சனைக்குரியதாக உள்ளது. மருத்துவர் சொன்னார் என்றால் அதை முழுமையாக நம்பும் நிலையில்தான் இருக்கிறார்கள் மக்கள். மக்களின் அறியாமை அவர்களக்கு சாதகமாகிவிடுகிறது. இந்நிலையில் மருத்தவர்களிடமிருந்து ஒரு குரல் மக்களுக்கு சார்பாக வெளிப்பட்டிருப்பதுதான் மருத்துவர் புகழேந்தியின் தனிச்சிறப்பாகும். இவர்போன்று இருக்கும் உங்களுக்கு தெரிந்த மக்கள்நல தொண்டர்களை பதிவின்மூலம் வெளிப்டுத்துவது. நடிகை நடிகர்களின் பின்னால் வாலாட்டித் திரியும் ஊடகங்களுக்கு ஒரு மாற்றாக அமையும்.

மருத்துவர்கள் குறித்து இத்தனை மதிப்பு சமூகத்தில் இருந்தும் அவர்களது சமூக பொறுப்பும், தனிமனிதர் என்றவகையில் நிலவும் அறமும் கேள்விக்கரியதாக உள்ளது. பெண்களை வைத்து நீலப்படம் எடுக்கும் ஒரு மருத்துவர். சிறநீரகம் திருடும் மற்றொரு மருத்தவர். பிணத்தை 2 நாட்களுக்கு அவசரச் சிகிச்கைப் பிரிவில் வைத்து காசு பண்ணும் மருத்தவ மணைகள். சுகப் பிரசவங்களைக்கூட அறவை சிகிச்சையாக மாற்றி பணம் பண்ணும் மகப்பேரு மருத்துவ மணைகள். இப்படி இதனை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றின் பிண்ணனி வசதியாக வாழ்தல் பணம் சேகரித்தல் மட்டுமே ஒரே குறிக்கோள் என்பதுதான். வசதியாக வாழ்தல் என்றால் என்ன? என்பது இதன் அடிப்படையாக எழும் அடுத்தக் கேள்வி. ஆக, மருதத்துவர் என்பவர் சராசரி மனிதனின் அறிவுத் திறனிற்கும் மேம்பட்ட அறிவோ, அந்தஸ்தோ கொண்டவர் அல்ல என்பதை பொதுப்புத்தியில் பதிவுறுத்தவது அவசியம்.

நூல் பெயர்:
எய்ட்ஸ்- ஓர் உயிரியல் போர் ஆயுதம்? - மருத்துவ வீ.புகழேந்தி.

நூல் கிடைக்குமிடம்:
சூழல் பாதுகாப்பிற்கான மருத்தவர் குழு
Docters of Safer Environment
225-A, நேருர தெரு, ஜீவா நகர்
புதுப்பட்டினம், காஞ்சிபுரம் - 603102


மருத்துவத்தின் ஆய்வு தர்க்க அடிப்படைகள் குறித்து நம்ம ஸ்டைலில் அடுத்த பதிவில் பார்க்கலாம்.


அலைதலில் கிளைத்த குறிப்புகள்.

பதிவு எழுதுவதற்காக பழைய குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்தபோது... சில முக்கியமான கடிதங்களும், கட்டுரைகள் எழுதவென குறித்து வைத்த குறிப்புகளும், கையெழுத்தப்படியாக சில கட்டுரைகளும், கவிதைகளும் தூசி தட்டி எடுத்தேன். அவற்றில் பொருத்தமுள்ள இவற்றை பதிவில் வெளியிடுகிறேன். இவை 1998-வாக்கில் நண்பர்களுக்கு கடிதங்களாகவும் எனது குறிப்பேட்டிலும் குறித்து வைக்கப்பட்டவை. ஆரம்பிச்சிட்டான்ய்யா குப்பையை கிளற... என்று எண்ணாதீர்கள. இன்னும் இக்குப்பைகள் கிளறப்படாமலே இருக்கிறது. அதாவது, இக்குறிப்புகளை விளக்கக்கூடிய கட்டுரைகள்தான் இன்னும் எழுதப்படவில்லை. பதிவுலகம் போன்ற ஒரு வாய்பபு இல்லாத நிலையில் எழுதும் ஆர்வமற்று இக்குறிப்புகளை விரித்து எழுத வாய்க்கவில்லை. பதிவுலக நண்பர்கள்... இவற்றை விளக்கியோ மறுத்தோ எழுதலாம் என்பதால் இங்கு வெளியிடப்படுகிறது. தொடர்ந்து இவைகளை எனது பதிவுகளில் எழுதும் உத்தேசமும் உண்டு. நீங்கள் பின்னோட்டம் போடும் முன்பு ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே என்றுதான்.

1. 'கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோண்றிய மூத்தக்குடி' 'தமிழ் மண்ணுக்கே இயல்பாய் அமைந்துள்ள குணங்களில் ஒன்று அநீதியைக் கண்டு வெகுண்டெழுவது.' ஏதொ ஒரு தலையங்கத்திலோ அல்லது பேருரையிலோ அல்லது பேருந்தின் பேச்சிலோ எதிர்கொண்ட வாசகங்கள் இவை. இது போன்ற வாக்கியங்கள் தமிழில் இன்னும் எழுதப்பட்டு வருவது கவலைக்கிடமான விடயம்தான். இந்த வாக்கியம் தமிழ் பெருமித உணர்வையும், தமிழ் உயர்-தேசீய உணர்வையும், தமிழ்-அதிகார உணர்வையும் சொல்லும் ஒருவகை பாசிச-பெருமிதமாகும். இவ் வாக்கியங்கள் உண்மையா? அம்பட்டமான பொய்தானே? இந்த கோயபல்ஸ்வகை பொய்யை பலரும், ஒரு மொண்ணையான அர்த்தத்தில் பயன்படுத்திதான் வருகிறோம். இதுபோன்ற வாக்கியங்களை எழுதுவதை தவிர்க்கலாம் என்று படுகிறது. இப்பார்வை வரலாற்றை தேர்வு செய்யும் நமது அரசியலின் பார்வை. அதனால்தான் மன்னர்கள் நெருக்கடிக்கு ஆளானதைக் கண்டு வெகுண்டெழும் மக்கள் கூட்டம் என்பதாக ஒரு பொய்யை வரலாற்றின் பக்கங்களாக படித்துக் கொண்டே இருக்கிறோம். நமது கனவும், நமது உடலும் அரசிறையால் (அரசு மற்றும் இறையால்) உருவமைக்கப்பட்டது. அந்த அரசிறையயும் தமிழ்ச்சினிமாவின் ராஜராஜ சோழன்களால், கனவுக் கதாநாயகர்களால், வரலாற்றின் கதைகூறல்களால் உருவமைக்கப்பட்டது. இதிலிருந்து விடுபடுவது, நாம் உருவாக்கும் இத்தகைய போலிப்பெருமித வாக்கியங்களை தவிர்ப்பதும், அதை உணர்வுபூர்வமாக உணர்வதிலிருந்துமே சாத்தியம்.

2. மதங்களும், குறிப்பாக இந்திய பெரும் தத்துவங்களும், இஸ்லாம், இந்துமதம், கிறி்த்துவம், யூதம் போன்ற எல்லா பெருமதமும் மக்களை அதிகமாகவே கொன்று குவித்துவிட்டன. அதற்கு மாற்றாக சிறுமத வளர்ச்சி சிறுதெய்வ வழிபாடு போன்றவற்றை, பகுத்தறிவிற்கு புறம்பான, தொண்ம அடிப்படையில் முன் கொண்டு வருவது ஒரு மாற்றாக இருக்குமா? என்பதும் யோசிக்கத்தக்கது. எனக்கு தெரிந்து வைணவம், சூஃபியிஸம், சித்தர்கள், தாந்ரீகம், பௌத்தம் போன்றவை காதலைப் பேசிய மதங்கள். ஆத்மாவால் ஒடுக்கப்பட்ட உடலைப் புணிதப் படுத்த காதலை முன்வைத்தவை, பெருமதங்களின் ஒடுக்கமுறைகளிலிருந்து தப்பிச் செல்லும் வழியை அம்மதத்தின் தர்க்க அமைப்பிற்குள்ளேயே கண்டடைந்தவை.. காமசாஸ்திரம், கொக்கோகம், ஆணந்த ரங்கா, வள்ளுவரின் காமத்துப்பால் போன்ற நூல்கள் உடலை அதன் விஞ்ஞான அடிப்படையில் அனுகிய நூல்கள். இந்தியப் பாலியல் குறித்த சொல்லாடலில் இவற்றின் பங்கு தீவிரமான ஆய்விற்கு உரியவை. மதவாத பாசிசத்தினை சிதைப்பதற்கு, கருத்தியல் அளவில், இதுபோன்ற நுண்கூறுகளைப் பற்றிய ஆய்வும் விவாதமும் அவசியம்.

3. வரலாற்றை மறுப்பதும் அதற்கு பொறுப்பேற்பதிலிருந்து விலகுவதும், செயலின்மையை வலியுறுத்துவதும், அல்லது செயலற்ற போக்கிற்கு தள்ளுவதும், ஸ்தூலமற்ற மோழியில் பேசுவதும், தர்க்க சுகத்தில் திளைப்பதும், வர்க்கப் போராட்டத்தை மறுப்பதும் என பின்நவீனத்துவத்தை ஒருவகை அத்வைதமாக கானும் மரபு மார்க்சியர்கள்கூட மாவோவின் பண்-முரண்பாடு என்கிற அமைப்பியலாளர்களின், குறிப்பாக அல்தூஸரின் கருத்தாக்கத்தை, அடிப்படையாகக் கொள்கிறார்கள். பின்நவீனத்துவம் என்கிற 'பிராண்டை' தவிர்த்துப் பார்த்தால், தெல்யூஸ்-கொத்தாரி போன்றவர்கள் முன்வைக்கும், மொழி என்பது ஒரு சமூக நிறுவனம். அது ஒருவகை குழுப் பேச்சாக (collective utterance தமிழில் குழுப் பேச்சு என்று சொல்லலாமா? தெரியவில்லை. speech என்பதற்கு பேச்சு என்றால் utterance –என்பதை எப்படிச் சொல்வது? utterance -என்பது பேச்சின் ஒருவகை வன்முறையான வெளிப்பாடாகக் கொள்ளலாம்.) வெளிப்படுகிறது. பேச்சு எல்லாம் முழக்கம் (slogan) என்கிறார்கள், அதாவது அரசியலற்ற, வன்முறையற்ற, திணிப்பற்ற பேச்சு சாத்தியமில்லை என்கிறார்கள். பேச்சின் அடிப்படை செயல்களில் ஒன்று அதன் territorialization- தான் என்றும், இலக்கியங்கள் எப்படி இந்த 'இடமாக்கலை' நிகழ்த்துகின்றன என்றெல்லாம் செல்கிறது இவர்களது ஆய்வு. இடமாக்கலும், நாடும் அரசியலின் அடிப்படை. இதையெல்லாம், லெனினின் முழக்கம் பற்றிய வரையறைகள், வர்க்கநலனில் வெளிப்படும் பேச்சு ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்க முடியும். "ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அதற்கான வர்க்கத்தின் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது" என்பதை இந்நோக்கில் வளர்த்தெடுக்க வேண்டும்.

4. வரலாற்றை இன்னும் மன்னர்களின் மானியச் சொத்தாகவே பாவிப்பதைவிட்டு வரலாறு மக்களுக்கானதாக அதாவது வரலாற்றை ஒடுக்கப்பட்ட மக்களின் வழியாக உருவாக்குவதுதான் தேவை. தலித்துகள், பெண்கள் போன்று காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலை அடையாளங்கண்டு அவர்களது வரலாற்றை எழுதவேண்டும். அல்லது இதுவரை வரலாறாக சொல்லப்பட்ட வீர சாகசக் கதைகளை, 'குயிக்ஜோட்' போல் தலைகீழாக்க வேண்டும். மன்னர்களை வேடிக்கை பொருட்களாக்குவது. நாட்டுப்புற நகைச்சுவை அல்லது நையாண்டி மூலம் மன்னர்களை பகடி பண்ணுவதன மூலம் வரலாற்றை செயலிழக்கச் செய்வதுதான் இனியான மக்களின் வரலாறாக இருக்க முடியும். அதனை நாட்டுப்புற நகைச்சுவை என்கிற நாட்டார் ஆய்வுகளிலிருந்து கட்டமைக்க வேண்டும். அதனால், இனியாவது வரலாறு இடிப்பதற்கும், தோண்டவதற்கும் அல்ல மக்களுக்கானது என்பதை மனதில் வைத்து கவனம் செலுத்து வேண்டும்.

5. வானம் பொய்த்துவிட்டது என்பதைப்போல மார்க்சியம் பொய்த்துவிட்டது என்கிற தவளைக் கூச்சலில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறையும் இருக்கும்வரை மார்க்சியத்தின் இருப்பு என்பது தவிர்க்க முடியாதது. உண்மையில் சோவியத், சீன அனுபவங்கள் மார்க்சியத்தின் தளத்தை விரிவடையத்தான் செய்துள்ளன. அமைப்பியல் முதல் சீஸோ-லிங்கவிஸ்டிக் வரை அல்தூஸர் முதல் பூஃக்கோ, தெல்யூஸ் கொத்தாரி வரை மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதிலிருந்து வளர்ச்சியடைந்தவர்கள்தான். பண்ணாட்டு முதலாளியமாக வளர்ந்துள்ள ஏகாதிபத்தியம் ஏற்படுத்தியிருக்கும் அரைக்காலணீய பண்பாட்டுச் சூழலில் நாம் பழையவகையில், இன்றைய பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாது. அதனால்தான் பாலியல் சொல்லாடல்கள், தேசிய இனப்பிரச்சனைகள், பெண்ணியம், பாலினமாக்கல் பற்றியெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய நோக்கிலிருந்து பேச வேண்டியுள்ளது.

6. இன்றைய தமிழர்கள் குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள் (ஈழத்தினர்) உலக சிந்தனையின் அனைத்து முன்னொடி துறைகளைப் பற்றியும் பேசுகிறார்கள். அவர்கள் வழியாக தமிழின் ஆய்வுக்களம் விரிவடைந்துள்ளது. மார்க்சியம் அதன் தளத்தில் இச்சிந்தனைகளளுடாக ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மார்க்ஸ் தன்னளவில் ஒரு ஐரோப்பிய மையவதாப் பார்வையைக் கொண்டிருப்பதான விமர்சனங்கள் இருந்தபோதிலும், மனித விடுதலை பற்றிய கனவினை முறையான செயல்திட்டத்துடன் அனுகியது மார்க்சியம் மட்டுமே. அதேசமயம் மார்க்சீய வாதிகளிலேயே மொழியை நுணுக்கமாக புரிந்து கொள்ள முயன்ற ஸ்டாலினின் மொழிகுறித்த சிந்தனைகள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.

7. 'ஆசிரியன் இறந்து விட்டதான' கருத்தாக்கம், விமர்சகனிடமிருந்து படைப்பாளி தப்பிச் செல்வதற்கான உத்தியாகிவிடாது. படைப்புடன் உயிர் பெற்று படைப்புடன் இறந்துவிடும் ஆசிரியன், வாசிப்பின் வழியாக உயிர்ப்பிக்கப் படுகிறான். ஆசிரியன் படைப்பின் ஒரு நிலையான புள்ளி இல்லை, படைப்பினூடே வந்து வந்து மறைபவன் என்பதுதான். இந்த ஆசிரியன் ஒரு எழுத்துருதான் (word-being) அல்லது ஒரு பிம்பம். இந்த பிம்பம் வாசகனால் கட்டமைக்கப்படுவது. எழுதும் ஆசிரியனின் வர்க்க, பாலியல் தன்னிலை என்பது எழுத்தினை வழிநடத்துவதாக இருக்கிறது. இல்லாவிட்டால் படைப்பில் ஒலிக்கும் பொதுக்குரலை எப்படி அடையாளம் காணமுடியும். படைப்பு என்பது இத்தகைய பல குரல்களின் ஒரு போராட்டக்களமாக இருக்கிறது. ஆசிரியன் தனது ஒறைக்குரலால் பிற குரல்களை ஒடுக்குவதை, ஆய்வுகள் வழியாக வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. விமர்சனம் படைப்பை அனுகுவதற்கான வழியை திறப்பதற்கு பதிலாக படைப்பை கலைத்துப்போடுவதாக இருக்க வேண்டும். வாசகன் தன்போக்கில் அதனை கோர்த்து தனது வாசிப்பை நிகழ்த்திக் கொள்ள ஏதுவாகும்.

8. ஒரு கதையில் எழுதப்படும் வர்ணனைகளே கதையின் சொல்லப்படாத மௌணிக்கும் பகுதிகளுக்கான தடயம். இதனை புது விமர்சனத்தில் தடம் (trace) என்பார்கள், Physco-Linguastic-ல் எச்சம் (remainder) என்பார்கள். பேசியதில் உள்ள பேசப்படாததின் எச்சம். இவ்வர்ணணைகளிலும், அதற்கான தேர்வுகளிலும், பேச்சை உருவமைப்பதிலும், அவற்றை வரிசைப்படுத்துவதிலுமே படைப்பின் வர்க்க, பாலியல், சாதீய, மத தன்னிலை வெளிப்பாடு கொள்ளும். கதைவாசிப்பில் இவ்விடைவெளிகளை வாசகன் தனது அடையாளமாக கொண்டு படைப்பின் பரபப்பிற்குள் குடியேறுகிறான். படைப்பை மையமற்றதாக சிதைப்பதன்மூலம் இந்நிலப்பரப்பை சிதைத்து வாசகன் தனக்கான பிரதியை உருவாக்கிக் கொள்ளச் செய்வதன் மூலம் வாசிப்பாளனை கொண்டாட்ட மனநிலைக்கு அல்லது வாசிப்பாளனை படைப்பூக்கமிக்கவனாக மாற்றுவது படைப்பாளியின் பொறுப்பாகிறது. விமர்சகன் அப்படைப்பி்ல் உள்ள ஆசிரியன் என்கிற எழுத்துருவின் தன்னிலை அடையாள அடிப்படைகளை வெளிப்படுத்திக்காட்டுகிறான். இவ்வாறாக விமர்சனம் தீர்ப்பளிக்கும் நீதிமன்ற தீர்ப்பாக ஆகாமல் பிறிதொரு படைப்புச் செயலாக ஆகிறது.

9. "அப்பாவித் தமிழன்" போன்ற சொல்லாடல்கள். இன்னும் மனிதர்களை நல்லவர், வல்லவர், அப்பாவி, கள்ளன் என்று வகைப்படுத்துவது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வகைபடுத்ததல் என்பது தாவரவியலில் லிண்ணேயஸால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த வகைப்பாட்டியலை மனித சமூகத்திற்குள் பிரயோகித்து இனங்களாக, நிறங்களாக மனிதன் வகைப்படுத்தப்பட்டு எண்ணி கணக்கிடப்பட்டு அரசின் புள்ளிவிபரங்களாக மாற்றப்படுகிறான். அதன்பின் அவை குழு அடையாளங்களாக மாற்றப்பட்டு, வரலாற்றின் கதையாடல்கள் வழியாக உயர்ந்தவை, தாழ்ந்தவை என்கிற படிநிலையாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இதன் அதிகபட்ச அரசியல் வெளிப்பாடுதான் பாசிசம் அல்லது இனத்தூய்மை அல்லது வலிமை அல்லது திறமை மட்டுமே வாழ்வதற்கான காரணி என்பது. இவ்வாறாக, அறிவு வகைப்படுத்துதல் வழியாக ஒரு அதிகார தொழில் நுட்பமாக உருவமைக்கப்பட்டது. மேலும் வகைப்படுத்துதல் ஒருபடித்தானவர்களாக மனிதர்களை (Same X Other, Male X Female, Eastern X Western, Black X White, Indian X Pakistan, Sinkala X Tamilian, Ariyan X Dravidian...etc...) கட்டமைப்பதற்கான ஒரு காலணீய தொழில் நுட்பம். அது இப்படித்தான் துவங்கும். அப்பாவி, வளர்ச்சியற்றவன், காட்டுமிராண்டி, மூடநம்பிக்கையாளன் என்பதாக.

10. தமிழரது பாலியல் அறிவு குறித்து அல்லது தமிழ் பாலியல் என்கிற கருத்தாக்கம் குறித்து பேசப்பட வேண்டும். சங்ககாலத்தில் வேலன் வெறியாட்டம் மற்றும் நெய்யணி மயக்கம் எல்லாம் உடல்களை பொதுக்களத்தில் அலையவிட்டு அவற்றை கலப்பதுதான். சங்ககால மகளிர் மது அருந்திவிட்டு இரவுகளில் ஆட்டம் போடுவார்கள் என்கிறது சங்ககால தமிழர் வரலாறு (Pre-Ariyan Tamil Cullture - P.T.S.Iyangar). உடன்போக்கு, மடலேற்றம் துவங்கி அகத்திணை இலக்கியங்களை ஒரு பாலியல் வாசிப்பிற்கே உட்படுத்தலாம். காதலியின் வாயில் ஊறும் நீரின் இனிமைக்கு இணையான நீர் உலகில் இல்லை என்கிறது வள்ளுவம். அது அன்று ஆணால் இன்றுள்ள தமிழன் என்றுகூறி தப்பிக்கலாம். அதற்கு தமிழ் மாத இதழான 'செக்ஸ் லைப்'-பின் அனுபவ பகுதியில் இருந்துதான் உதாரணம் காட்ட வேண்டி வரும். பாலியல் கட்டுமானம் எப்படி மிகைப்படுத்தப்பட்டு மையமான பேசுப்பொருளாக ஆக்கப்பட்டது வரலாற்றில் என்பதையும் இந்தியப் பாலியலின் குறிப்பாக தமிழ் பாலியலின் கலாச்சாரக் கட்டுமானங்கள் எப்படி காலணீயத்தால் உருவமைக்கப்பட்டது என்பதும் ஒரு முக்கிய ஆய்வுப்புள்ளியாகும். இந்த கலாச்சார ஏகாதிபத்தியத்தை கண்டடைந்து உடைத்துப் போடுவது அவசியம்.

11. மக்கள் தொகை பெருக்கம் உலகை அச்சுறுத்துவதாக கட்டமைக்கப்படும் சொல்லாடல்கள் மற்றும் தனது பயத்தை உலக பயமாக்குவது ஆகியன ஒரு ஐரோப்பிய தொழில் நுட்பம்தான். மாவோ கூறினார், 'மனிதன் பிறக்கும்போதே இரண்டு கைகளுடன் பிறக்கிறான்' என்று. மால்த்தூஸியன் பூதம் உலகை விட்டகன்றாலும், இன்னும் இந்த வெள்ளை, ஆணாதிக்க, மத்தியதர வர்க்க மேட்டிமையினரை (elite) விட்டகலவில்லை. அதனால்தான் தனது அச்சத்தை உலக அச்சமாக சித்தரிக்கிறார்கள். மக்கள்தொகை பெருக்கம் பற்றிய சொல்லாடல்கள் மக்களை ஒரு உழைப்புச்சக்தியாக கருதாதின் விளைவே. மக்களின் வாழ்வாதரங்களை நோக்கியதான தொழில்நுட்பங்களை வளர்க்காமல் நுகர்வு அடிப்படையிலான தொழில்களை வளர்த்து, அதற்கான நுகர்வுப் பண்பாட்டை கட்டமைத்துள்ளனர். இதுவே கவனமாக எதிர்க்கப்பட வேணடியது.

12. உலகத்தின் மையமாக மனிதன் தன்னை கருதிக்கொள்ளும் மனிதமுதல்வாதம் என்கிற 'ஹோமோ செண்டரிஸம்' தான் உச்சமாக பாசிச கருத்தியலாக வளர்ந்தது. ஐரோப்பா மனிதனை மையமாக வைத்துக் கொண்டே தனது தத்துவார்த்த அறிதலை துவங்கிறது. Politics of Humanisam பற்றி பேசப்படவேண்டும். மனித நேயம் பேசிய முதலாளித்தும்தான், மனித அழிவை அதிகப்படுத்தியது, அழகுபடுத்தியது. மனிதன் ஒரு பதிணெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பிய கண்டுபிடிப்பு என்கிற பூஃக்கோவின் மனித உடலிற்குள்ளான அதிகார செறித்தல்கள் பற்றிய ஆய்வு இதனை அம்பலப்படுத்தகிறது. மனிதநேயம் என்பது ஏழை எளிய மக்களுக்காக வருந்தி உதவி செய்வதோ அல்லது பிச்சைக்காரர்களுக்கு காசுபோடுவதோ, குளிருக்கு போர்வை தருவதோ அல்ல என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

13. மகிழ்வு, வெட்கை போன்ற உணர்வுகள் எப்படி அதிகார உறவுகளால் ஒரு உடலுக்குள் நுட்பமாக பின்னலாக்கப்பட்டு, அதனை அடைவதற்கான பாய்விற்கு உடல்கள் முடுக்கப்படுகின்றன என்கிற வேட்கைகளி்ன் அரசியல் பற்றியது மற்றொரு ஆய்வு. 'சுயம்', 'ஆத்மா' போன்ற தத்துவார்த்த கூறுகளையே தொழில் நுட்பங்களாக, செய்தி பரிமாற்ற வினையாக கருதி நகரும் மொழியாய்வுகள்... அறிதல் என்கிற அடிப்படை செயலையே கேள்விக்குள்ளாக்கி விட்டுள்ளது இந்த நூற்றாண்டில். புனைவுகளால் புனையப்பட்ட ஒரு புனைவாக வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கும் உலகில் வாழ்க்கை விசித்திரமாக தெரிவதும், இலக்கிய உலகம், இலக்கிய பிறப்பு எல்லாம் விசித்திரமாக தெரிவதும் நமது அரசியல் மற்றம் அறிதலின் பிரச்சனைதான். நமது மகிழ்விற்கான வேதியில் எப்படி அதிகார வினைகளால் இயக்கப்படுகிறது என்பதும் இவ்வாய்வின் தொடர்ச்சியாகும்.
14. புலம் பெயர்ந்த நிலையில் உருவாகும் எழுத்தின் அடையாளம் மற்றும் அரசியல் பற்றிய விவாதம் தேவை. காலணீயம் உருவாக்கிய கலப்பின அடையாளம் (Hybrid Identity) பற்றிய ஆய்வுகள் இன்று அவசியப்படுகின்றன. பின்காலணீயச்சூழலில் இக்கலப்பின அடையாளத்தின் இயக்கத்தை புரிந்தகொள்வது அவசியம். இந்திய மனிதன் என்பவன் சிந்திப்பதில் வெள்ளையனாகவும், நடைமுறையில் கருப்பனாகவும் (இந்தியனாகவும்) இருப்பதே கண்கூடு.

எதையும் சொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பரப்பில் சொல்லப்படும் விஷயங்கள் ஏணோ தாணோ என்று இருக்கக்கூடாது என்கிற எழுத்தின் பொறுப்புணர்வுபற்றி அதிகம் அக்கறையும் யோசனைகளும் கொண்டவன் என்பதால், இன்று பெரும் அளவில் விவாதத்திற்கரியதான இக்குறிப்புகள் ஆதாரபூர்வமாக விளக்கப்பட வேண்டியவையா? அல்லது விவாதத்தின் மூலம் நிராகரிக்கப்பட வேண்டியவையா?... என்கிற பிரச்சனையை முன்வைத்து இவற்றை பதிவுலக நண்பர்கள் பேசுப்பொருளாக கொண்டு ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் முடிக்கிறேன்.

அடுத்து, மருத்துவம் சார்ந்த துறைகள் பற்றிய பதிவுடன் சந்திப்போம்.

பின்குறிப்பு: பிழையில்லாமல் எழுத இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்பதால்.. திருத்திப் படித்துக் கொள்ளவும். வாய்ப்புள்ள நண்பர்கள் சுட்டினால், திருத்த அல்லது திருந்த வாய்ப்பாக இருக்கும்.

-ஜமாலன்.

அர்ப்பணம்

சிறுவயது முதல்
சிநேகிதனாய்
மனக்கவலையுறும்போதெல்லாம்
மலைபோல் காக்கும்
மறைபோல
13 எழுத்துக்களைக் கொண்ட
நான்கு திசைகளிலும்
பூதகணங்களாய் எழுந்தருளி
நான்கு பூக்களில் உலகை அளந்து
நான்கு ராஜாக்களில் -
அவ்வப்போது ஜோக்கராய் வந்து
அந்தஸ்தை உயர்த்தும்
ஆடுதன் ராஜாவுக்கு...


திருச்சி காவேரி
திரையரங்கின் பின்னுள்ள
தண்டவாளத்தை தாண்டிய
தகரக் குடிசையில்
'புதுசா'- எனக்கேட்டு
ஆண்மை என்கிற
அதிகாரத்தை கவிழ்த்த
கருத்தப் பெண்ணிற்கு..


பனந்தோப்பின்
கள் வாங்கித் தந்த
பால்ய நண்பனுக்கு..


இவர்களுடன்
குறத்தி முடுக்கிற்கு
அழைத்துச் சென்று
நாளை மற்றுமொரு நாளே
எனக்காட்டிய
உன்னத இலக்கியவாதி
ஜி. நாகராஜனுக்கு..


பி.கு.: எதையாவது யாருக்காவது அர்ப்பணிக்குனும்ல.. அதான்.
- ஜமாலன்

கருந்துளையாகும் நட்சத்திரம் - சுயதம்பட்டம்

'உண்ண உண்ண தெவிட்டாது அம்மே! உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்' என்றான் பாரதி. வாசிப்பையும் எழுத்தையும் இப்படித்தான் கூறமுடியும். உண்ண உண்ண தெவிட்டாதது மட்டுமல்ல, இப் படிமம் முன்வைககும் உயிருடன் முட்டி உணர்வை அறியும் ஒரு நிகழ்வும்தான் எழுத்து. இவ்வரிகள் வார்த்தைகளை தாண்டி தரும் உணர்வுகள்தான் இலக்கியமும் எழுத்தும். இதனை பதிவுலகில் எழுத வந்தபின்.. அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.

பதிவுலகில் ஒரு மேடை என்பதால் தமிழ்மண நட்சத்திரம் ஒரு வாய்ப்பு. வாசிப்பாளரை விரிவுபடுத்துவதுடன், பல அறிமுகங்களையும் உருவாக்கும். எழுத்து சிறுவயது முதல் ஒரு தீவிர ஆர்வமாக இருப்பதால்.. இவ்வாய்ப்பு மகிழ்ச்சியான ஒன்றுதான். இந்த 3-மாதங்களில்.. குறிப்பான சில நண்பர்கள் அறிமுகம். எனது எழுத்துக்களை காலக்குறியில் படித்த சில வாசகர்கள், எனது நூலைப்படித்த சில வாசகர்கள் என சிலரை இதன் மூலம் அறிய முடிந்தது. இவர்களை நான் தேடி அடைவது அத்துனை சாதாரணமான காரியம் இல்லை. அதற்கு முதலில் பதிவுலகிற்கு நன்றியைக கூறிக்கொள்கிறேன்.

பதிவில் எழுத வந்தபின், இது ஒரு ஆறாவது திணைதான் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இத்திணைக்கென விசேடமான முதல், கரு, உரிப்பொருள்களும், சிறு மற்றம் பெரும் பொழுதுகளும் இருப்பதை உணர முடிந்தது. தமிழ்ச்சமூகம் உலகம் என்கிற பெருவெளியில் இருந்து இந்த வலைப்பதிவின்வழியாக ஒரு நுண்மின்னியல் வெளிக்குள் அலையும் ஒரு தனி இனமாக மாறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. இந்த இனத்தில் ஒருவனாக என்னை அடையாளப்டுத்திக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு வந்தபின் படிப்பது என்பதை இது தீவிரப்படுத்தியருப்பதுடன், இது படிப்பதையெல்லாம் எப்படி எழுத்தாக மாற்றுவது என்கிற தொழில்முறை சிந்தனைபோன்ற ஒரு எழுத்து தொழிற்சாலையாக நம்மை மாற்றிவிடுகிறது. மனிதன் தன் மையமிழந்த சமூகத்தில் வாழ்வதற்கான ஒரு வெளியாக அல்லது நாடோடிகளின் வெளியாக (nomadic space) இப்பதிவுலகம் இருப்பது, அதிகாரத்திலிருந்து விலகிய ஒரு பரவசத்தை (joyousness என்கிற ஒன்று) தருவதாக உள்ளது.

பதிவுலக எழுத்துக்களை எல்லோரும் நாட்குறிப்புபோலத்தான் துவங்குகிறர்கள். நாளடைவில், அவர்களை அறியாமல் பதிவுலகிற்கும் எழுத்திற்கும் அடிமையாதல் என்பது நிகழ்கிறது. ஒருகட்டத்தில் அவர்களது எழுத்து நாட்குறிப்பிலிருந்து நகர்ந்து பொதுக்குறிப்புகளாக மாறி... பின் அது சமூக அக்கறைக் கொண்ட எழுத்தாக மாகிறது. பிறகு எழுத்தின் ஜனநாயகப் பண்பை புரிந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகுகிறார்கள். இது பதிவுகளின் ஒரு முக்கிய விளைவாகும். ஒரு சில பிரச்சனைகள் வம்படிக்ள இருந்தாலும், விவாதத்தின் சகிப்புத் தன்மையையும், பொறுமையையும், தான் மட்டுமே அதிகம் தெரிந்த அறிவாளி என்கிற மாயையும் இது உடைத்திருக்கிறது. இது ஒரு மாற்ற ஊடகமாக மாறிவிட்டிருக்கிறது. வெகுஜன ஊடகங்களை சென்றடைவதற்கான ஒரு வழியாக மாறிக் கொண்டிருப்பதை வரவேற்பதா? நிராகரிப்பதா? என்று புரியவி்ல்லை.

சிறுபத்திரிக்கையிலிருந்து வந்தவன் என்பதால், முதலில் பதிவுகளில் எழுதுவதில் நிறைய தடுமாற்றம் இருந்தது. காரணம், தமிழ் சிறுபத்திரிக்கை எழுத்து என்பது சில தனிச்சிறப்பாக குணாதிசயங்களைக் கொண்டு எழுதப்படுவது. அதாவது, எழுத்து, பேச்சு அல்லது பொதுவாக மொழி என்பது தொல்காப்பியம் முன்வைக்கும் ஒரு கூற்றுதான். கூற்று என்பது சொல்பவன் கேட்பவன் இருவருக்கிடையி்ல் நிகழ்கிறது. அதாவது, இரு தன்னிலைகளுக்கு (subjects) இடையிலான ஒரு நிகழ்வு. இக்கூற்றின் மூலம் ஒரு தன்னிலை மற்றொரு தன்னிலைக்குள் ஊடுறுவிச் செல்கிறது. இதையே மொழிதல் (dialogues) என்கிறார்கள்.

எளிமையாகச் சொன்னால், கேட்பவன் பற்றிய அல்லது வாசகன் பற்றிய முன் அனுமானத்தை கொண்டே எழுத்து அமைகிறது. சிறுபத்திரிக்கை என்பது ஒரு சிறிய வட்டம். அதில் வாசகன் என்பவன் பிறிதொரு சக எழுத்தாளன் என்பதால், எழுதுபவன் தனது எழுத்தினை பிறருக்கு புரியவைத்தல் என்கிற பெரும்பாரத்தை சுமப்பதில்லை. ஏனென்றால் இங்கே எழுதுபவனும், வாசிப்பவனும் ஒரே அலைவரிசைக்குள் இருப்பதான ஒரு ஒத்ததிர்வு இருக்கிறது. ஆணால், பதிவுலகம் பலதரப்பட்ட அலைவரிசைகளைக் கொண்டது. இங்கே சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு, அதன் அலைவரிசையின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய புரிதல் அவசியப்படுகிறது. ஒத்ததிராத அலைவரிசை புரியாமையை உருவாக்கும். இந்த சிக்கலிலிருந்து இன்னும் விடுபடாத எழுத்தியக்கமாக எனது எழுத்துக்கள் இருப்பதால், நான் பழகவேண்டிய எழுத்துநடை பதிவுலகில் அதிகமாகவே இருக்கிறது.

ஆகவே, இந்த ஒருவாரம் இம்மேடையில் நான் என்ன வாசிக்கப்போகிறேன் என்பது குறித்து ஏகதேசமாக ஒரு கருத்திற்கு வரமுடியாததால், இது ஒரு ஜீகல்-பந்திபோலத்தான், இசை ஞானிகள் இதனை பெரிய வார்த்தையாக கருதினால், கதம்பமாக எல்லாம் கலந்ததாக இருக்கும் எனத் தோன்றுகிறது. எனவே, புரிந்தவர்களுக்கும், புரியமுயல்பவர்களுக்கும், புரியாதவர்களுக்கும், எதிர்கருத்துடன் சண்டையிட வருபவர்களுக்கும், எனது தவறான கருத்துக்களை சுட்டிக்காட்டி கடைத்தேற்ற முனைபவர்களுக்கும், வாழக்கையை நகைச்சுவையாக நையாண்டியாக எடுத்துக்கொள்ளும் பதிவுலக பெரும்பாண்மையான கும்மி நண்பர்களுக்கும், மொக்கையோ, சக்கையோ என எழுதுவதில் ஆர்வம்கொண்டு எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து ஆரம்பம் செய்கிறேன்.

பதிவுலக கலைச்சொற்களில் எனக்கு புரியாத சில சொற்களுக்கு பதிவுலக அனுபவசாலிகள் தெரியப்படுத்தி உதவினால் நன்றிக்குரியவர்களாவீர்கள்.

1. டிஸ்கி 2. மொக்கை பதிவு 3. சூடான இடுகைகள் 4. உள்குத்து 5. அ.மு.க. (கழகத்தின் manifesto) 6. ப.பா.ச. (சங்கத்தின் manifesto)
தற்சமயம் நினைவில் உள்ளவை இவைதான்...

அப்புறம் தலைப்புக்கு வருவொம். எல்லாம் நட்சத்திரமும் ஒரு நாளைக்கு எரிந்து சாம்பலாகும் கருந்துளைதான் என்கிற 19-வது சித்தரின் பாடல் வரியிலிருந்து எடுக்கப்பட்டது. நட்சத்திர தலைப்பாக இருக்கட்டுமே என்றுதான்.. ஹி...ஹி...

உஸ்ஸ்ஸ்ஸ்.... இப்பவே கண்ண கட்டுதே.

-அன்புடன்
ஜமாலன்.

அகதிகளின் காடு...

1
நாடுகள் அற்றுப்போன
அடர்ந்த காட்டினூடே
எனது பயணம்.


பேச்சுத் துணைக்கு -
இலையுதிர்த்து
மரம் பிணைவுறும் சத்தம்
பாடசாலைகால -
தங்கையைப்போல

பார்த்துப் பழக
எப்பொழுதெனும்
தரையில் வரைபடும்
சூரிய ரேகைகளின்
மரக்கிளை ஓவியங்கள்.

இறக்கைகளை சிலுப்பிய
குருவிக் கூட்டமும் -
உறுமித் திரியும் மிருகக் கூட்டமும்
காட்டை எப்பொழுதும்
காடாகவே காப்பாற்றி வந்தன.

இருட்டை ஒரு பொருட்டாக
மதியாது
விழிகள் பழகின
வெளிச்சத்தில் கூச.

பாட்டி சொன்ன
பழங்கதைகள் நினைவாட -
மரத்தை அணைத்தப்படி
தூங்கிப் போயிருக்கிறேன்
உரிந்தும், உரியாமலும்
ஒட்டிக் கொண்டிருக்கும்
ஒரு மரப்பட்டையைப்போல

2

காடுகளில் வாழ்வது ஒன்றும்
அத்துனைக் கடினமில்லை

நாகரீகமா? அது எதற்கு?
உடைத்தப்போடு அந்த சாக்கடையில்.

பசி எடுத்தால் இலைகளைத் தின்னலாம்
பாடத் தோணினால் பறவையாய் அலையலாம்.
மரங்களுடன் நடனப்பயிற்சி.
மிருகங்கள் கற்றுத்தரும்
கவின்மிகு சண்டைகள் -
காயம் பட்டால்
இருக்கவே இருக்கிறது
காட்டுப்பச்சிலைகள்

காடுகளில் வாழ்வது ஒன்றும்
அத்துனைக் கடினமில்லை

சோற்றுக்காய் அண்ணாந்து பார்க்க வேண்டாம்.
குண்டுகளால் துளைத்துவிட்டு -
செஞ்சிலவைச் சங்கங்களை அனுப்ப
ஆட்கள் இல்லை அங்கு.
கத்தியால் குத்திவிட்டு
காயத்துக்கு மருந்து அனுப்ப
ஆட்கள் இல்லை அங்கு.
மனித ரத்தம் புசிக்கும்
மகான்களோ,
தீர்க்கதரிசிகளோ இல்லை.

கண்ணீர்திரை விரித்த
முகாம்களில் அடைபட வேண்டியதில்லை.
சகோதரிகளின் குறிகளைக் கிழிக்கும்
துப்பாக்கிகள் இல்லை.
உயிருடன் வாழ
யாசிக்க வேண்டியதி்ல்லை.
முக்கியமாய் -
காட்டு மிருகங்களால்
அகதியாக்கப்படப் போவதி்ல்லை.

பின் என்ன?
காடுகளில் வாழ்வது ஒன்றும்
அத்துனைக் கடினமில்லை.

-ஜமாலன் (1996)

பின்நவீனத்துவம் எனும்... பகுதி-3

நண்பர் மாயனுக்கு,
உங்கள் தொடர் விவாதத்திற்கு நன்றி.
முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.

1. நான் பின்நவீனத்தவத்தின் பிராண்ட மானேஜர் இல்லை. இதை நான் ஜாலிஜம்பரின் பின்னோட்ட முதல் வாக்கியத்திலேயே விளக்கிவிட்டேன். விவாதம் எனது புரிதலை ஒழுங்கு படுத்திக் கொள்ளவும்தான். இதன்பொருள், பதுங்கலோ அல்லது பின்வாங்குதலோ அல்ல.
2. நான் மார்கிசியத்தை நம்புபவன். எனது நோக்கம் பின்நவீனத்தவத்துடன் ஒரு ஆரோக்கியமான உரையாடலை நடத்துவதுதான். அதன்பொருட்டு அதனை வாசிப்பவன்.
3. பின்நவீனத்துவத்தைவிட எனது வாசிப்பின் மையம் பின் அமைப்பியல்தான்.ஆணால், பின் அமைப்பியல் இல்லாமல் பின்நவீனத்தவம் இல்லை. பின்நவீனத்தவம் இன்றி பின் அமைப்பியல் தனித்து செயல்படக்கூடியது. (விசுவின் வசனம்போல் இருக்கா?)
4. பின்நவீனத்தவம் ஒரு கோட்பாடு அல்ல, அது ஓரு ஆய்வுமுறையும் அல்ல. கூறியதுகூறல் என்றாலும், அது ஒரு சமூகம் அல்லது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல்.

இப்பொழுது துவங்கிய பிரச்சனைக்கு வருவோம்.

உங்களது அடிப்படையான கேள்விக்கு எனது பதிவில் விரிவான விளக்கம் இருக்கிறது. இருப்பினும்... உங்கள் சமாதானத்திற்காக..

//அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம் இதையெல்லாம் எந்த Stream-ல சேர்க்கணும்? தத்துவவியலா? மொழியியலா? அறிவியலா?//

அமைப்பியல்வாதம் ஒரு ஆய்வுமுறை. அது எல்லாவற்றையும் ஆய்வதற்கான அடிப்படைகளை பேசுகிறது. அது தத்துவமோ? மொழியியலொ? அல்லது அறிவியலோ அல்ல. இது விவாதத்திற்கு அப்பாற்பட்டதால் அதனை விடுவோம்.

பின்நவீனத்தவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். செவ்வியல் காலம், நவின காலம் போன்றவற்றை எந்த வகையில் சேர்ப்பீர்களோ அந்த வகைதான் பின்நவீனத்தவமும். நவீனத்துவம் என்றால் என்ன என்பது புரிந்தால்தான் பின்நவீனத்தவம் எங்கு இதனை உடைக்கிறது என்பது புரியும். அதைதான் மனிதமுதல்வாதம் குறித்த எனது குறிப்பு விளக்குகிறது.

நவீனத்தவத்தின் சிந்தனையை 5 வகையாக பிரிக்கலாம். 1. Humanism 2. Individualism 3. Rationalism 4. Secular Moralism 5. Progressive History or progress.

இந்த 5-ற்குள் எல்லாவித கோட்பாடுகள் இஸங்கள் நடைமுறைகளை அடக்கிவிடலாம். இந்த 5-யும் பின்நவீனத்துவம் மறுத்து,இதன் மையமாக உள்ள மனிதமுதல்வாதத்தை சிதைக்கிறது. மனிதனின் மையமான ஆத்மா அல்லது self என்கிற ஒன்றை தன்னிலை என்பதாகவும் அதன் உருவாக்கம் அதன் மையமற்ற தன்மை என்பதாக விளக்கிச் செல்கிறது. பின்நவினத்தவம் பின்அமைப்பியலின் பல்துதுறைச்சார்ந்த அறிதல்களைக் கொண்டது. அதனை விளக்கப் புகுவது என்பது ஒரு தனித் திட்டமாகும் (a seperate project) அதனை விடுகிறேன்.

//எனக்கு தெரிஞ்சு எழுத்தாளர்கள் மட்டும் தான் ஓவரா பின் நவீனத்துவத்தை பிடிச்சுக்கிட்டு தொங்கறாங்க...
ஏன் நவீனம்ன் என்கிற வார்த்தைக்கு நாவல்னு ஒரு அர்த்தம் இருக்கிறதாலய?..//

எழுத்தாளர்கள் என்ற யாரைக் கூறுகிறீர்கள். படைப்பாளிகளையா அல்லது பிற துறைச் சார்ந்த எழுத்தாளர்களையா? (விமர்சனம் துவங்கி பதிவுலகில் எழுதுபவர்வரை எழுத்தாளர்தான். எழுத்தை ஆள்பவர்கள் எல்லோரும்.) தொங்குறதுக்கு அது ஒன்னும் பார் இல்ல. புணிதமறைகள் துவங்கி சரோஜா தேவிவரை எல்லாம் மொழியால் எழுதப்படுவதுதான். எழுதாத தத்துவஞானியை காட்டமுடியுமா? எழுத்து என்பது பேச்சு என்கிற ஒலிமையவாதத்திலிருந்து விடுபட்டதுதான். உதாரணமாக ஒரு தத்தவஞானி பேசுவதை அல்லது பேசியதை பிறிதொருவர் எழுதி தொகுப்பதாகக் கொள்வோம். அப்படி தொகுக்கும்போது.. அவர் பேசியதை அப்படியே தொகுக்க முடியாது. காரணம், பேசும் தன்னிலை வேறு, எழுதும் தன்னிலை வேறு. எழுதும் தன்னிலையானது அதன் வரலாற்றுச் சூழலில் அது புரிந்து கொண்டவிதமாகவே அதனை எழுதும். அல்லது அதை வாசிக்கும் தன்னிலை தனது வரலாற்றுச்சூழலில் தான் புரிந்துகொண்டவிதமாகவே அதனை அர்ததப்படுத்தும். பேச்சு உடனடித்தன்மை வாய்ந்ததது. எழுத்து வலராற்றின் இயக்கத்தைக் கொண்டது. உதாரணமாக இராமயணம். விசாயரின் ராமாயணத்தை நாம் வாசிப்பதில்லை. தற்கால மொழிக்குள் உள்ள அர்த்தமாக்கம் அமைப்பில்தான் அதனை வாசிக்கிறோம். இராமயணப் பிரதியை நமக்கானதாக நாம் உருவாக்கிக் கொள்கிறோம்.

எழுத்தாளர்கள்தான் இதைப்பிடித்து தொங்க முடியும். வேற யார் தொங்க வேண்டும் என்று எதிர்பார்க்கறீர்கள்? எல்லா மக்களுக்கும் புரியவேண்டும் என்பது ஒரு மாயையைதான். மக்கள் செயலூக்கமிக்கவர்கள் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆணால், தத்துவம் அவர்களை சென்றடைய வேண்டும். அது வகுப்புகள்மூலம் கோடிக்கான மக்களுக்கு புரியவைப்பதால் நடைபெறுவதி்ல்லை. பேச்சு வழக்கில் உருவாகும் பொதுபுத்தி வழியாகவே அல்லது மொழியின் வழியாகவே சென்றடையும். அவர்களது வாழ்தளத்தில் ஏற்படும் நெருக்கடிகள் அவற்றை மெயப்பிக்கும். இதைதான் மார்க்ஸ் தத்துவம் மக்களை சென்றடைந்தால் பெளதீக சக்தியாக உருவெடுக்கிறது என்றார். ஆக, முன்னனிகள்தான் (frontiers) மக்களை வழிநடத்த முடியும்.

//கோட்பாடுகள், கோட்பாடுகளை தகர்க்கும், கேள்விக்கு உட்படுத்தும், தகர்ப்பமைப்பு.. இவற்றை விளக்கி கொண்டிருக்கும் போதே, பாலின கட்டுமானம், பாலியல் கட்டுமானம், மனிதமுதல்வாதம், மொழி பற்றி விளக்க ஆரம்பித்து விட்டீர்கள்...எல்லாம் தனி தனியாக புரிகிறது... இவையெல்லாம் இணைந்து எப்படி ஒரு பின் நவீனத்துவ சூழலுக்கு நம்மை இட்டு செல்கினறன என்பதை தான் புரிந்து கொள்ள விழைகிறேன்.//

தகர்ப்பமைப்பிற்கான உதாரணமாகவே பாலினம், பாலியல் பற்றி விளக்கினேன். எளிமையாக சொல்வதென்றால்.. இயல்பாக உள்ளதாக நம்பப்படும் எந்த ஒன்றும் இயல்பானது அல்ல என்பதுதான். உதாரணமாக பாலினம் (gendar) என்பது ஒரு மொழியியல் கட்டுமானம் என்பதையே விளக்கியுள்ளேன். மொழிகுறித்த வாசிப்பே இவற்றை முழுமையாக புரிந்தகொள்ள உதவும். மொழயில்லாமல் இந்த உலகை நீங்கள் புரிந்துகொள்ள வேறு ஏதெனும் வழி இருக்கிறதா? என்பதை யோசியுங்கள். மொழிக்குள் வராத எந்த பொருளையும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. பார்க்காத ஒன்றை எப்படி கற்பனை செய்ய முடியாதோ? அப்படித்தான் மொழியில் இல்லாத ஒன்றைப்பற்றி உங்களால் சிந்திக்கவோ பேசவோ முடியாது. உலகின் இருப்பிற்கு மொழி அவசியம். இந்த மொழியை புரிந்து கொள்ள இலக்கணம் அவசியம். இலக்கணம் மொழி குறித்த ஒரு ஒழுங்கமைவு. ஆகவே இந்த உலகமும் ஒரு ஒழுங்கமைப்பாக நமக்கு தெரிகிறது. இலக்கணம் தெரியாத பாமர மனிதனும் வாக்கிய அமைப்பை இலக்கண முறைப்படி பேசாவிட்டால் அவனை மனப்பிறழ்ச்சியாளனாகவே இசச்சமூகம் கருதும். விளக்கம் போதுமானது என்று நினைக்கிறேன். (தொல்காப்பியம் குறித்து எனது கட்டுரை ஒன்றில் இதனை விளக்கியுள்ளேன். அது எனது மொழியும் நிலமும் என்கிற நூலில் உள்ளது. காலக்குறியிலும் வெளிவந்துள்ளது. படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் மின் அஞ்சலை தாருங்கள் PDF-ல் அனுப்பி வைக்கிறேன்.)

//காலம் செல்ல செல்ல இன்றைய பின் நவீனம் - கோட்பாடு(நீங்கள் சொல்லும் புரிதலில்) என்ற அளவில், மக்களின் இயல்பாக கொள்ளப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்பட்டு தகர்ப்பமைப்பு ஆய்வுக்கு உட்ப்படுத்தப்படும்... Chain Reaction...//

படலாம். தற்சமயம் பின்நவினத்துவம் செத்துவிட்டதாக அறிவிப்புகளும் நூட்களும் வருகின்றன. உருவான சிந்தனை எதுவும் சாவதி்ல்லை. தவிரவும், பின்நவீனத்தவம் சாவதில் நமக்கு ஒன்றும் பெரிய இழப்பொ பாலூற்றி 16 கொண்டாடும் நிலையோ இல்லை. ஆணால், இப்படி கூறுபவர்கள் எதனை நிரூபிக்க முயலுகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதற்கான அரசியல்தான் பிரச்சனைக்குரியது. விவாதத்திற்கு வெளியே போகவேண்டாம்.

பின் அமைப்பியலை(பின்நவீனத்தவ கோட்பாடு என்கிற அர்தத்தில்) தாண்டிச் செல்லக்கூடிய தெல்லஸ்-கொத்தாரி என்கிற இரு பிரஞ்சு சிந்தனையாளர்களின் கொட்பாடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மொழியின் அடிப்படையான உருவக அமைப்புகளையே மாற்றி, அடுத்த தளத்திற்கு எடுத்த செல்கிறார்கள். ஆக, நமது சூழலில் நாம் இன்னும் இந்த விவாத தளத்தைவிட்டு இன்னும் நகரவில்லை. காரணம், இவை புரிந்தால்தான் அடுத்த கட்ட சிந்தனைகளும் புரியும்.

//இப்போதுள்ள உலகமயமாக்கலின் வீச்சு இல்லாவிட்டாலும் சிறு சிறு சமுதாயதுக்குள் சிறிய அளவில், கட்டுடைப்புகள், பின் அமைப்பியல் அலசல்கள் இருந்தே இருக்க வேண்டும்...
பின் நவீனத்துவம் எங்களுக்கு சொந்தமானது என்று 1968-க்கு பிறகு வந்த நாம் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?.....//

நண்பரே.. மிண்டும் மீண்டும் பழைய கேள்விகளையே மாற்றி மாற்றி கேட்கிறீர்கள். பின்நவீனத்தவம் ஒரு அலசல்முறை அல்ல. இரண்டாம் உலக்பபோருக்கு பிந்தைய சமூகமே பின்நவீனத்துவ சமூகமாக வரையறுக்கப்படுகிறது.

பிரடரிக் ஜேம்ஸனின் சில கருத்துக்களை விளக்குகிறேன். முதலாளித்தவத்தின் ஒரு குறிப்பிட்ட வகையான பண்பாட்டு உருவாக்கமே நவீனத்தவம் மற்றம் பின்நவீனத்தவம் என்பது. இங்கு மார்க்சீயம் முன்வைக்கும் சமூகம் என்கிற கட்டமைப்பு பற்றிய புரிதல் அவசியம். சமூகம் என்பது பொருளியல் அடித்தளம் மற்றம் பண்பாடு உள்ளிட்ட இதர அமைப்புகளைக் கொண்ட மேற்கட்டுமானம் என்கிற அமைப்பைக் கொண்டது. அதாவது பொருளியல் அடித்தளத்தின் மேல்தான் எந்த ஒருபண்பாட்டு அமைப்பும் நிற்கமுடியும். அல்லது பண்பாட்டு அமைப்பு என்பது பொருளியல் அடித்தளத்தால்தான் உருவாக்கப்படுகிறது. முதலாளியம் 3 முக்கிய கட்டங்களில் தனது குறிப்பான பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டது. 1. சந்தை முதலாளியம் (market capitalism) - 18 துவங்கி 19-ஆம் நூற்றாண்டு இறுதிவரை - இக்காலகட்டத்தில் உருவான தொழில் நுட்பங்கள் அதாவது நீராவி எஞ்சின் போன்ற எந்திரங்கள் அதற்கான அழகியலாக உருவாக்கிக் கொண்டதே யதார்த்தவாதம். 2. எதேச்சதிகார முதலாளியம் (monopoly capitaliam)-இது 19-ஆம் நூற்றாண்டின் இறதியிலிருந்து இரண்டாம் உலகப்போர்வரை- இது மின் ஆற்றல் சார்ந்த தொழிற்நுட்பச் சாதனங்களை உருவாக்கியது. இது நவீனகாலம் என்கிற modernism காலமாகும். 3. பண்ணாட்டு அல்லது நுகர்வு முதலாளியம் (multinational or consumer capitalism) - இது தற்காலம். இது மின்னணுவியல் மற்றும் உட்கருவியல் (eloctronics and nuclear technology) சார்ந்த தொழில்நுட்ப காலகட்டம். இதுவே பி்ன்நவீனத்துவ காலம்.
//---கட்டுடைத்தல் என்பது ஒரு தனி கூறு, பின்னவினத்துவம் என்பது தனிக்கூறு கட்டுடைப்பது தான் பின்னவினதுவம் என்று நம்பும் மக்கள் இருக்கும் இங்கே எப்படி உண்மையான பின் நவினத்துவம் வரும்?---//

இது முற்றிலும் சரியே. பின்நவினத்தவம் மொத்தத்துவ (totality) சிந்தனைகளை மறுக்கிறது. ஒழுங்கமைப்புகளை மறுக்கிறது. உலகம் முழுவதற்குமான சிந்தனைகளை மொத்தத்துவத்தை கொண்ட எல்லாவற்றையும் பெருங்கதையாடல் என்றும், அதற்கு பதிலாக சிறுகதையாடல்களை அதாவது small practice, local events ஆகியவற்றைக் கொண்டதாக கட்டமைக்க வேண்டும் என்கிறது. இவை விவாதத்திற்கு உரியவை. இதனை நாவல் சிறுகதை என்கிற பெரிய சிறிய என்கிற அளவடிப்படையில் புரிந்தகொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
//வவ்வாலார் ஜாலி ஜம்பரின் பதிவில் கூறிய அதே குழப்பம் தான் எனக்கும்...
தகர்ப்பமைப்பிற்கும், பின் நவீனத்துவத்திற்கும் உள்ள நேரடி தொடர்பு என்ன... அல்லது ஒன்றினால் ஒன்று ஆக்க படுகிறதா? ஆமாம் என்றால் எந்த ஒன்றினால் எந்த ஒன்று ஆக்க படுகிறது?...//

இது புரிதல் குழப்பமே தவிர வேறு இல்லை. உதாரணமாக, மனிதனின் மையமாக ஆத்மா என்பதை இதுவரையிலான தத்துவங்கள் சொல்லி வந்துள்ளன. தகர்ப்பமைப்பு இந்த சொல்லாடலின் முரணை முன் கொண்டு வருகிறது. அதாவது, ஆத்மா என்பது உடலை ஒடுக்கி உள்ளிருத்துகிறது. அல்லது ஆத்மா பற்றிய பேச்சு உடல்பற்றிய பேச்சை மறுத்ததே உருவாகுகிறது. தனது தீவிர தர்க்கத்தால் இம்முரணை தலைகீழாக்கி ஆத்மா என்பதை உடல் பற்றிய பேச்சின் மூலம் தகர்க்கிறது. இப்படியாக, மனிதனின் மையமாக கருதிவந்த ஆத்மா சிதைக்கப்படுகிறது. இவ்வாறு மையம் அழக்கப்பட்ட மனித நிலையே பின்நவினத்தவநிலையாக முன்வைக்கப்படுகிறது.


//முற்றும் துறந்தவன் என்றுயாருமே கிடையாது....முற்றும் துறந்தவன் என்றுசொல்லி கொள்ளும் முனிவன் கூடமுக்தி மேல் மோகம் கொண்டிருப்பான்..//

இதைதான் புத்தரை உதாரணம் காட்டி சின்னப்புள்ளத்தனமால இருக்கு என்ற எழுதியிருந்தேன். விடமாட்டிங்க போலிருக்கு. இதில் வரும் முக்தி என்பதை பின்நவீனத்தவ வார்த்தையில் கூறினால் பெருங்கதையாடல் என்பது இதுதாதன். கணந்தோறும் வாழ்வதே பின் நவீனத்தவம். இப்படி முக்தி என்று முற்றம் துறந்து (சொர்ணமாலிகா துவங்கி கோவில் பூட்டுவரை துறப்பதல்ல) இறதிநாளிற்காக வாழ்வதல்ல.

//Pseudo-Post Modernism பற்றி கூறிய வவ்வாலாரை சீரியசான ஆள் என்று சுகுணா திவாகர் கூறினாரே?அது கூட ஒரு சமுதாய அமைப்பியல் உருவாக்கிய கூற்று..பிரதி.. அதையும் கட்டவிழ்க்கும் முறையில் மையமற்றதாக செய்து புதிய ஒழுங்கை முன் வைத்தால் நானும் பின் நவீனத்துவ சூழலுக்கு வந்து விட்டேன் என்று அர்த்தமா?//

இந்த ஆட்டத்திற்கு நான் வரல. போலியான பின்நவீனத்தவம் என்று கூறும் வவ்வாலார் (அது என்னா சார் வள்ளலார் மாதிரி) சரியான பின்நவீனத்தவத்தை விவரிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பின்நவீனத்துவ பிணம் இதுதான் எனக்காட்டுவது சரியா? எனத் தெரியவில்லை.

"வித்தியாசம் அதிகமில்லை
நான் கவிதை எழுதுகிறேன்.
என்மகன் -
தீப்பெட்டி சேகரிக்கறான்."
- விகரமாதித்யன்.

மாயன்சார் அப்படி என்ன ஆர்வம் என்னை வம்பில் மாட்டிவிட...
-ஜமாலன் (17-10-2007 மதியம் 12:09 சவுதி நேரம்.

பின்நவீனத்துவம் எனும்... பகுதி-2

பின் நவீனத்துவம் குறித்தான எனது முந்தைய பதிவிற்கு மாயன் எழுப்பியுள்ள கீழ்கண்ட பின்னோட்டமும், அதற்கான விவாதக் குறிப்புகளும் ஒரு பதிவாக வெளியிடப்படுகிறது.. மேலதிக விவாதத்திற்காக...

மாயனின் பின்னோட்டம்.
"பின் அமைப்பியல் முறையியலை- அதாவது ஒரு அமைப்பு சார்ந்த கோட்ப்பாட்டின் மையமிழப்பை அல்லது மையமழிப்பை பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை அவலங்களை வெளிக்கொணருத்லை தான் பின் நவீனத்துவம் என்கிறீர்கள்...
இப்படி தெளிவா முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல?
அப்போ இது இந்துயிஸத்துக்கும்,பெரியாரியத்துக்கும், மார்க்ஸியத்துக்கும் எல்லாத்துக்குமே பொருந்தும் இல்லையா?ஏன்னா இவை எல்லாமே அமைப்பியியலால் அலசப்படக்கூடிய அமைப்பு ஒழுங்குகள்...
எப்போ நம்மால பின் நவீனத்துவத்துக்கும் ஒரு கோட்பாடு வகுத்து (சுற்றிக்கொண்டு) விளக்க முடிஞ்சுதோ அப்போ அதுவும் ஒரு அமைப்பு ஒழுங்கு ஆயிடுச்சு.(நீங்க தான் விளக்கியிருக்கீங்க..)
அப்போ அதுக்கும் ஒரு மையம் அமைஞ்சுடுச்சு, அமைப்பியலால் அலசப்பட கூடிய ஒரு அமைப்பு ஒழுங்காவும் மாறிடுச்சு. கட்டுடைத்தல், மையமிழப்பு எல்லாம் இதுக்கும் உண்டு... அதாவது இதுவே ஒரு பின் அமைப்பு முறையியலாயிடும்.. பின் நவீனத்துவதுக்கு இப்போ சொன்ன எந்த இயல்பும் இதுக்கு இல்லாம போயிடும்...(Cease To Exist) இது ஒரு Chain Reaction மாதிரின்னு நினைக்கிறேன்..
இதுக்கும் The Big Bang Theoryக்கும் தான் தொடர்பு இருக்கும்னு எனக்கு தோணுது.. எதுக்கும் விஜயக்காந்த் சாரை ஒரு வார்த்தை கேட்டுப்போம்..."

இனி எனது விவாதத்தை தொடர்கிறேன்.

புரட்(டு)சி கலைஞர் விசயகாந்தின் கொ.ப.செ. மதிப்பிற்குரிய மாயன் அவர்களுக்கு...

பின்நவீனத்துவம் குறித்து சுருக்கமாக விளக்க முனைவதால், பல வார்த்தைகளை புதிய அர்த்தங்களில் விளக்கவில்லை. அதற்காக அவற்றிற்கு பழகிய அர்தங்களை பயன்படுத்த முடியாது. உதாரணமாக கோட்பாடு என்பதை நீங்கள் ஒரு மையத்துவ சிந்தனை போன்று புரிந்து கொள்கிறீர்கள். கோட்பாடு என்பது இயல்பானதாக மக்கள் விளங்கிக் கொண்டிருக்கும் பொதுபுத்தியை கேள்விக்குட்படுத்தி, அது இயல்பற்றதுதான், வரலாற்றில் கட்டமைக்கப்பட்டதுதான் என்பதை அம்பலப்படுத்தி மற்றொரு புதிய ஒழுங்கை முன்வைப்பது. (இவ்வறையறையில் எல்லா சித்தாங்கள், தத்துவங்கள், இஸங்களையும் பொறுத்திக் கொள்ளலாம்.) அவ்வொழுங்குகள் மக்களிடம் புழக்கத்திற்கு வந்தபின் நாளடைவில் அதுவே இயல்பானதாக மாறி தனது கட்டமைவு வரலாற்றை மறைத்துவிடும். உண்மையில் இப்படி மறைவாக இயங்கும் கட்டமைப்புகளை உடைத்து வெளிப்படுததுவதுதான் தகர்ப்பமைப்பு ஆய்வுமுறை. அதற்கு மொழி என்பது ஒரு கட்டுமானம் என்கிற அடிப்படையிலிருந்து துவங்குகிறது. தெரிதா தகர்ப்பமைப்பு வாதமும் தகர்பபமைப்பிற்கு உட்பட்டதே என்பதை ஏற்றுக் கொண்டே உள்ளார். (மார்க்ஸ்கூட் மார்கஸியம் தேவையற்ற ஒர சமுகமே தேவை என்கிறார்.) இதன்பொருள் மதங்களின் புணித மறைகளும், சரொஜாதேவி (தெரியமா? மாயன்... பம்பரம்விட்ட தலைவரிடம் கேளுங்கள் தெரியும்) கதைகளும் மொழிக்கட்டுமானங்களே. அதனால் சரோஜதேவி தாழ்ந்தது, புணிதமறை உயர்ந்தது என்பது அதிகாரம். அதனை உடைத்தெறிவோம் என்கிற புரட்சிகர நிலைப்பாடே தகர்ப்பமைப்பு. நிறக.

இன்று நம் பழக்கத்தில் இயல்பானதாக உள்ள ஆண், பெண் பாலின வேறுபாடு தொடங்கி தேசியம், குடிமகன், வாழ்க்கை போன்ற பல விஷயங்கள் இப்படித்தான் ஒரு வரலாற்று கட்டமைவுகள் என்பதை பின்-அமைப்பியல் அம்பலப்படுத்துகிறது. (எனது மற்றொரு பதிவில் பாலினக் கட்டுமானம் (gendor construction) பற்றியும் பாலியல் கட்டுமானம் பற்றியும் விளக்கியுள்ளேன்.) இப்படி பழகிய வழக்கங்கள் நவீன தொண்மமாக கருதி அதனை எதிர்க்கும் அல்லது அவற்றில் இருந்து விலகும் நிலையை பின்நவீனத்துவம் எடுக்கிறது. இதன் எதிர்விளைவாக உருவாகும் அரசியல் நிலைபாடுகளே இந்து மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதங்கள். (மேலதிக விளக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து ஒரு விரிவான கட்டுரை எனது நூலில் உள்ளதால், அதனை விடுகிறேன் இங்கு.)

குறிப்பாக இதுவரையிலான சிந்தனைகள் மனிதனை மையமாக கொண்டு வந்தவை என்பதால் மனித மனத்தில் உட்செறிக்கப்பட்ட வன்முறை என்பது ஏதோ ஒரு வடிவில் சமூகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அதனால் மனிதமுதல்வாத அல்லது மனிதமையவாத சிந்தனைகளுக்கு பதிலாக அமைப்புகளை சிதைத்து மையமிழககச் செய்யும் ஒரு இயக்க நிலையிலான சிந்தனையே தேவை என்ற நிலையிலும், அதுவே ஒரு ஒழுங்குமுறையாக மாறிவிடாத இயக்கநிலையில் இருப்பதான சிந்தனையாகவுமே தகர்ப்பமைப்பு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அதாவது மனிதன் என்பதை ஒரு சொல்லாடலாகவும் வரலாற்று கட்டமைப்பாகவும் அல்லது ஒரு பிரதியாகவும் பார்க்கிறது. (இங்கு சொல்லாடல், வரலாற்று கட்டமைப்பு மற்றும் பிரதி ஆகிய சொற்கள் பின்அமைப்பியல்வாதிகளின் புதிய அர்ததங்களில் பிரயோகிக்கப்படுகிறது என்பதை நினைவில் வைக்கவும்.) இதனை பின்நவீனத்தவம் தனது ஆய்விற்கான முறையியலாக பயன்படுத்துகிறது. தெளிவாகச் சொன்னால், பின்நவீனத்தவம் என்பத ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். அதாவது 1. செவ்வில் காலம் - classical age (before 18-th centuary) 2. நவீனகாலம் - modern age (after french revelotion - birth fo renaisence) 3. பின்நவீன காலம்- postmodern age (current period - starts with failure of 1968 students revolution in France). இவையெல்லாம் ஐரோப்பிய சிந்தனை என்று நீங்கள் ஜல்லியடிக்க முடியாது. காரணம், வெள்ளையர் ஆதிக்கம் அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவானதற்கு பிறகு உலகம் என்பது ஒரு பொதுமைப்படத்தலுக்கு வந்துவிட்டது. அதனை உலகமயமாக்கல் என்பது தீவிரப்படுத்திவிட்டது. உலகச்சிந்தனைகளின் பாதிப்புகள் இல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் இல்லை. அதிலும் குறிப்பாக கணிப்பொறி யுகத்தில் அறிவு என்பது மிகச்சாதரணமாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு கடைவிரிப்பாக கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடையும் நிலையை அடைந்துள்ளது. அறிவின் தன்மை அதை அடையும் முறை ஆகியவை முற்றிலும் மாறியிருப்பதை நிங்கள் உணரலாம். பின்நவீனத்துவம் என்பது கனிப்பொறிக் காலக்கட்டத்தின் ஒரு கொட்பாட்டு வர்ணனை என்றுகூடக் கூறலாம்.

இன்றைய பின்காலணீயச் சூழலில் அமேரிக்க -ஐரோப்பிய மேலண்மை என்பது பண்பாட்டு ஏகாதிபத்தியமாகவும், மறைமுகமாக உலக நிதிமூலதன அமைப்புகள் (IMF, World Bank and WTO, டங்கல் மற்றும் காட் ஒப்பந்தங்கள்) மூலமும் உலகை ஆண்டு வருகிறது. உலகெங்கிலும் தேசிய இனப்போராட்டங்கள், மத அடிப்படைவாதங்கள், சூழலியல் போராட்டங்கள், உலக பயங்கரவாதம் (Global Terrarisam) போன்றவற்றை இவை வளர்த்து வருகின்றன. இந்த உலகச் சூழலை எதிர்கொள்வதற்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட பார்வையோ தத்துவமோ இல்லை என்பதுடன் அப்படி ஒன்று சாத்தியமே இல்லை என்கிறது. காரணம், நீட்ஷே கூறியதுபோல "நாம் கடவுளை கைவிட முடியும் என்று தோன்றவில்லை. காரணம் நாம் இன்னும் இலக்கணத்தை கைவிடவில்லை." கடவுள் இற்ந்துவிட்டார் என்று அறிவித்த நீட்ஷேதான் இதனையும் கூறினார். இலக்கணம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட மொழி. அதைதான் பெரியார் கறைபடிந்த மொழி என்றார்.

மனித குலத்தின் அதீத வளர்ச்சி மிருகங்களைவிட கேவலமான இரண்டு உலக யுத்தங்களை நடத்தி மனித குலத்தை அழித்து ஓய்ந்ததது ஆதிக்க வெறியால். இனி மனித குலம் தழைப்பதற்கான மகிழ்வுடன் வன்முறையற்று வாழ்வதற்கான எந்த ஒரு அடிப்படை தர்க்கமும் இல்லை என்கிற சூழல். மனித விடுதலை பேசிய அனைத்து தத்துவங்களாலும் இப்பேரழிவுகளை தடுக்க முடியவில்லை. மனிதன் நம்பிக்கை கொள்வதற்கான எந்த மையமும் இல்லை. இதையே பின் நவீனத்துவ சூழல் என்கிறோம்.இதன்பொருள் பின்நவீனத்துவாதி என்கிற நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியாது என்பதுதான். காரணம், பின்நவீனத்துவம் என்பது ஒரு சமூகவடிவம். இதில் தனது தன்னிலைய மையமற்றதாக வைத்துக் கோள்ளும் தந்திரங்களை கண்டடைந்தவர்களே பின்நவீனத்துவவாதிகள். இதில்தான் மனப்பிறழ்ச்சியாளர்கள் துவங்கி சித்தர்கள்வரை அடங்குகிறார்கள். அது கிடக்கட்டும்.

இந்த பின்நவீனத்துவ சூழலை மார்கிசிய விமர்சகர்கள் ஏகாதிபத்தியத்தின் உச்சகட்டவிளைவாக பார்க்கிறார்கள். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு போருடன், அதனை அழித்து ஒழிப்பதின் மூலமே சாத்தியம் என்கிறார்கள். ஆணால், பின்நவீனத்து ஆதரவாளர்கள் மார்கிசியமும் ஒரு பெருங்கதையாடல் என்று அதன் முறைமைகளையும் மறுக்கிறார்கள். பின்நவீனத்துவத்தை மார்கிசியத்திற்குள் வைத்து புரிந்து கொண்டு தங்களது உரையாடலை நடத்தும் மார்கசிய அறிஞர்களும் இருக்கிறார்கள்.

//அப்போ அதுக்கும் ஒரு மையம் அமைஞ்சுடுச்சு, அமைப்பியலால் அலசப்பட கூடிய ஒரு அமைப்பு ஒழுங்காவும் மாறிடுச்சு. கட்டுடைத்தல், மையமிழப்பு எல்லாம் இதுக்கும் உண்டு... அதாவது இதுவே ஒரு பின் அமைப்பு முறையியலாயிடும்.. பின் நவீனத்துவதுக்கு இப்போ சொன்ன எந்த இயல்பும் இதுக்கு இல்லாம போயிடும்...(Cease To Exist) இது ஒரு Chain Reaction மாதிரின்னு நினைக்கிறேன்..//

"புத்தர் ஆசையை ஒழி என்று ஆசைப்பட்டார்" என்கிற சின்னப்புள்ளத்தனமான வாதமால இருக்கு இது. புத்தர் கூறியது ஆசை அல்ல. அது வேட்கை அல்லது விழைவு (விழைச்சு) (desire). அதை நமது லெளகீக ஆசையுடன் இணைப்பது தவறு. வேட்கைகளின் அரசியலையும் பின்நவீனத்துவம் விரிவாக விளக்கி, அதன் அடிப்படகளை தகர்க்கிறது. அவை மட்டுமே தனியாக விளக்கப்பட வேண்டியவை.

அடுத்து மாயன், ஒன்றை விளக்கிவிட்டாலே அது மையம் உள்ள சிந்தனை என்பதாக புரிந்து கொள்கிறீர்கள். மையமற்ற சிந்தனை என்பதை மொழியால் விளக்க முடியாததாகத்தன் இருக்கும். அப்படி ஒன்று சாத்தியமே இல்லை. மொழி என்பது ஒரு மனித உறுப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நினைவிழி மனம் என்பது மொழியால் அல்லது மொழிபோல கட்டமைக்கப் பட்டுள்ளது. (இங்கு நினைவிலி மனம் என்றால் என்ன என்பது குறித்து விரிவான புரிதல் அவசியம்.) வேறுவிதமாக கூறினால், நினைவிலி என்பதே மொழிதான். அல்லது மொழி நினைவிலியாக உள்ளது. அதனால் பேசப்படும் மொழி பேசாத மொழியால்தான் கட்டமைக்கப்படுகிறது. அல்லது பேச்சு என்பது நமது தன்னிலையின் தெர்வுப்பரப்பின் அடிப்படையில் பலவற்றை தேர்விலிருந்து விலக்கியே உருவாகுகிறது. இதைதான் பேசாப்பொருளை பேசுதல் என்பார்கள். பெருங்கதையாடல்களுக்கான காலம் மறைந்து விட்டதை அறிவிப்பதே பின்நவீனத்துவ காலகட்டம் என்றால் மிகையாகாது.ஆணால் இக்கருத்தை மறுக்கிறார் பிரடரிக் ஜேம்சன் என்கிற மார்க்சியவாதி. பெருங்கதையாடல்கள் மறைவதில்லை, அவை மறைவாக இயக்கம் கொள்கின்றன என்றும் இம்மறைவியக்கத்தை அரசியல் நினைவிலி என்கிறார். இது வேறொரு விவாதம். பின்நவீனத்துவம் செத்துவிட்டது எனக்கூறும் பிணந்தூக்கும் பேராளர்களுக்கான ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்பேர்ட்டாக வோறரு பதிவு எழுதும் உத்தேசம் என்பதால் அதனை விடுகிறேன் இங்கு.

உங்கள் வாதத்தில் ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் உட்கரு சங்கிலித்தொடர் வினை (nuclear chain reaction) போன்றதுதான் பின்நவீனத்தவ ஆதரவாளர்கள் முன்வைக்கும் ஒரு இயக்க நிலை. குவண்டம் எந்திரவியல் இச்சிந்தனைமுறைக்கு நிறைய பங்களிப்பை செய்துள்ளது.

//இதுக்கும் The Big Bang Theoryக்கும் தான் தொடர்பு இருக்கும்னு எனக்கு தோணுது.. எதுக்கும் விஜயக்காந்த் சாரை ஒரு வார்த்தை கேட்டுப்போம்..."//

bigbang பற்றி உங்களுக்குத் தெரியும் என்பதால் அதை இங்கு quote பன்றீங்களா? அதற்கான ஆதரங்கள் இன்னும் விவாதத்தில்தான் இருக்கின்றன. பிக்பாஃங்கை ஆதரிக்கும் ஸ்டீபன் ஹாவ்கிங் இது குறித்து நிறைய விவாதிக்கிறார் . அவரிடம் முடிந்தால் கேளுங்கள். (விஜயகாந்திடம் கேட்டால் அதை வைத்து இந்திய பார்டரை தீவிரவாதியிடமிருந்து காப்பாத்த முடியுமா? அல்லது அடலீஸ்ட் ஒரு பம்பரமாவது கிடைக்குமா? என்று கேட்பார்.) இக்கோட்பாடு் எல்லா கடவுள் கொள்கைக்கும் ஆப்படிப்பதுடன், காலம் என்றால் என்ன என்பதையும், அதுவே ஒரு கட்டுமானம் என்பதையும் வெளிப்படுத்துகிறது. (பார்க்க A Breief History of Time - Stephan Hawking). காலத்தை physics அளவிட கற்னைக்காலம் என்கிற imaginary time என்கிற கருதுகோளை பயன்படுத்துகிறது. காலத்தின் கணக்கீட்டில் -t என்கிற ஒரு அளவீடு வருவத எதைக்குறிக்கிறது. காலம் பின்னோக்கி நகரும் என்பதையா? காலத்திற்கு அதன் திசை அவசியம். அதனை காலக்குறி (arrowaயய of time) எனலாம். aஇக்குறி முன்னோக்கிய திசையில் மட்டுமே குறியிடப்படக்கூடியது. இக்காலக்குறியை ஹாவ்கிங் 3-விதமாக பிரிக்கிறார். விரிவாக வேண்டாம். நமது காலக்கறி என்பது உளவியல் காலக்குறி (physicological arrow of time) என்கிறார். உளவியல்-நினைவிலி என இதை வளர்த்தெடுக்கலாம். காலம் என்பது சாஸ்வதமானதோ, நிலையானதோ அல்ல. அத விஞ்ஞானரீதியாக கட்டப்பட்டுள்ள ஒரு கருதுகோள்தான். யாரோ துவக்கிவைத்த காலத்தை விடாமல் காப்பாற்றியும் பின்பற்றியும் வருகிறோம். S.I.units ஐ காப்பாற்றிவரும் உலக அமைப்பானது ஒரு கடினாரத்தையும் காப்பாற்றிவிருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். நிறக.

எப்படி... மாயன்... பின்நவீனத்தும் இங்கெயும் தலை நீட்டுகிறது பாருங்கள் ஆமைமாதிரி.... இந்த ஆமை தொல்கதையில் வரும் அண்டத்தை முதுகில் தாங்கி பிடித்திருக்கும் பிரபஞ்ச ஆமை அல்ல என்பதை மட்டும் இங்கு நான் சொல்லிக் கொள்ள கடமைப்படடிருக்கிறேன்... விடமாட்டான் இந்த விடாது கருப்பு என மக்கள் தொலக்காட்சி எட்டுக்கு எட்டுடன் முடித்துக் கொள்கிறேன்.

-ஜமாலன்
(15-10-2007 மாலை 06:05 சவுதி நேரம்.)

பின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சி

மரத்தின் கீழ் உறங்கிய மதுராபுரி மன்னனுக்கு பட்ஷி பாஷைகள் தெரியும் என்ற அறியாததால் அண்டரண்ட பட்சிகள் கூறத் துவங்கின... இவ்வாறாக... கதைகள்தான் உலகை படைக்கின்றன. தனது முயற்சியல் சறறும் மனம் தளராத விக்ரமாதித்தன் மண்டை வெடிக்கும் மரண பயத்துடன் தனது தோளில் வேதாளத்தை தூக்கித் திரிந்தபடி அது சொல்லும் கதையைக் கேட்கத்துவங்கினான். தனது கழுத்திற்கு நேராக நீட்டப்பட்ட வாளுடன் தனது சாவைத் தள்ளிப்போட 1001-அரேபியக்கதைகளை சொல்லத்துவங்கினாள் ஷகர்சாதி. இப்படியாக எத்தனையோ கதையாடல்கள் சாவிற்கு எதிரான சாட்சிகளாக இவ்வுலகு பற்றி விவரித்தன அவற்றில் ஒரு கதையாடலே பின்நவீனத்தவம் என்பது.

பின்நவீனத்துவம் என்பது ஒரு சித்தாந்தமோ அல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடோ அல்ல. வரையறைகளையும் சேர்த்து மறுப்பதால் இன்னும் வரையறுக்கப்படாத நிலையே உள்ளது. அது ஒரு மையமிழந்த சமுகம் பற்றிய வர்ணணையே. பின்நவீனத்துவம் என்பது ஒரு ஆய்வுமுறையும் அல்ல (தயவுசெய்து நான் படித்தவரை என்பதை வரிக்கு வரி சேர்த்துக் கொள்ளவும். பிறகு பின்நவீனத்துவ பிராண்டு மேனேஜர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள முடியாது.) அதற்கென கோட்பாட்டு பார்வை இருந்தால் மட்டுமே அதனை ஆய்வுமுறையாக பயன்படுத்த முடியும். பின்நவீனத்தவத்தின் கோட்பாட்டு பார்வையாக "இன்றைய உலகு நவீனகாலம் உருவாக்கிய பல நவீன தொன்மங்களால் கட்டப்பட்டுள்ளது" என்பதைச் சொல்லலாம்.


உதாரணமாக பெரியாரியம். அது பிரதியை பகுத்தறிவு அடிப்படையில் அலசும் ஒரு ஆய்வுமுறையை நமக்குத் தருகிறது. மார்க்சியம் - பிரதியை சமூகத்தின் வர்க்க அடிப்படையில் ஆய்வு செய்யச் சொல்கிறது. அமைப்பியல்- பிரதியின் உள் இயங்கும் பல அமைப்பு மையங்களை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வுமுறை. இது மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்காரியம் உட்பட எல்லா கோட்பாடுகளையும் ஒரு அமைப்பு ஒழுங்காக கருதி பிரதிக்குள் அப்பார்வைகள் எப்படி அமைஉருகின்றன என்பதை ஆய்வு செய்வதாகும்.

அமைப்பியல்வாதம் உலகலாவிய அனைத்து சிந்தனை முறைகளிலும் உள்ள அமைப்பை கண்டு அறிவித்தது. அதாவது எந்த ஒன்றையும் ஒரு அமைப்பிற்குள் வைத்துதான் மனித மனம் புரிந்து கொள்ள முடியும். அர்த்தம் என்பது அமைப்பிற்குள் அமையும் உறவின் வழியாகவே உருவாகுகிறது என்கிறது அமைப்பியல். இவ்வுறவு வித்தியாசங்களின் வழியே கட்டமைக்கப்படுகிறது. சான்றாக, மரம் என்பது மரம் அல்லாத பிற பொருட்களின் உடன் உருவாகும் வித்தியாசத்தால்தான் அர்த்தமாகிறது. (இந்த பிற என்பதையே லக்கான் ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கிறார்) அதாவது மரம் என்பது செடி அல்ல, சட்டை அல்ல, போன்ற இன்னபிற உலகலாவிய அனைத்து பொருட்களுடன் இல்லை என்கிற எதிர்மறை உறவைக் கொள்வதன்மூலமே உருவாகுகிறது. அல்லது மரம் என்பது மற்ற பொருட்களுடன் கொள்ளும் வித்தியாசமான உறவில்தான் அதனை தனித்து நம்மால் உணரமுடியும். இச்சொல்லின் அர்த்தம் இந்த வித்தியாசத்தின் அடிப்படையில் அது அமையும் அமைப்பிற்குள்தான் அர்த்தமாகிறது. அதாவது இச்சொல் மரம் என்கிற மரத்தையும் குறிக்கும் அதே வேளையில் மரச்சாமான்கள் செய்யும் மூலப்பொருள் துவங்கி, இலக்கிய குறியீடுகளில் "மரமாய் நின்றான்" என்பதான எண்ணற்ற அர்த்த சாத்தியங்களையும் கொண்டது. அடிப்படையில் மரம் என்பது ஒரு குறியாக உள்ளது. இது மனித மூளையில் நிகழும் குறித்தல் என்கிற செயல்பாடால் அர்த்தமாகிறது. (இது விரிவாக அடுத்த தனிப்பதிவில்) . ஆக, மொழியியல் வழியாக உருவான இச்சிந்தனை மனித மூளை என்கிற அமைப்பில், மொழி ஒரு பிரத்யேக செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது அல்லது மொழி என்பது மூளையின் ஒரு உருப்பமைவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டியது ஐம்புலன்களைப்போல மொழி என்பதை ஆறாவது புலனாக கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்டக் கருத்து. இச்சிந்தனை முறைகளுக்கு மொழியியல் கொள்கை அதுவும் சசூர் என்கிற ஸ்வீடிஸ் மொழியியலாளரால் முன்வைக்கப்பட்ட அமைப்பு மொழியியலே அடிப்படை. ஆக, அமைப்பியம் எல்லாவற்றிற்கும் அமைப்பு என்கிற ஒரு மையத்தை கண்டு அறிவித்தது.

பின் அமைப்பியம் என்பது அமைப்பியம் முன்வைத்து உலகலாவிய அமைப்புகள் என்பதன்மீதான விமர்சனமாகத் துவங்கி... இவ்வமைப்புகள் அதிகாரத்தின் மையமாக இருப்பதாக அறிவித்தன. இம்மையங்களை சிதைப்பது, அழிப்பது அல்லது மறுப்பது என்பதன் வாயிலாக மையமற்ற சிந்தனையை முன்வைத்தன. இம்மையமற்ற சிந்தனை பல அறிவுத் துறைகளிலும் கிளைத்து பரவியது.

அக்கிளைகள் அதிகாரம் பற்றிய சொல்லாடல் ஆய்வாக பூஃககோவிடமும், அதிகாரம் கட்டமைக்கும் தன்னிலைகள் பற்றிய ஆய்வாக லக்கானிடமும், சிதைவாக்கம் அல்லது கட்டுடைப்பு அல்லது கட்டவிழ்ப்பு அல்லது தகர்ப்பமைப்பு (deconstruction என்பதற்கு இத்தனை வார்த்தைகள் தமிழில் ஏன் என்றால் அதன் ஆய்வு முறையை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்தான்) என்பதாக தெரிதாவிடமும், வாசகமைய விமர்சனமுறையாக ரோலான் பார்த்திடமும் கிளைத்தன. மார்க்சிய அடிப்படையில் அமைப்பியலை பின் அமைப்பியல் தளத்திற்கு நகர்த்தியவர் பூஃக்கொவின் பேராசியராக இருந்த லூயி அல்தூஸர் ஆவர்.

அதாவது, சிதைவாக்கம் என்பது செவ்வியல் பிரதிக்குள் மையமாக இயங்கும் ஒரு முரணில் ஆதிக்கம் வகிக்கும் ஒருகூறு பிறிதொரு கூறை வெளிப்படுத்தாமல் அதாவது பிரசன்னப்படுத்தாமல் ஒடுக்கிவைக்கும். ஆதிக்க கூறை தலைகீழாக்குவதன் மூலம் ஓடுக்கப்பட்ட கூறுக்கான வெளியை திறந்துவிடுவது. இது பிரதியின் மையமான அர்த்தத்தை பிரச்சனைப்படுத்திவிடும். அதாவது பிரதி தனது மைய அர்தத்தை இழந்துவிடும். பிரதியை சிதைத்து மறு ஆக்கம் செய்வதுதான் சிதைவாக்கம் அல்லது தகர்ப்பமைப்பு என்பது.

பிரதி என்றவுடன் எழுதப்பட்ட இலக்கியவகைமை மட்டுமல்ல. எல்லாமே பிரதிதான் என்பதுவே பின் அமைப்பியலின் நிலைப்பாடு. மனிதன் என்கிற கருத்தாக்கம்கூடஒரு பிரதிதான் என்கிறார் பூஃக்கோ. மனிதன் என்பது கூட 19ஆம் நூற்றாண்டு என்கிற செவ்வியல்கால கண்டுபிடிப்பு என்கிறார். இதன்பொருள் செவ்வியல் காலம் என்கிற 19-ஆம்நூற்றாண்டிற்கு முன்பு மனிதன் என்கிற பொதுமைப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் இல்லை. அதற்கு பகரமாக மனித உடல்களை குறிக்கும் பல சொல்லாடல்கள் இருந்தன. உதாரணமாக அடிமை, ஆண்டான் அல்லது சாதிய அடையாளப் பெயர் இன்னபிற...

மனிதன் என்பவனது உடலில் அவனது தன்னிலை (சஃப்ஜெக்ட்) எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது. ஒரு உடலானது ஆதிக்கத்தை ஏற்கும் அல்லது எதிர்க்கும் உடலாக எப்படி கட்டமைகிறது அதன் தன்னிலை உருவாக்கச் செய்ல்பாடுகள் எப்படி இயக்கமடைகின்றன என்பதை லக்கான் பிராய்டியத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கிறார். இவரின் கூற்றப்படி மனித உடலின் ஆழ்மனம் என்பது ஒரு மொழியைப்போல கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் சிந்திப்பதும் அல்லது உணர்வுதும் ஒரு மொழியில் நிகழ்வாக அல்லது ஒரு உள் பேச்சாக நமக்குள் நடைபெறுவதை நாம் அனுபவபூர்வமாக உணரமுடியும்.

இப் பின் அமைப்பியல் முறையியலை அதாவது மையமிழப்பை அல்லது மையமழிப்பை பின்நவீனத்துவ விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை முன் கொண்டு வருகிறார்கள். பின்நவீனத்துவ படைப்புகள் இம்மையமிழந்த சமூக அவலம் பற்றிய விவரணைகளை வெளிக் கொண்டுவருகிறது.

இதுவரையிலான மனிதனை உய்விக்க வந்ததாகக் கூறிக் கொண்ட தத்துவங்கள் துவங்கி மனிதவிடுதலைக் குறித்து நவீன உலகில் கதைத்த இஸங்கள்வரை எல்லாம் மனித நிலைபாடுகள் குறித்த பொதுவான மையங்களைக் கொண்டு பேசப்பட்ட கதையாடல்களே. இக்கதையாடல்களை பெருங்கதையாடல்கள் என்கிறார்கள் பின் நவீனத்துவவாதிகள். இனி சாத்தியமானது இம்மையமிழந்த மனிதனின் அல்லது இவ்வுலகின் சிறுகதையாடல்களே என்கிறார்கள். இதன் நீட்சி இனி ஆதிக்கத்திற்கு எதிரான உலகலாவிய பெரும் போராட்டங்கள் புரட்சிகள் சாத்தியமில்லை localized போராட்டங்களே அல்லது கலகங்களே சாத்தியம் என்பதாகும். பெருங்கதையாடல்கள் உருவாக்கும் புரட்சி அல்லது சமூக மாற்றங்கள் மீண்டும் ஒரு அதிகார மையமாக மாறி மனித குலத்திற்கு பெரும் அழிவைக் கொண்டுவரும் என்பதே. மார்கசியரான சமீர் அமீன் போன்றவர்கள் பின்நவீனத்தவம் என்பது உலக நிதிமூலதனக்குவியல் மற்றும் உலகமயமாக்கலின் விளைவால் வெளிப்படும் ஒரு கோட்பாடே. இது இயல்பிலேயே எதிர்புரட்சி தன்மை வாய்ந்தது என்கிறார்கள். உலகை நவீனத் தொண்மம் என்கிற புனைவடிப்படையில் பார்க்கும் பின்நவீனத்திற்கும் இந்திய சங்கர அத்வைத மாயாவாதத்திற்கும் குவாண்டம் எநத்திரவியலின் ஹைஷன்பஃர்க் நிச்சயமின்மைக் கோட்பாட்டிற்கும் (uncertinity principal) இடையில் ஒரு ஒற்றுமை இருப்பதை அறிய முடியும். இதனை இதன் கொண்டு எப்படி பார்ப்பது என்பது அவரவர்கண் விடப்படுகிறது. நிற்க.

தமிழில் கோணங்கியன் நாவல்கள் (பாழி மற்றும் பிதிரா) , சிறுகதைகள் (உப்புக் கத்தியல் மறையும் சிறுத்தைகள், பொம்மைகள் உடைபடும் நகரம்) இத்தகைய மையமற்ற மொழிப்புனைவுகளை பல மரபான மொழித் தொண்ம அமைப்புகளுடன் வெளிப்படுத்துகிறது. இது சில நேரங்களில் புரிதலுக்கு மிகவும் சிக்கலானதாகவும் வாசகனின் அறிவு மட்டத்தை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் இருப்பதால் தமிழ்சூழலில் இவரது எழுத்துக்கள் குறித்த பதிவுகள் விமர்சனங்கள் அரிதாக இருப்பதைக் காணலாம். அய்யனார் போன்ற பதிவுலக எழுத்தாளர்கள் இம்மையமிழந்த மொழிநடைக்கான முயற்சியை செய்கிறார்கள். அவரை முழுமையாக படித்த பிறகே அதைப்பற்றி பேசமுடியும். புரியாமை என்பது கோட்பாட்டின் சிக்கலுடனும் உள்ள ஒரு பண்பு என்பதையும் மறந்துவிடலாகாது. அதே சமயம் எழுத்தாளனின் புரிதலும் புரியமையை உருவாக்கிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கண்ட எழுத்துக்கள் எவ்வகை என்பது தனியான ஆய்விற்கு உரியது.

இக்குறிப்புகள் எளிமை கருதி சுருக்கமாக கூறப்பட்டவை, விரிவாக பேச இதில் எண்ணற்ற விஷயங்கள் இருப்பதாகக் கூறியபடி தனது கதைகளை கூறி முடித்த அண்டரண்ட பட்சி... பேரண்டமும் வியாபிக்கும் தனது இறக்கைகளை விரித்தபடி பறக்கத்துவங்கியது. கனவுபோலவே இதனைக் கேட்ட மதுராபுரி மன்னன் பரக்க பரக்க விழித்தபடி எழுந்து அமர்ந்தான, இதனைப்படிக்கும் ஒரு வாசகனைப்போல...

ரொம்ப தலைசுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல...

குறிப்பு: ஜாலிஜம்பர் என்கிற பதிவரின் பின்நவீனத்தவம் பற்றிய பதிவிற்க்கு 19-10-2007 அன்று இடப்பட்ட பின்னோட்டம் இங்கு சற்றே விரிவாக்கி மறு பிரசுரம் செய்யப்படுகிறது.

அன்புடன்
ஜமாலன்
(09-10-2007 மதியம் 12:46 சவுதி நேரம்)

பந்த்-ம் பாசிசமும்

இந்திய ஜனநாயகம் அவ்வப்பொழுது இப்படித்தான் 47-ல் அணிந்த தனது ஆடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு அம்மணமாக பல்லிளிக்கும். தமிழக பந்தை உச்சநீதிமன்றம் தடைசெய்ததன்மூலம் இந்த அம்மண நாடகம் இப்பொழுது மீண்டும் அரங்கேறியுள்ளது. எம்ஜியார் ஆட்சியில் ஈழப்பிரச்சனைக்கு ஆதரவாக ஒருநாள் பந்தும் உண்ணாவிரதமும் அரசால் நடத்தப்பட்டது. அப்போதைய எதிர்கட்சி திமுக அதனை ஆதரித்தது. ஆனால், இன்றைய அதிமுக உச்சநீதிமன்றத்தில் தடைகோரி பந்தை நிறுத்தி உள்ளது. இராமஜென்ம பூமி பாபர் மஸ்ஜித் பிரச்சனைக்காக கூட்டப்பட்ட முதல்வர்கள் மாநாட்டிற்கு காவி கட்டிச் சென்று "இராமருக்க இந்தியாவில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது" என்று இருமாப்புடன் பேசி இராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா மீண்டும் தனது காவிப்பற்றை காட்ட தமிழக பந்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார். காவிரிப் பிரச்சனைத்துவங்கி எல்லாவற்றிலும் இவிருகட்சிகளிடம் இந்த சக்களத்தி மணோபாவம் தொடர்ந்து தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சேதுக்கால்வாய் திட்டம் தமிழக மக்களின் அடித்தட்டு மக்களுக்கு என்ன பயன் விளைவிக்கப்போகிறது என்பதும் அது ஏற்படுத்தும் சூழலியல் பிரச்சனை (சில நிபுணர்கள் அப்படி ஒரு பிரச்சனையே அதில் இல்லை என்கிறார்கள்) என்பதும் இக்கால்வாய் நாளை அமேரிக்க கப்பல் வந்து கண்ணாகணிப்பதற்கான இராணுவ கேந்திரமாகக்கூட மாறலாம் என்பதும் ஒருபுறமிருக்க இது தமிழக மக்களுக்கான செல்வம் கொழிக்கும் திட்டம் போன்று ஒரு சித்திரம் காட்டப்படுகிறது. உண்மையில் 60-ஆண்டுகால பல வளர்ச்சித்திட்டங்கள் இந்திய மக்களை இன்னும் வறுமையிலும் பட்டினியிலும்தான் தள்ளியுள்ளது. ஏழைகள் பரம ஏழைகளாக மாறுவதும் மில்லியனர்கள் பில்லியனர்களாவதும்தான் இங்கு நடந்துவருகிறது. கூடங்குளம் அனுஉலைமுதல் ரிலையன்ஸ் பிரஷ்வரை பண்ணாட்டு மூலதனப்பிடியை இறுக்கும் எல்லா வளர்ச்சித்திட்டங்களும் மக்கள் நலன் என்கிற பெயரில்தான் முன்வைக்கப்படுகிறது. மக்கள் வாழ்க்கைத் தரமோ சொல்லவொண்ணாத்துயரில் மூழ்கிக் கொண்டிருப்பதுதான் யதார்த்தம்.

ஆக, சேதுக்கால்வாய்த் திட்டம் வழக்கமான பெருமுதலாளிய கட்டமைப்பிற்கும் பண்ணாட்டு மூலதனத்திற்குமே பல்லக்கு தூக்கப்போகும் ஒன்று என்றாலும், அதை தடை செய்ய முனையும் சக்திகள் எப்படிப்பட்டவை என்பது அவசியம் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

1. இத்திட்டத்திற்கு அடிகோல் நாட்டியது ப.ஜ.க மற்றும் செல்வியார் ஆட்சியில்தான். இதைச் சொல்லித்தான் கதறிக் கொண்டிருக்கிறார் கழகத் தலைவரும்.
2. இப்பொழுது ராமர் பாலத்தை கண்டெடுத்துள்ள சங்பரிவார்கள், இப்பிரச்சனையை ஒரு இந்துத்துவ மத வெறிப்பிரச்சனையாக மாற்ற முயல்கிறார்கள்.
3. இதனை வைத்த தாங்கள் இழந்த மக்கள் செல்வாக்கை பெற்றவிட முயல்கிறார்கள்.
4. இதற்கு தமிழக அதிமுக-வும் பல்லக்குத்தூக்குகிறது.

சரி, சேதுகால்வாய் திட்டத்தை நிறுத்திவிட்டு இந்த ராமர் பாலத்தை என்ன செய்யப் போகிறார்கள் இப்பரிவார்கள். கடலுக்குள் கரசேவை செய்து அதனை காக்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள். அத்திட்டத்திற்கு எந்த பண்ணாட்டு நிறவனமும் முதலீடு செய்யப் போவதில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதே கால்வாய்த்திட்டத்தை ராமர் கனவில் வந்து செய்யச் சொன்னதாக செய்தாலும் செய்வார்கள். ஆக, நிரூபிக்கப்படாத ராமர் பாலத்தைவிட குறைந்தபட்சம் தமிழக கடல் பரப்பை பரபரப்பான வியபார தளமாக்கப்போகும் சேதகால்வாய்த் திட்டம் மேலானது என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. ஒருகாலத்தில் கலாமின் கனவைப்போல இந்தியா வல்லரசாகி விட்டால் இலங்கையை நாட்டாமை செய்வதற்கான கடல் ஆதிக்கத்தளமாக இது மாறக்கூடும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையும் அது அறிவித்துள்ள வாசகமும்தான் ரொம்பவும் அதிர்ச்சியூட்டக்கூடியது. இந்த தடையில் உச்சநீதிமன்றம் பொதுமக்கள் நலனுக்கு பந்து எதிரானது என்றும் தனிப்பட்ட அரசியல் கட்சிகளைவிட மக்கள் நலன் மேலானது என பந்தை தமிழ்நாடு இனி செய்யக்கூடாது அதுபோல பிற மாநிலங்களும் செய்யக்கூடாது என்கிறது. இது நமக்கு கீழ்கண்ட கேள்விகளை எழுப்புகிறது.

1. பொதுமக்கள் என்கிற சொல்லை உச்ச நீதிமன்றம் எப்படி வரையறுக்கிறது? அல்லது பொதுமக்கள் என்கிற ஒரு சட்டரீதியான மக்கள் பிரிவு இருக்கிறதா? அதை தீர்மாணிக்கும் காரணி எது? பொதுவாக மக்களின் பெரும்பாண்மையை குறிக்கவே இச்சொல் வழக்கத்தில் உள்ளது. தவிர பொதுவான அதாவது தனக்கென்ற அடையாளமற்ற மக்கள் இருக்கிறார்களா? எல்லா மக்களுக்கும் ஒருகுறிப்பிட்ட அடையாளமோ அல்லது குறிப்பிட்ட நோக்கமோ இருக்கிறது.
2. அப்படியே பொதுமக்களக்கு பந்த் தீங்கு விளைவிக்கிறது அல்லது இடையூறு செய்கிறது என்று எந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் முடிவிற்கு வந்தது? பொதுமக்கள் அல்லது இப்பிரச்சனையில் பொதுமக்களாக குறிக்கப்படும் தமிழக மக்களிடம் ஏதெனும் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டு இந்த முடிவிற்கு வந்தார்களா?
3. பந்த் என்பது பொதுமக்கள் அல்லது பாதிப்பிற்குள்ளான ஒரு மக்கள் பிரிவு தனது உரிமையை நிலைநாட்டுவதற்கான ஜனநாயக அடிப்படையிலான ஒரு போராட்டவடிவம் அல்லது தனது எதிர்ப்பை முன்வைப்பதற்கான ஒரு வடிவம். இதனை தடை செய்வது மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாக ஆகாதா?
4. சரி, பந்தை தடை செய்யும் உச்சநீதிமன்றம் பொதுமக்களையும் பொது சொத்துகளையும் நாசம் செய்யும் மதக்கலவரம் துவங்கி சாதி, இன, குழு மோதல்களை தடை செய்ய என்ன வழிமுறை வைத்துள்ளது? இதுவரை அரசியல் பந்த்-களைவிட அதிகமான அழிவை உருவாக்கியவை இத்தகைய கலவரங்களே. குறைந்தபட்சம் இதற்கு முன்பு நடந்த கோவை துவங்கி குஜராத், மும்பை, பஞ்சாப், பழங்கடி இனங்களை அங்கீகரிக் கோரி நிகழும் கலவரங்கள் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான அரசு பயங்கரவாதம் நக்ஸலைட்டுகளை ஒழிப்பதாக சொல்லி பல கிராமங்களை அழிக்கும் காவல்துறை அராஜகங்கள் என நிகழ்ந்த பல மனிதப்படுகொலைகள் குறித்து எத்தனை விசாரணைகள் முடிவடைந்து குறிறவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையாவது உச்ச நீதி மன்றம் தெளிவுபடுத்துமா?
5. மதங்களை காக்கிறோம் என்கிற பெயரில் நிகழும் வன்முறைகளை மதச்சார்பற்ற இந்திய குடியரசு எப்படி அனுமதித்து வருகிறது? மத, சாதிகள், இனப் பெயரால் உள்ள கட்சிகளை அரசியல் சட்ட விதிமுறைப்படி ஏன் உச்ச நீதிமன்றம் தடை செய்வதில்லை?
6. சரி சேதுகால்வாய் திட்டம்குறித்து நாடளவில் நடந்துவரும் விவாதத்தை முடிவிற்கு கொண்டுவர ஜனநாயக முறைப்படி சம்பந்தப்பட்ட தமிழக மக்களிடம் ஏன் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அடிப்படையில் இத்திட்டத்தை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க உத்திரவிடவில்லை?
7. அல்லது ராமர் பாலம் இருக்கிறது என்று கூறி இத்திட்டத்தை கைவிடக்கோரும் அமைப்புகளிடம் அதற்கான ஆதாரங்களையாவது சமர்பிக்கும்படி ஏன் உத்திரவிடவில்லை?

இப்படி தெளிவற்ற ஒரு பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை எந்த நொக்கில் வழங்கியுள்ளது? பிரச்சனையை ஜனநாயகமுறைப்படி தீர்ப்பதற்கு பதிலாக, தடை என்கிற அடக்குமுறையை அனுமதிப்பது இந்திய அரசு எந்திரம் பாசிசமயமாகிவரும் போக்கையே காட்டுகிறது.

"பந்த் செய்வது மக்கள் உரிமை - அதை
தடை செய்வது பாசிசக் கொடுமை!"

-ஜமாலன்
01-10-2007 இரவு 02:53
Share |
ஜமாலன். Blogger இயக்குவது.