நசுக்கப்பட்ட நமது வரலாறு.

நசுக்கப்பட்ட நமது வரலாறு.
யுகங்களுக்கு முன்பு ஜன்ம பூமிகளின் வரலாறு இல்லை.
இவையெல்லாம் நேற்றுத்தான் நடந்தது.
நீயும், நானுமாய் உருவாக்கிய நமக்கான வரலாறாய்.

மிட்டாய் இனிப்பால் நினைவூட்டப்பட்ட
ஆரம்பப்பள்ளி சுதந்திர தினத்தில்-
குன்றுமுலைக் குமரியம்மன் கோயில் பிரகாரங்களில்...
அகற்றப்பட்டுக் கிடந்த புத்தபிக்குகளின் விக்ரகங்களுக்கு
வாழைப்பழம் வைத்து மகிழ்ந்நதபோது -

குளத்து மேட்டின் மரத்தடி லிங்கத்தி்ல்
கால்வைத்து மரமேறி விளையாடியபோது
தர்காவின் சுவரேறிக் குதித்து
மாங்காய் திருடித் தின்றபோது.

எட்டுக்கைகளுடன் கோரைப்பற்கள் வழிய
கையில் கத்தியுடன் காளியாடுவதை பார்த்து பயந்து
கூட்டத்தில் விரல் தேடி பற்றிக் கொண்டபோது

ஓணான் வாயில் புகையிலை தினித்து -
அதன் தள்ளாட்டத்தை ரசித்தபோது -
நேற்றுப்போலத்தான் இருக்கிறது
நீயும் நானும உருவாக்கிய நமக்கான வரலாறு.

அன்று போலல்ல இன்று...

உன் மனசைப்போல வெள்ளைச்சீருடையில்
காவி அழுக்கேற்றப்பட்டுவிட்டது,
சூலங்கள் பதிந்த உன் பார்வையில்
ஓணானாய் திரிகிறேன நான்.
வேதாதங்கள் சொருகப்பட்ட உனது மூளைக்கு
என் பேச்சு புரிபடாது என்ன செயய?
ஒரு நண்பனைப்பொலத்தான்
சொல்ல இருக்கிறது எல்லாம்.

பாசத்துடன் அண்ணனாய் பாவித்த நம் தங்கைகளில்
இன்று என் தங்கை மட்டும்
வேல்கம்பின் கூர்முனையால் கிழித்தெறியப்பட்டிருக்கிறாள்.

கனவுகளைச் சொல்லி நிலாச்சோறு ஊட்டிய அம்மாக்களில்
இன்று என் அம்மா மட்டும் முக்காடிடப்பட்டதால்
முந்தனை உருவி எரியப்பட்டிருக்கிறாள்.

வளர்ச்சிக்கான பாடங்களை
பொறுப்புடன் சொல்லித்தந்த தந்தைமார்களில்
இன்று என் தந்தை மட்டும்
நாயின் வாலில் சரவெடி கட்டி விரட்டி ரசித்ததைப்போல
தெருநெடுக விரட்டப்பட்டிருக்கிறார்.

கன்னிப் பொங்கலின்போது அக்காமார்களுடன்
ஆற்றங்கரையில் நாம் கட்டிய கோயில்கள்
இப்படி இடித்துச் சரிக்கத்தானா?

இருப்பின் வலியுணர்த்தும் நிமிடங்களுடன்
துயர் நிரம்பிய வாழ்வை பகிர்ந்த நட்பு
கடவுளின் பெயரால் கற்பழிக்கப்படுவதை
என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

நம் அசுத்தக்காற்றை சுவாசித்து
நமக்காய் உயிரியம் தயாரித்த தாவரங்களுக்கு
நாம் சுமையாகத் தெரியாதபோது -
பன்னெடுங்காலமாய் சுமந்த நட்பின் சுமை தெரியாது
என் மூச்சுக்காற்று உனக்கு
சுமையென சொல்லப்பட்டிருக்கிறது.

நண்பா! நமது பழியுணர்ச்சியால்
நம்மை மட்டுமல்ல நம் இனிய வாழ்வையும்
அவர்கள் கொன்றுகொண்டிருக்கிறார்கள்.

எங்கும் இருக்கத்தான் செய்கின்றனர் அவர்களைப்போல
காற்றுமண்டலத்தை களங்கப்படுத்திக் கொண்டு
வாக்குச் சீட்டுகளின் முத்திரை மைக்காய்
இரத்தம் சேகரித்துக் கொண்டு.

மரத்துப்போன வறண்ட வேதாந்தங்களால்
காயடிக்கப்பட்ட கடவுள் மனங்களைத் தவிர்த்து
நண்பா! இன்றும் உன்னுடன்
கைகோர்த்து திரிவதைக் காணத்தான்
உயிர்ப்புடன் இருக்கின்றன எல்லாம்
நாம் சுற்றித்திரிந்த ஊரைப்பொலவே.

-ஜமாலன்
29-04-1993.
(பாபர் மசூதி தகர்ப்பிற்கு பிறகான கலவரங்களின் பாதிப்பில் எழுதப்பட்து. காலககுறி ஜுன் -94-ல் வெளியிடப்பட்டது.)

பாலைப்பயணம்

அலைபுரளும் மணற்கடலில்
கரைகாணா மனக்கடல் -
தலை சாயக்க இயலுதில்லை.

அடிவயிற்று பூனை மயிரெனு
ஆழத்தில் ஓடி மறையும் சாலை.

வெம்மையின் கொந்தளிப்பூ
பயணம் தொடர்கிறது பாலையில்.

நிர்மல வானில்-
மருவற்ற தேகம்.
மணல் வெயில் தின்ன -
மனம் கவிதை தின்னது.

காகிதத்தில் எழுதி-
காகிதத்தைப் பெற்று
காகிதத்தை தின்று
காகிதத்தில் வாழும் உலகு.

கலவி கலைந்த பெண உடலாய்.
காற்றின் நடனம்
கலைத்துப் போட்ட
மணலின் கனவுகள் -
குவித்தும் குழிந்தும்
அலைஅலையாய் கிடக்கிறது.

வெம்மையில் குளித்து
விரிந்தலையும் கூந்தலுடன்
ஈர உடலை காய வைக்கும் -
எட்டிய வெளியில்
தொடர்புகளும் அற்று
ஒற்றையாய் நிற்கும் மின்கம்பி.

தடம் அழிய, அழிய சலிக்காது -
நீர்ப்பையின் சுமை தாளாது...
சூள்கொண்ட மேகமென
கால்புதைய நகரும்
ஒட்டகங்கள்.

தடையற்ற கேள்விகளும்,
விடையற்ற பதில்களுமாக
முடிவற்ற இடம் நோக்கி-
தடமற்ற நகரும் பயணம்...

நீர்த்திரை கிழிந்து
நிறம் கலங்கிய உருக்களின்
வெளிக்கோடுகள்
வெளிறிப்போய் -
காத்திருக்கிறேன்.

மனதிற்குள் உளியின் சத்தம்.
சிலையில் மிஞ்சிய
சேதாரங்களா -
இந்த வாழ்க்கை...?

(03-12-1999)
(ரியாத் - கோபர் பஸ் பிரயாணத்தில் எழுதியது)

பொதுப்புத்தியும் பெரியாரும்

பெரியாரின் 129-வது பிறந்தநாள் இன்று. இதனை பெரியார் கொண்டாடியிருப்பாரா? என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இதுபோன்ற நாட்கள் ஒரு வருடாந்திர கணக்கெடுப்பைப்போல பெரியாருடன் நமது உறவை கணக்கிட்டுக் கொள்வதற்கான ஒருநாள். பெரியாரியம் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளையும் அச்சிந்தனை எந்த அளவிற்கு சமூகத்திற்குள் ஊடுறவியிருக்கிறது என்பதையும் அலசுவதற்கு ஒரு நாள். நாம் அதனை எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கிறோம் என்பதையும் சுயவிமர்சனமாக அலசுவதற்கும் இந்நாளை பயன்படுத்திக்கொள்வோம்.

இங்கு பெரியாரை நான் புரிந்துகொண்டவகையில் எனக்குள் மறுமுறை சொல்லிப்பார்க்கும் முயற்சியே இது.

பதிவுகளில் பெரியார் குறித்த விவாதங்கள்தான் அதிக அளவில் இடம் பெற்றதாக இருக்கிறது என்பது ஒரு மிகையான கூற்றாகாது. காரணம் பெரியாரின் சிந்தனைகள் அதன் ஆதரவாளர்களை விட எதிர்ப்பவர்களால்தான் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள்தான் பெரும்பாண்மை என்பதும் கண்கூடு. பெரியார் ஒரு எதிர்மறையான சிந்தனையாளராக மட்டுமே பதிவுறுததப்பட்டிருக்கிறார். குறிப்பாக பிராமண எதிர்ப்பாளர் இந்து மத எதிர்ப்பாளர் என்பதாக. இவ்விரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்துகொள்ளக்கூடிய கருத்தாக்கங்கள்தான். இந்துமதம் என்கிற அமைப்பே பிராமண மேலாண்மையைக் கொண்ட ஒரு அமைப்புதான் என்பதை பெரியார்தான் வெளிப்படுத்திக்காட்டினார் வெகுசன தளத்தில்.

பெரியாரின் அடிப்படை சிந்தனை முறை என்பது தமிழக அல்லது திராவிட மக்களிடம் பதிவுறுத்தப்பட்டுள்ள பொதுபுத்தியை சுயசிந்தனை எனகிற தளத்திற்கு நகர்த்தியது. இதற்காக பகுத்தறிவு என்கிற ஒரு சுயசிந்தனைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுபுத்தி என்பது ஒரு மனிதன் உலகை புரிந்துகொள்ளவும் உலகுடன் உறவாடவும் ஆன மன அமைப்பு ஆகும். இப்பொதுபுத்தி பெரியாருக்கு முன்பே சித்தர்கள் தொடங்கி வள்ளாளர் வரை ஒரு பாரம்பரியமாக வளர்ந்தவந்தது. அவர்கள் இம்மன அமைப்புடன் தங்களையே ஒரு சோதனைக்களனாக மாற்றிக்கொன்டனர். கடவுளை மறுப்பதும், கடவுளை அடைவதும் தர்க்கரீதியாக ஒன்றுதான். கடவுள் நிலையை அல்லது மர்மமான மதச்சடங்குகள் மூலம் கடவுள் இடத்தை அடைய முடியுமெனில் கடவுளின் இருப்பு அங்கு அழிந்து வேறு ஒரு புதிய இருப்பாகிவிடுகிறது. கடவுள் என்கிற அளப்பற்ற சக்தி அடையக்கூடிய சக்தியாகிவிடுகிறது. கடவுள் என்கிற தனிச்சிறப்பான தன்மை சாதாரண தளத்திற்கு இறக்கப்படுகிறது. அதனால்தான் சித்தர்கள் ஒழுங்கமைக்கபட்ட மதச்சடங்குகளுக்கு வெளியே தங்களது இயக்கங்களை வடிவமைத்துக் கொன்டனர். வாழும் காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் பிறகு மதங்களினால் உள்வாங்கப்பட்டு கடவள்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஆக பொதுப்புத்திக்கு எதிரான இயக்கம் என்பது சமூக மாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது. ஆணால் பெரியார் இப் பொதுபுத்திக்கு எதிரான தனது இயக்கத்தை மக்களின் தினவாழ்வின் எல்லாக் கூறுகளிடமும் விரவலாக்கினார். இதன்மூலம் ஒரு புதிய உலகை மக்களிடம் திறந்து காட்டினார் என்றால் மிகையாகாது. தினவாழ்வின் ஒவ்வொரு கூறிலும் பெரியாரின் பாதிப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இயங்கிக் கொண்டிருப்பதுதான் பெரியாரின் தனிப்பெரும் சாதனை எனலாம். இன்று கடவள் பற்றிய அல்லது மதம் பற்றிய எந்த சிந்தனையும் பெரியாருடன் ஒரு உரையாடலை நிகழ்த்தவேண்டிய ஒரு தவிர்க்கவியலா நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

பெரியார் தனது செயல்களில் தெளிவுடன் இருந்தார். புரட்சி மற்றும் சமூக மாற்றம் என்கிற எல்லோருக்குமான விடுதலை இவ்வுலக துயரங்களிலிருந்து மீட்சி மோட்சம் போன்ற பெருங்கதையாடல்கள் குறித்த தெளிவு அவருக்கு இருந்தது. அதனால் தனது பணியை சமுக சீர்திருத்தம், சுயமரியாதை, பெண்விடுதலை, சாதீய எதிர்ப்பு, முடநம்பிக்கை எதிர்ப்பு என்கிற தளததிற்குள் சுருக்கிக்கொண்டார். அதனால் பெரியாரின் அரசியல் இயக்கம் நுண் அளவிலானது. அது எந்த மாற்றையும் முன்வைக்கவில்லை. மனிதனின் தன்னிலை மாற்றம் குறித்தே சிந்தித்தது. தமிழக அல்லது இந்திய மனிதனுக்கு ஆதிக்கச் சக்திகளால் கட்டமைக்கப்ட்டுள்ள மதம், சாதி, ஆண் என்கிற அடையாளத் தன்னிலைகளை கேள்விக்கு உட்படுத்தியது.
பெண் உடல் என்பது ஒரு வாரிசு உருவாக்க எந்திரமாக கட்டமைக்கப்பட்டதை அம்பலப்படுத்திக் கிழித்துப்போட்டது. ஒரு பெண் தனது கருவை ஆளும் உரிமை உள்ளவள் என்பதை சொல்லியது. ஒரு ஆண் உடல் சாதீய மதக் கருத்தியலால் சுயமரியாதையற்றதாக கட்டமைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்திக் காட்டியது. சாதி என்பது எப்படி ஒரு மனித தன்னிலையை ஆதிக்க வெறிமிக்கதாக ஆக்குகிறது என்பதை அம்பலப்படுத்தியது. மதம், சாதி, மொழி, இனம், பாலினம், தேசியம், சுதேசியம், நாட்டுபப்ற்று போன்ற எல்லா அதிகார மையங்களையும் கேள்விக்குட்படுத்தியது. மனிதனின் அடிப்படை உரிமை சுயமரியாதை என்பதை உத்தரவாதப்படுத்தக் கோரியது. மனித உடலின் குறைந்தபட்ச நிபந்தனையாக சுயமரியாதையை முன்வைத்ததுதான் பெரியாரியத்தின் ஆகப்பெரும் சாதனை எனலாம்.

பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கத்தை பிரதிநிதத்துவப்படுத்திய ஒரு தேசிய முதலாளிய இயக்க குரலே பெரியாரியம் எனகிற மார்க்சிய வர்க்க ஆய்வை மறுக்கமுடியாது என்றாலும், ஒருகட்டத்தி்ல் அவ்வுயர்வர்க்கம் அரசதிகாரம் கோரியபோது அதனை மறத்து தனது சுயமரியாதைக் கோட்பாட்டில் உறுதியாக நின்றது பெரியாரியத்தின் மற்றொரு வெற்றி எனலாம்.

புத்தமத வீழ்ச்சி - மேலும் சில குறிப்புகள்.

பௌத்தம் வீழ்ச்சியடைந்ததற்கு நண்பர் `பைத்தியக்காரன்' என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ள இடுகையின் துணை இடுகையாக இங்கு தரப்படுகிறது.

இடுகைக்கான இணைப்பு: http://naayakan.blogspot.com/2007/09/blog-post_14.html#links


இக்குறிப்புகள் ஏலவே நூலாக வெளியிடப்பட்டுள்ள எனது மொழியும் நிலமும் என்கிற நூலில் உடல் அரசியல் என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் உள்ள குறிப்புகள் இம்மூன்றும். தொடர்புடையவை என்பதால் இங்கு வெளியிடப்படுகிறது. இதில் நண்பர் சுட்டியுள்ளது வரலாற்றுரீதியான காரணங்கள் என்றால் இவை தத்தவார்த்த தளத்திலான காரணங்கள் ஆகும்.

குறிப்பு-1

சமஸ்கிருத மதநினைவிற்கு எதிரான ஒரு வரலாற்று இயக்கமாக புத்தர் தனது போதணைகளை மக்களிடம் பேச்சு வழக்கில் இருந்த சாதரண மொழியான 'பாலி'-யில் செய்தார்। அன்றைக்கான 'உயரிய' தத்துவங்களை எல்லாம் சொல்ல சாத்தியமான உயர் வர்க்க மொழியாக இருந்த சமஸ்கிருதத்திற்கு எதிரான ஒரு நினைவை உருவாக்க முயன்ற புத்தர் அம்மொழியை முற்றாக நிராகரித்ததை மொழியின் அரசியலாக பார்க்கலாம்। பிற்கால புத்தமத தத்துவங்கள் பெரும் விவாதப்போராக மாறும்போது முழுக்க முழுக்க சமஸ்கிருத பண்டிதர்களால் சமஸ்கிருதத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இவ்விலக்கியங்கள் குறிப்பாக திக்நாகர், நாகார்ஜூனர் தர்மகீர்த்தி ஆகியோரால் ஒரு இணையான 'உபநிஷத்' போன்ற தத்துவங்களாக, சிக்கலான மொழியமைப்பைக் கொண்ட அரூபமாக்கலுக்குள் செல்வதாக சட்டோபாத்யாயா போன்ற அறிஞர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில்,முக்கியம் என்னவென்றால், 'பெரும்பாதை'-க்கான (மகாயானத்திற்கான) பிரமாணமாக காட்டிய ஆதாரநூல் நாக-லோகத்திலிருந்து பெறப்பட்டதாகக் கூறியதுதான். இதன் மூலம் கடவுள் கொள்கையையும், உபநிஷத்துக்களின் கருத்தாக்கமும் புத்த அமைப்பிற்குள் நுழைந்தது (தேபி பிரசாத்- பக். 152,Indian Philosphy). புத்தர் 'கடவுளால் அருளப்பட்டது' என்கிற கருத்தாக்கத்தையே முற்றிலும் நிராகரித்தவர் (ராகுல்ஜி). இந்திய தத்துவ விசாரத்தில், பிரமாணம், பிரத்யட்சம் என்பது ஒரு முக்கியமான அளவுகோலாகும். இந்த அளவுகோலை அடிப்படையாகக் கொண்டே ஆதாரநூல்கள் கடவுளால் இயற்றப்பட்டதாக கூறி அதன் அடிப்படைகளில் அந்நூலிற்கு புணிதத்தை அளித்து சிக்கலான அர்த்தத்தை உருவாக்கி விடுவார்கள். அடிப்படையில் புத்தர், இந்த இந்திய தத்துவத்தின் தந்திர உபாயத்தில் (இது ஒரு 'பூர்வ-பட்ச-சித்தாந்த' மொழி விளையாட்டு என்பது வேறு) சிக்கிக் கொள்ளாமல். மிக எளிமையாக தனது இடை-வழியை (நான்கு உண்மைகள் மற்றும் எட்டு வழிகளை) போதித்தவர். (மேலதிக விளக்கத்திற்கு படிக்க தேபி பிரசாத் சட்டோபாத்யாயாவின் 'இந்திய தத்துவ ஞானத்தில் நிலைத்திருப்பனவும் மறைந்து போனவை-யும்;' (செண்ணை புக்ஸ்), Indian Philospy' மற்றும் ராகுல்ஜியின் 'புத்த தத்தவ இயல்'(NCBH).

குறிப்பு:2

மகாயான புத்தப்பிரிவின் தத்துவ முறையும், அதன் அடிப்படைகளும் பிறகு கௌடபாதர், சங்கரர் வழியாக 'அத்வைத வேதாந்தமாக' வளர்கிறது (பக்.96- India Philospy). வேதத்திற்கு எதிரான பௌத்தம், விவாதங்கள், உரைகள் மூலம் வேதாந்தங்;களின் அடிப்படையாக மாற்றப்படுகிறது. பௌத்த சங்க வடிவங்களே சங்கர மடத்திற்கான வடிவத்தை அளிப்பதாக இருந்தது. அதனால்தான், சங்கரர் மறைமுக பௌத்தர் என அழைக்கப்பட்டார்.

குறிப்பு:3

புத்த மதத்தை ஒழிக்க, அன்றைய வைதீக-மதம் துறவறத்தை போதித்து, முழுநேரமாக மதப்பணியாற்றும் துறவிக்குழு ஒன்றை 'மடம்' என்கிற பெயரில் உருவாக்கியது. சங்கரர் முன்வைக்கும் மாயா-வாதம், வாழ்வின் காரணத்தை முற்றிலும் ஒற்றை மையமான தோற்ற-மாயைக்குள் ஆழ்த்துவதன் மூலம், மனித உடல்களின் வேட்கையை துறவறம் நோக்கியதாக திசைவழிப் படுத்தியது. இது இன்னொருபுறம் மடம் என்கிற பெயரில் அரசு ஆதரவுடன் பெரும் மதம்-பரப்பும்-காக்கும் நிரந்தர வருமானம் உள்ள ஒரு நிறுவனமாக தனது வலைப்பின்னலை உருவாக்கியது என்பதுவேறு. இன்றுவரை 'இந்து'மதத்தின் அங்கீகரிக்கப்பட்ட முடிவெடுக்கும் நிறுவனமாக இருப்பது சங்கரரால் உருவாக்கப்பட்ட இம்மடங்களே.

பெரியார் தமிழின துரோகியா?

திருக்குறள் குறித்த பெரியாரின் கருத்தை தோழர் தமிழச்சி அவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். அதற்கு அரைபிளேடு எனற நணபர் தனது பதிவில் மறுப்பாக ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளார். அவ்விவாத பின்னோட்டமாக இது எழுதப்படுகிறது.

தமிழச்சியின் பெரியார் மூலக்கட்டுரை இணைப்பு: http://thamilachi.blogspot.com/2007/09/blog-post_5727.html

அரைபிளேடு அவர்களின் மறுப்பிற்கான இணைப்பு:
http://araiblade.blogspot.com/2007/09/blog-post_08.html

பெரியாரின் கருத்துக்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல। ஆணால், அவரை தமிழ் விரோதி என்று சொல்வது அதுவும் அவரது பக்தனாகவும் அவரது கொள்கைப் பற்றாளனாகவும் காட்டிக் கொண்டு கொஞ்சம் விஷமத்தனமானதுதான். தாய் தன் பிள்ளையை கண்டிப்பதைப் பொன்றதல்ல தமிழ் குறித்த பெரியாரின் இந்நிலைப்பாடு. தெளிவாக பெரியார் தனது கலகத்தன்மையை இங்கு வெளிப்படுத்துகிறார். நிறுவனமயப்படுத்தப்பட்ட எந்த ஒன்றும் கெட்டித்தட்டிப் போய் சமுக வளர்ச்சியை தடை செய்யவே செய்யும். இதுதான் விஞ்ஞானம் வரலாறு. பெரியாரைவிட கடவுளை மூடநம்பிக்கையை எதிர்த்த பெளத்தம் ஒரு நிறுவனமாகி என்று என்னவாகியது என்பதை வரலாறு நமக்கு காட்டித் தந்தள்ளது. அல்புருணி என்கிற அரேபிய யாத்ரிகன் ஆர்யபட்டர் போன்ற விஞ்ஞானிகள் பற்றி எழுதும்போது அற்புதமான விஞ்ஞான கருத்தோட்டங்களைக் கொண்டுள்ள இவர்கள் எல்லாவற்றையும் இறுதியில் கடவுள் என்கிற கண்ணுக்க தெரியாத ஒன்றிற்குள் அடக்கிவிடுகிறார்கள் என்றான். இந்திய சிந்தனைமுறையின் இந்த புள்ளியை பெரியார் சரியாக கண்டுணர்ந்தார். நாத்திகம் என்பது பெரியாருக்கு முன்பே இந்திய தத்துவ சிந்தனையில் உள்ள ஒன்று. அதன் அழிக்கப்பட்ட வரலாற்றை மீட்டு உலகாயுதமாக ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். கடவுள் தோன்றியபோது அதனை எதிர்ப்பவர்களும் தோன்றிவிட்டார்கள்.

ஆக, பகுத்தறிவிற்கு புறம்பான எந்த அபிமானங்களையும் உணர்வுகளையும் பெரியார் எதிர்த்தார். அதில் ஒன்றான பாஷாபிமானத்தையும் எதிர்த்தார். தனது பகுத்தறிவிற்கு உட்படாத எதையும் ஏற்காதே என்பதுதான் பெரியாரின் கொள்கை. சமுகத்தை பின்னோக்கி இழுக்கும் மத, சாதிய, பழம்பெருமைகளை, புராணங்களை அவர் இக்கண்ணோட்டத்துடனேயே அனுகினார். தனது கொள்கைகளே வழிபாட்டுக்குரியதாக மாறிவிடாதிருப்பதில் எச்சரிக்கையாக இருந்தார். சுயமரியாதை என்பதை ஒரு வாழ்வணுபவமாக மாற்ற முயன்றார். நமது உணர்வின் உடலின் ஒரு கூறாக அது மாற வேண்டும் என்பதுதான் பெரியாரின் கொள்கையாக நடைமுறையாக இருந்தது.

தமிழை அவர் எதிர்த்தார் என்று பெரியாரிடம் கேள்வி கெட்பதற்கு முன்பு. தமிழ் குறித்தும் நமது கண்ணோட்டத்தை நாமே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழ் என்பது மொழி மட்டுமல்ல அது ஒரு கருத்துருவம் (idelogy). கருத்துருவத்தின் மிக அடிப்படையான செயல் அது ஒரு உலக கண்ணோட்டம் என்பதுதான். இதன்பொருள் உலகை ஒரு மனிதன் பார்ப்பதற்கும் அல்லது மனித தன்னிலை (subject) உலகை அறிந்து கொள்ளவும் ஆன ஒரு கண்ணோட்டம். இத்தமிழ் கருத்துருவம் ஆங்கிலேய காலணீய காலத்தில் தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கங்கள்மூலமாக கட்டப்பட்டது. இக்கட்டமைப்பு இனவாததனமையுடன்தான் கட்டப்பட்டது. தமிழ் என்கிற கட்டமைப்பிற்குள் உள்ள இனவாதக்கூறு அடிப்படையில் எல்லா இனவாதக்கூறிலும் அடங்கியுள்ள பாசிசமாகவே வெளிப்படும. ஒரு தமிழன் உலகை தழிழ் என்கிற இனஅரசியலுடனும் தான் பார்க்கிறான் புரிந்த கொள்கிறான. இதுதான் தமிழ் இனவெறியாக மாறுகிறது. உரிமைகள் பறிக்கப்படும்போது தமிழினத்திற்காக குரல் கொடுப்பவன் அதுவே ஆதிக்கமாக மாறும்போது அதனை எதிர்ப்பதற்கும் தனது தன்னிலையை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இம்மனநிலையே பெரியார் தனது தொண்டர்களுக்கு வளர்க்க விரும்பிய மனநிலை. அதனால்தான் பெரியார் கூறினார் மதாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம், தேசாபிமானம் எல்லாவற்றையும் ஒருவன் விட்டுவிட வேண்டும் என்றார். தமிழை பெரியார் ஒரு இன அசியலுக்கான பாசிசத்தன்மையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அதன் உன்னதங்களை போட்டு உடைத்தார். தமிழ் வழிபாட்டு மனோபாவத்தை தோலுரித்தார். அதனால்தான் மதச்சார்பற்றதாக முன்வைககப்படும் தமிழின் உன்னத காப்பியமான சிலப்பதிகாரம் உன்னத பொதுமறையான திருக்குறள் உன்னத இலக்கணமான தொல்காப்பியம் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார். இவற்றை போட்டடைப்பதன்மூலம் இவை நிராகரிக்கப்பட வேண்டியவை என்பதல்ல பொருள். இவற்றை உன்னதப்படுத்தப்படுவதின் அரசியல்தான் இதில் உள்ள பிரச்சனை.

சரி அடுத்து அரைபிளேடின் குறிப்பான பிரச்சனைக்கு வருவோம்। தமிழ் வழிபாட்டு மனோபாத்தை வெளிப்படுத்தும் அரைபிளேடிற்கு அவர் எடுத்துக் காட்டும் பெரியாரின் கூற்றகளே அவருக்கு பதில் கூறுவதுதான் இதில் முரண நகை. பெரியாரே அவருக்கு கீழ்கண்டவாறு பதில அளிக்கிறார்.

//தொல்காப்பியன் மாபெரும் துரோகி தொல்காப்பியன் ஆரியக்கூலி। ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. //

இது ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்ட கூற்று। தொல்காப்பியரின் அறிதல்முறை வடமொழிவழிவந்தது. ஒரு உதாரணம், மெய்ப்பாடுகள் தமிழில் எட்டுதான். சமஷ்கிருதத்தில் 9 அதாவது நவரசா என்பார்கள். சூத்திரம் என்கிற பாவடிவம் தமிழில் இல்லை. தொல்காப்பியர் இலக்கணம் சூத்திர வடிவிலானது. தொல்காப்பியம் வடமொழிச் சொற்களை தமிழின் சொல்பிரிவில் ஒன்றாக முன்வைக்கிறது. தொல்காப்பியம் தனது இலக்கண விதிமுறைகள் மூலம் தமிழ் நிலத்தை எப்படி எல்லைகளை வரையறத்து கட்டமைத்தது என்பதும் தமிழ உயர்வழக்கு மொழியாக எப்படி படித்தரப்படுததியது என்பது குறித்து எனது "மொழியும் நிலமும்"என்கிற நூலில் விரிவான கட்டுரை ஒன்று உள்ளது. நிற்க.

தமிழ் என்பது காகலாகாலத்திற்கும் மாறாத ஒரு வஸ்து அல்ல. காலந்தோறம் மாறுவதே மொழி பெரியார் தமிழை கறை படிந்த மொழியாக பார்த்தார். அதுதான் உண்மை. தமிழ்மொழி வடமொழி கலப்பானது. அக் கறை படிந்த மொழியால் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்த முடியாது. அது இனத்தூய்மையின அடிப்படையில் தூய்மைப்படுத்தப்பட்டு ஒரு தமிழ்கருத்துருவமாக கட்டப்பட்டதை பெரியார் கண்முன் கண்டவர்.
திருக்குறள் ஒரு உயர்ந்த நூல்தான். அதற்காக அதுகூறும் எல்லா பிற்போக்கு கருத்துக்களையும் ஏற்க முடியுமா? திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் ஒரு கேடயமாக்கிக் கொண்டு பெரியாரைத் தாக்கத் துணிகிறார்கள் இன்று. இவ்விரு நூல்களும் ஒரு பெண்ணிய வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டால் இதன் உன்னதங்கள் பெண் உடலை எப்படி ஒரு ஆணிய துய்ப்புக் களமாக உருவமைக்கிறது என்பது வெளிப்படும். இப்படி ஒரு பகுத்தறிவற்ற பக்தியை இலக்கியங்கள் மீது ஆய்வு அற்ற முறையில் கொள்வதைதான் பெரியார் எதிர்த்தார். பெரியார் பெண்ணியநிலையில் இவற்றை எதிர்கொண்டதன் வெளிப்பாடே இவை.

சிலப்பதிகாரம் அறம்சார்ந்த இலக்கிம் (ஒரு பின்னோட்டக்காரர் சிரிப்பு சிரிப்பா வருது என்ற தனது அரிய கண்டுபிடிப்பை முன்வைத்தள்ளார் அவருக்காக) என்பதால், யதார்த்தில் அது எதை குறிநிலைப்படுத்துகிறது என்பதுதான் முக்கியம்। கற்பு நிலைபற்றி தமிழில் புராண அருந்ததிக்கு நிகராக கதைக்கும் ஒரு இலக்கியம். அதைதான் பெரியார் பிரச்சனைபடுத்துகிறார். பெண் ஊமையாக ஒரு பதுமையாக கணவனின் ஒரு துணை உறுப்புபோல இருப்பதை அதை நமது பாரம்பரியம் என்று கண்ணகியைக் காட்டி கொண்டாடுவதை அவர் எதிர்த்தார். சிலப்பதிகாரம் நடந்தேறிய காலகட்டத்தில் ஆரிய கலப்பு என்பது தீவிரமாக இருந்தது என்பதும் தமிழ் திருமணமுறை ஆரிய திருமணமுறையாக சிலப்பதிகாரத்தில்தான் சொல்லப்படுகிறது முதன்முதலில். அதனால் அதன் ஆரிய கலப்பினத்தன்மை இங்கு விவாதத்திற்கு உரியதாக பெரியாரால் மாற்றப்படுகிறது.

பெரியார் கூற்றுகள் காலம்-இடம் சார்ந்தவை। அவற்றை உயிரை பிரித்து விட்டு பிணத்தை வைத்துக் கொண்டு பேசுவதைப்போல பேசக்கூடாது। கும்மி என்ற பெயரில் எல்லா பூணைகளும் சாக்கைவிட்டு தாவிக் குதிக்க வைத்தவிட்ட அரைபிளேடுக்கு ஒரு பரிசுதான் அளிக்க வேண்டும். பெரியாரை ஒரு இந்துமத எதிர்ப்பாளராகவும், நாத்திகராகவும், பிராமண துவேஷியாகவும் கட்டமைத்து அவரை சமூக அசைவியக்கத்திலிருந்து புறந்தள்ளிவிட்டு வெறும் சிலையாகவும் வணக்த்திற்குரியவராகவும் இன்று மாற்றப்பட்டுவிட்டார். பெரியாரின் பல பரிமாணங்களை ஒற்றைப்பரிமாணமாகச் சுருக்கிவிட்ட நிலையே இது. பெரியார் என்பது தமிழ் என்கிற மொண்ணை சமூகத்தை உலுக்கிப் பார்க்க வந்த ஒரு மாபெரும் நிகழ்வு. தமிழ் என்கிற உணர்வை தனித்தமிழ் இயக்கத்தினரைவிட பரவலாக உருவாக்கியவர் பெரியார். இதுதான் இன்றைய வரலாறு. பெரியார் குறித்த எத்தகைய தீவிர விமர்சனத்திலும் இவ்வரலாற்றை நாம் மறுத்துவிடமுடியாது.

//இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?//

எப்படி பெரியார் மிகச்சரியாக அரைபிளேடு போன்ற தமிழுக்காக உயிர் விடுபவர்களை கணித்திருக்கிறார் பாருங்கள்। மொழி இனம் நாடு தேசம் போன்றவை எல்லாம் கற்பிதங்கள்தான் அவற்றிகாக உயிர் விடுவதாக உதார் விடுவது "டூமச்" என்பதுடன் அது கடவுள் நம்பிக்கையைவிட பெரும் மூட நம்பிக்கை.

இப்பொழுது விவாதிப்பவர்களையே இது குறிநிலைப்படுத்துகிறது। வெளித் தோற்றத்தில் தழிழ் பற்று என்றும் உள்ளே சிண்டு முடியும் சாணக்கியத்தனமும் நடைபெறுவதைதான் பெரியார் "தேவடியாத்தனம்" (தடித்த வார்த்தை என்னுடையது அல்ல பெரியாருடையது) எனபதாக குறிப்பிடுகிறார்.

//போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது?//

தெளிவாகவே இருக்கிறது. நண்பருக்கு இது புரிந்திருக்கும். தனது தொண்டர்களையே பக்தர்களாக்கும் மந்தைதனம் பெரியார் எதிர்த்த ஒன்று. அதனால்தான் அவர் தமிழையும் எதிர்த்தார்.
முத்தாய்ப்பாக பெரியார் கூறும் கீழ்கண்ட ஒரு வரி போதும் இந்த விவாதத்திற்கான பதில்।

//நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள்। அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது. //

இறதியாக அரைபிளேடு அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் இவ்வளவு தெளிவாக தேடிப்பிடித்து பெரியாரின் 'தமிழ்விரோத' கருத்துக்களை தொகுத்தமைக்கு. பெரியார் தமிழ் என்கிற இதைவிடப் பெரிய தவளைக் கூச்சல்களை எல்லாம் ஒற்றை ஆளாய் நின்று எதிர்த்து சமாளித்தவர். எல்லாப் புணிதங்களையும் அது மொழியாகட்டும் அல்லது அண்ணன், அம்மா, தந்தை என்கிற பந்தங்களாகட்டும் அல்லது ஆண்டான் என்கிற சமுக நிலையாகட்டும் எல்லாவற்றையும் பெரியார் தலைகீழாகப் போட்டுடைத்தார். பெரியார் கன்னடியர்களுக்காக பெரும் சேவையோ அல்லது மேற்கண்ட விவாதத்தைப்போல மறைமுக பற்றுதல்களையோ காட்டிவிடவில்லை.
இறுதியாக, பெரியாரை தமிழ்விரோதியாக காட்டலாம் அது ஒன்றும் தேசத்துரோகச் செயல் அல்ல. அத்தைகய துரோகிகள்தான் இன்று சகல சம்பத்துக்களுடன் பரிவாரம் சூள அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டு இருக்கிறார்கள். பெரியார் தமிழினத்திற்கு எதிராக திராவிட இனக் கருத்தாக்கத்தை கொண்டு வந்ததாக கூறுவது ஒரு வரலாற்றுத்தவறு. தமிழ்நாடு என்பது பெரியார் காலத்தில் இல்லை. அன்று இருந்த மெடராஸ் பிரசிடன்ஸி என்பது இன்றைய நான்கு திராவிட மாநிலங்களை உள்ளடக்கியதுதான். மலையாளத்தில் நிகழ்ந்த இழிநிலைக்கும் அவர் குரல் கொடுத்தவர் என்பது அரைபிளேடிற்கு மறந்திருக்காது. மீண்டும் கூறியதுகூறல் என்றாலும் பெரியார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு அதில் விமர்சனங்கள் உண்டு அது சேற்றை வாரி இறைப்பதாக இருக்க்ககூடாது.
- அன்புடன்
ஜமாலன்.

திருமணம் எனும் உடல் ஒடுக்க எந்திரம்

உறவுமுறை திருமணங்கள் குறித்து கோவி.கண்ணன் அவர்களின் பதிவு ஏற்படுத்திய மேலதிக சிந்தனையின் விளைவாக இங்கு சில கரத்துக்கள் விரித்துரைக்கப்படுகிறது. கோவை கண்ணனின் கட்டுரை இணைப்பு உங்கள் பார்வைக்கு: http://govikannan.blogspot.com/2007/09/blog-post_06.html

1. திருமண முறைகளைப் பொறுத்தவரை இன்றைய மதங்களுக்கு முன்பே அல்லது மதங்கள் இயற்கை தெய்வ வழிபாடாக இருந்த காலங்களில் உருவானவை. இனக்குழுக்களுக்கிடையிலான இம்முறை மதங்களின் திருமறை(ரை)கள் (வேதம் மற்ற பிறமத திருமறைகள்) மூலம் ஒழுங்குப் படுத்திக் கொள்ளப்பட்டன பின்னால். திருமண சடங்குகளை ஒழுங்குப்படுத்துதல் என்பது சமூகத்தின் இயக்கம் கொள்ளும் ஆண் மற்றும் பெண் உடல்களை ஒழுங்குப்படுத்துவதாகும். வேறுவார்த்தைகளில் சொன்னால் இனக்குழு உடல்களை ஆண் மற்றம் பெண் என்கிற பாலின (gender) உடல்களாக கட்டமைத்தது மதங்களே. எனவே இவ்வுடல்கள் இயங்குவதற்கான வெளிகளையும் முறைமைகளையும் வகுத்து அளித்தன மதங்கள்.

2. முக்கியமான கேள்வி ஏன் திருமணமுறை உருவானது அது மனித குலத்திற்கு என்ன தேவையை நிறைவு செய்கிறது? அடிப்படையில் இரு இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று ஊடு கலக்க பரிமாறிக் கொள்ளுதலே திருமண முறையாக உருவெடுத்தது. இதனை மாணுடவியலில் "பரிசுப் பொருள் பரிமாற்றம்" என்பார்கள். இனக்குழுச் சமூகத்தில் உடல்களே அவர்களது உரிமைக்குரிய சொத்தாக பாவிக்கப்பட்டதால் உடல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இரண்டு குழுக்களும் நெருக்கமாக ஒன்று கலக்க முடியும். ஒரு இனக்குழுக்குள் உள்ள உடல்களை அக்குழுக்களே திருமணம் செய்துகொண்டால் பரிமாற்றுவதற்கான தனி உடல்கள் இல்லாத நிலை உருவாகிவிடும் என்பதால் குழுவுக்கள் திருமணம் என்பது தடை செய்யப்பட்டது. இதனையே taboo என மாணுடவியல் குறிக்கிறது.

3. குறிப்பான இந்தியச் சூழலுக்கு வருவோம். இந்தியாவில் புத்தமத எழுச்சிக்குப் பிறகு பிராமண வைதீக மதமானது தனது வர்ண தர்மத்தை சாதிய தர்மமாக மாற்றுகிறது. அதாவது தனது தலைமைக்கு கீழ் பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு பொது அமைப்பை (இன்று கூறப்படும் இந்து மதம்) உருவாக்குகிறது. ஜாதி என்கிற சொல் புத்தர் காலத்தில் இனக்குழுவைத்தான் குறித்தது. அதாவது புத்தரின் சாக்கிய குலம் என்பது சாக்கிய ஜாதி என்றே பண்டைய புத்த மற்றும் சமஸ்கிருத பிரதிகளில் குறிக்கப்படுகிறது. தனித்த குழுக்கள் ஒரு பொதுவான அமைப்பிற்குள் அதாவது வைதீக பிரமாண மத அமைப்பிற்குள் வந்தபோது அக்குழுக்களது தனித்த அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ளவும் தனது பிராமண வர்ணத்தை காக்கவும் அகமண முறையை பின்பற்றும்படி மணு தர்மம் விதிமுறைகளை வகுத்தது. அகமணமுறை என்பது ஒரு குழு அல்லது ஒரு சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் முறை. மேலே இனக்குழுக்கள் உருவான காலத்தில் நடந்த பிறமணமுறை மணுதர்மத்தால் தடை செய்யப்படுகிறது. இதுவே சாதிகளின் தோற்றமாக மாறுகிறது என்பதுடன் சாதிகளி்ன அழயாத் தன்மையும் காக்கப்படுகிறது இன்றுவரை. சாதிகளின் வாழ்வு என்பது இத்திருமணமுறைகளில்தான் செறிந்துள்ளது.

4. அடுத்து உறவுமுறை திருமணத்திற்கு வருவோம். உறவுமுறை திருமணம் என்பது அகமண முறைக்குள்ளேயே சொத்தையும் வர்க்க அந்தஸ்தையும் காப்பதற்கான ஏற்பாடாகும். அத்தை மகளை மணப்பதும் சித்தப்பா/பெரியப்பா மகளை மணப்பதும் இருவேறுபட்ட சொத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் உருவானவை.

5. இனக்கழு உருவாக்கத்தின் முதல் அமைப்பு தாய்வழிச் சமுகம் ஆகும். தாய்வழிச் சமூகத்தின் மையமாக ஒரு தாய் இருக்கிறாள். (இவ்வகை தாய்களாக உருவானவைதான் மாரியம்மா, காளியம்மா என்கிற கிராம தாய் தெய்வங்கள்.) தாய்தான் இந்த குழுவின் மையம் (அத்தகைய குழுக்கள்தான் இன்று சாதிகளாக உருவெடுத்துள்ளன.) அவளே அக்குழவை காக்கும் தெய்வம். தந்தை என்கிற உறவுமுறை இக்குழுவில் கிடையாது. தந்தையின் இடம் தாய்மாமனால் நிறைவு செய்யப்படுகிறது. எனவே தாய்மாமனை திருமணம் செய்துகொள்வது தாய்வழிச் சமூகத்தி்ல் தடை செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் தந்தையின் ஸ்தானத்தில் தாய்மாமன் சீர் என்பது சகோதரியின் பிள்ளகைளுக்கு வழுங்கும் சொத்தாகும். அது தாய்மாமனின் உரிமையாக இன்றுவரை தொடர்கிறது.

6. தாய்வழிச் சமுகத்திலிருந்து தந்தையை மையமாகக் கொண்ட சமூகங்கள் அதாவது தந்தைவழிச் சமூகங்கள் உருவானபோது தாயும் பெண்களும் உரிமையற்ற சொத்துகளாக மாற்றப்பட்டனர். பெண் உடல் ஆணிய துய்ப்புக்களமாகவும் வாரிசைப் பெற்றுத்தரும் தனிச்சொத்தை காக்கும் ஒரு எந்திரமாகவும் மாற்றப்பட்டது. எனவே தனது சொத்தைக் காக்க சகோதரன் சகோதரி பிள்ளைகளை மணக்கிற உறவுமுறை திருமணத்தை உருவாக்கினர். சொத்தை குடும்பத்தின் தந்தையாகிய மூத்தவன் கீழ் வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு இது. இம்முறையில் பெண் பரிமாற்றுப் பண்டமாக அதாவது சொத்தாக பாவிக்கப்படுகிறாள். அதற்கு பகரமாக பெண்ணிற்கு பரிசப்பணம் தரும் முறை உருவானது. இன்றுவரை எல்லாமத திருமண சடங்குகளிலும் பரிசப்பணம் என்பது அடிப்படையாக உள்ளது. இஸ்லாமில் இதனை மகர் என்பார்கள்.

7. தாய்வழிச் சமூகங்களின் எச்சங்களை கொண்ட குழுக்களில் அல்லது சாதிகளில் ஆணை பரிமாற்றுப் பொருளாக பாவிக்கின்றன. அதாவது தனிச்சொத்தாக. இங்கு குடும்பச் சொத்து தாயின் குழுவை விட்டு போகாமல் தடுக்கப்படுகிறது. இம்முறை தமிழகத்திலும் ஈழத்திலும் "மருமக்கள் வழி மான்மியம்" என்பதாகவும் கேரள நாயர்களில் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. ஆண்கள்தான் திருமணத்திற்கு பிறகு பெண் வீட்டோடு செல்லும் வழக்கம் உள்ளது. இம்முறையானது தந்தைவழிச் சமுகத்தில் ஆண் பெண் வீட்டிற்கு போவதற்க பதிலாக பெண் வீட்டாரிடம் வரதட்சிணையாக பணம் பெறும் முறையாக சுருங்கி ஆணாதிக்கமாக நடைமுறையில் உள்ளது.

ஆக, திருமணமுறைகள் என்பது உடலை ஒடக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ஆன மதங்களின் வழியாக ஆதிக்கம் செய்யப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். குடும்பம் என்கிற கட்டமைப்புகள் இத்தொழில்நுட்பத்தின் வழியாக செயல்படும் எந்திரமாகும். இவ்வெந்திரத்தில் அரைபடும் மூலப்பொருளாக இருப்பது பெண் உடல்களே. அதனால்தான் பெரியார் திருமணங்களே பெண் அடிமைத்தனத்தின் மூலம் என்றார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அதன் உண்மையான காதல் அடிப்படையில் கட்டுப்பாடற்ற சமூகத்தில்தான் சாத்தியம். தற்பொழுது காதல் என்பது நிர்பந்தம் அடிப்படையிலானது. விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வதைவிட நிர்பந்தத்தின் அடிப்படையில் வாழ்தல் என்பதே பெரும்பாலான திருமணங்களின் விளைவாக இருக்கிறது. இதுவே திருமணம் ஏற்படுத்தும் மணோவியல் வன்முறையாக உள்ளது.

இந்திய தத்துவ தரிசனங்கள் குறித்து புதுமைபித்தனின் ஆற்றங்கரைப் பிள்ளையார்

நான் மனச்சோர்வுறும்போதெல்லாம் எனக்கு உற்சாகத்தை தரக்கூடியது புதுமை பித்தன் கதைகள்தான். அக்கதைகள் எப்பொழுதும் என் கைவசம் இருக்கும் பழைய சிறு சிறு புத்தங்கள் துவங்கி.. சமீபத்திய ஆ.இரா. வெங்கடாசலபதியால் தொகுக்கப்பட்ட கதைத்தொகுதிவரை. எத்தனை முறைப்படித்தாலும் அத்தனை முறையும் புதிதாக எழுதப்பட்டதே போன்ற உணர்வை ஏற்படுத்த வல்லது அக்கதைகள். நான் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது non-deatil என்கிற மொழிப்பாடப் பிரிவின்கீழ் சிறுகதை தொகுதிகள் ஒன்று இருக்கும். அக்கதை தொகுதிகளில் கல்கியின் “காளையர் கோயில் ரதம்” பு.பி.-ன் “ஆற்றங்கரைப் பிள்ளையார்” என்கிற கதையும் இருந்தன. வழக்கம்போல் ஆசிரியர் கல்கியின் கதையை கூறிவிட்டு பு.பி.யை படித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். பு.பி. தமிழாசிரியர்களுக்கு ஒரு புரிபடாத உலகம்தான் போலும். அன்று முதல் பு.பி-யின் கதைகள்மீது ஒரு அலாதியான ஈடுபாடு வரத்துவங்கியது. அது தொடர்கிறது இன்றுவரை.

நேற்றும் பு।பி।-யின்கதைகளை புரட்டத்துவங்கினேன். பு.பி. கதைகளின் காலவரிசைப்படி ஆய்வாளர்களுக்காக தொகுக்கப்பட்ட மேற்படி தொகுதியில் முதல்கதையாக ஆத்தங்கரைப் பிள்ளையார் வைக்கப்பட்டிருந்தது. 29.4.1934-ல் மணிக்கொடியில் வெளிவந்த கதை. இதுதான் பு.பி.-யின் முதல்கதை என்பதை அதன் வரிசைமுறையில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது. இம் முதல்கதையிலேயே பு.பி.-யின் படைப்புத்திறன் மட்டுமின்றி அவரது கூர்மையான அறிவாற்றலும் விமர்சனதிறனும் முன்வைக்கப்படுகிறது. இக்கதை முழுக்க குறியீட்டுமுறையில் எழுதப்பட்டுள்ள கதை. தமிழின் முதல் சிறுகதையாக அறியப்படும் வ.வே.சு. அய்யரின் “குளத்தங்கரை அரசமரம்” போல தனது கதை “ஆற்றங்கரைப் பிள்ளையாரா”-க இருக்கட்டும் என்று எண்ணியிருக்கலாம்.

இக்கதையில் மனிதனை குறிக்க பிள்ளையார் என்கிற கடவுள் குறியீடாக்கப் பட்டுள்ளது। மனிதன் X தெய்வம் என்கிற முரண் கதையின் அடிப்படை சட்டகமாகிறது। இச்சட்டகத்தில் மனிதன் தெய்வமாகவும் தெய்வம் மனிதனகாவும் தலைகீழாக்கப்படுகிறது. கதையின் தளம் புண்ணிய பாரதம் என்று சொல்லப்படும் இந்தியாதான். அகன்ற இந்தியா ஒரு சிறு மேடையாக ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது.

“நாகரீகம் என்கிற நதி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்ததது. கரையில் ஒரு பிள்ளையார். ஆற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கற்பாறைகளும் மனற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.”

அன்று ஆரம்பித்த துன்பம்… கதை நெடுகவும் விரிந்து செல்கிறது। இத்துன்பதை நீக்குவதற்கான முயற்சியனடிப்படையில் உருவான இந்திய சரித்திரம் எப்படியெல்லாம் இத்துன்பத்தை மாறாத்துன்பமாக வளர்த்து பெருக்கியது என்பதுவே கதையின் ஆழ்தளத்தில் அமைவுற்றிருக்கும் கருத்துநிலை எனலாம்.

இந்தியாவி்ல் உருவான மத தத்துவங்கள் முதல் வெளியிலிருந்து வந்த அரசுகள் வரை அனைத்தும் இத்துன்பத்தை எப்படி வளர்த்துப் பெருக்கின என்பது குறியீட்டு முறையில் கதையாடலாக நடத்திச் செல்லப்படுகிறது. பிள்ளையாரை சமூகம் என்கிற மேடையைக்கட்டி அதி்ல் அமரவைத்து அவரது நிழலுக்காக அரச தர்மம் என்கிற வேப்ப மரத்தையும் பேய்பிடியாதிருக்க (கடவுளுக்கே) சமயதர்மம் என்கிற ஆல மரத்தையும் நட்டு வைத்தார் ஒரு கிழவர். இன்பமான இச்செயல்களால் மகிழ்வுற்ற பிள்ளையார் அக்கிழவருக்கு மனிதன் என்று பெயர்வைத்தார். இந்திய சமூகத்தில் அரசதர்மமும் சமயதர்மமும் ஒன்று மற்றதை தழுவிக்கொண்டு ஆல்போல் வேரோடி அருகுபோல் தலைத்தது. ஆலமரத்தை சமயதர்மமாகவும் வேப்பமரத்தை அரச தர்மமாகவும் முன்வைக்கும் இக்குறியீடுகள் கதையின் இறுதிவரை இராச்சதமாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இவை வளரவளர பிள்ளையாரின் துன்பம் சொல்லாவொண்ணா நிலையில் அதிகரிக்கிறது.

இதன்பின் பிள்ளையாரின் துன்பத்தை நீக்க ஒவ்வொரு சரித்திர புருஷர்களாக அவதரித்து வருகிறார்கள். முதலில் வரும் இருக்கிழவர்கள் ஒருவன் புத்தன் மற்றவன் ஜைனன். பிள்ளையாரை பல ஆண்டுகளாய் நிழல் தர உருவான சமயதர்மமும் அரசதர்மமும் மூடி வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் வைத்து பெரும் துன்பத்தை தந்து கொண்டிருப்பதை கண்ட புத்தர் தனது சொந்த யோசனையின் விளைவாக மரத்தில் ஏறி கிளைகளை வெட்டி ஒரு வெளிச்ச உலகை பிள்ளையாருக்கு திறக்கிறார். இருட்டில் பழகி அதையே சுகமானதாகவும் அதற்கேற்ப உடலையும் பெற்றுக்கொண்டுவிட்ட பிள்ளையார் இவ்வெளிச்சத்தை காண முடியாமல் உடல் எல்லாம் சூட்டுக் கொப்பளங்கள்வர புத்தரை தனது துதிக்கையால் தூக்கி வீசிவிடுகிறார்.புத்தர் மேடைக்கு வடகிழக்கே போய்விழுகிறார். இந்த ஒருசில வரிகளிலேயே புத்தத்தின் தத்துவம் மற்றும் அதன் வரலாறு விளக்கப்பட்டுவிடுகிறது.

புத்ததரிசனம் அன்றைய வைதீகமதத்தை மிகக்கடுமையாக எதிர்த்து என்பதுடன் இந்தியத்தத்துவமாக சொல்லப்படும் வேதங்களிலிருந்து கட்டமைக்கப்ட்ட தத்துவ தரிசனங்களான நியாயம், வைசெடிகம், சாங்கியம், யோகம், மிமாம்சை என்கிற ஐவகை தரிசனங்கள் மற்றும் வேதாந்தம் முன்வைத்த அடிப்படைகளிலிருந்து அல்லாமல் புத்தர் தனது தனிவழியான மத்திய வழியை அறிவித்தார். (விரிவான விளக்கத்திற்கு இது இடமல்ல) அதைதான் கதையாடலானது கிளைகளை வெட்டி எறிந்ததாக குறிநிலைப் படுத்துகிறது. ஆணால் வைதீக இருட்டுக்குள் பழகிய மனிதமனம் இவ்வெளிச்சத்தினால் சூட்டுக் கொப்பளங்களைப்பெற்று.. புத்தரை தூக்கி இந்தியாவிற்கு வடகிழுக்கு நாடுகளுக்கு தூக்கி எறிந்தவிட்டது. இந்த சூட்டுக் கொப்பளம் என்பது புத்த தரிசனம் முன்வைத்த வாழ்க்கை முறையின் கடுமை குறித்த பு.பி-ன் பார்வையைச் சொல்வதாகிறது. பு.பி. எந்த ஒரு தத்துவத்திலும் உடன்படிக்கை செய்து கொண்டவரல்ல. எல்லாமே பு.பி.க்கு விமர்சனத்திற்கு உரியவைதான். விமர்சனம் மட்டுமே அவரால் விமர்சிக்கப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இக்கதையாடலில் உலகாயுதம் என்கிற வைதீக எதிர்ப்பு அல்லது அவைதீக மரபை பற்றிய குறிப்புகள் இல்லை। (பிற்காலங்களில்தான் உலகாயுதம் என்கிற தத்தவ மரபானது வைதீக மரபால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது என்று அதனை தத்துவ பேராசிரியரான தேபிபிரசாத் சட்டோபாத்யாயா இந்திய பழம்பெரும் தத்துவ பிரதிகளை வாசித்து எதிர்சொல்லாடல்களால் விவாதக்குறிப்புகளில் மறுறுக்கப்பட்டவை ஆகியவற்றைக் கொண்டு “லோகாயுதம்” என்கிற ஒரு நூலாக கட்டமைத்துள்ளார்.) ஆணால் கதையானது இந்திய தத்துவ வரலாறு பற்றியதல்ல. இந்திய தர்மசாஸ்திரம் அல்லது தத்துவ சாஸ்திரங்கள் மற்றும் அரசியல் சாஸ்திரங்கள் எப்படி மனிதனை தனது வேராலும் விழுதாலும் கட்டி மூச்சுத்திணற அடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கதை.

புத்தரை தூக்கி எறிந்த பிள்ளையாரை பிறகு ஜைனர் தனது தத்துவ விசாரத்தால் கட்டிய ஒரு புதிய மேடையில் அமர்த்திவைக்க முயல்கிறார். புத்தாராவது மரக்கிளைகளை வெட்டி அந்த பழைய மேடையை புத்தமைத்தார் என்றால் ஜைனர் முற்றிலும் புதிய மேடையை உருவாக்கினார்। கதையில் வித்தியாசப்படுத்தப்படும் இந்த துல்லியமான வேறுபாடு மிகப்பெரிய தத்துவ வேறுபாடு என்பதில்தான் பு.பி-யின் மேதமை அடங்கியிருக்கிறது. ஜைனரின் சமணம் முற்றிலும் புதிய அடிப்படைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அணுவாதம் அல்லது பரமாணுவாதம் எனப்படும் அணுக் கொள்கையை முதன்முதலில் சொல்லிய ஒரு தத்துவ தரிசனம் சமணம். இத்தத்தவம்தான் பன்மைவாதம் பற்றிய தத்துவ சிந்தனைகளை முன்வைத்தது. அழிவு என்பது ஒன்று அழிந்து பிறிதொன்றாக ஆக்கம் பெறுவதே சமணம். இதுமுற்றிலும் நவீன விஞ்ஞான கருதுகோள்களைக் கொண்ட ஒரு தரிசனம். அதனால்தான் சமூகம் என்கிற மேடையிலிருந்து பிள்ளையாரை தனது புதிய மேடையில் அமாத்தியதாக சொல்லிச் செல்கிறது கதையாடல்…

(அடுத்து முக்கியமான இந்திய தத்துவ பள்ளிகள் மற்றும் இஸ்லாமிய கிறித்துவம் பற்றியதாக தொடரும் கதையாடல் நாளைய தொடுப்பில் தொடரும்॥)

கதைக்கான இணைப்பு: http://www.chennailibrary.com/ppn/story/aatrankaraipillaiyar.html

அஞ்சலி...

மனித உரிமை ஆர்வலர் வழுக்கறிஞர் பக்தவச்சலம் அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்। அவரது மறைவு குறித்து விபரங்கள் அறிய http://makkal-sattam.blogspot.com/2007/09/blog-post_03.html

சாமான்யமனிதன் முதல் நக்சல்பாரிகள் என்கிற தடை செய்யப்பட்ட அமைப்புகள் வரை அனைத்த மனித உரிமை பிரச்சனைகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் பக்தவச்சலம்। அவரது இழப்பு ஈடு செய்யமுயாதது।

ஆபிதினும் பின்நவினத்துவ நையாண்டியும்

நேற்றிரவு தமிழ்மணம் திரட்டியில் உலாவிக்கொண்டிருந்தபோது.. நாகூர் ரூமியின் இணையத்தளத்திற்குள் நுழைந்தேன். நாகூர் ரூமி-எண்பதுகளில் மீட்சியில் அரூபமான படிமங்களைக் கொண்டு தமிழில் அபி அவர்களுக்கு பிறகு கவிதை எழுதிக் கொண்டிருந்தவர் என்பதால் அவரது இணைய பக்கத்தை பார்க்கும் ஆர்வத் தூண்டதலே காரணம். அங்கிருந்து சாருவின் வலைத் தளததிற்கும் அங்கிருந்து ஆபிதீனின் வலைப் பக்கத்திற்கும் நகர்ந்தேன். நான் சமீபத்தில் (3- மாதங்களுக்கு முன்புதான்) வலைப்பதிவர் உலகத்திற்கு வந்தவன் என்பதால் சாரு குறித்தும் ஆபிதின் குறித்தும் நடந்து முடிந்துபோன விவாதங்களைப் படித்துக் கொண்டு இருக்கிறேன். அது ஒரு புறமிருக்கட்டும்.

1990-ல் சாருவின் முதல் நாவலான "எக்ஸிஷ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்" என்கிற நாவலுக்கு பறை என்கிற பொதியின் இதழில் விமர்சனம் ஒன்று எழுதியிருந்தேன். அதன்பின் நாகார்ஜுனன் வழியாக சாரு எனக்கு அறிமுகமானார். அதிலிருந்து சாருவை சென்னை செல்லும்போதெல்லாம் சந்திக்கும் வழக்கம் இருந்தது. (3அல்லது 4 ஆண்டுகளுக்கப்பிறகு சாருவை நான் சந்திக்கும் வாய்ப்பேயில்லை. அவரது எழுத்துக்களையும் படிக்கும் வாய்ப்பும் அருகிவிட்டது. தவிரவும் தினமலருடன் ஆன சாரு முற்றிலும் விலகிப்போன ஒரு பரப்பில் இயங்குகிறார். அதனை இங்கு விட்டுவிடுவோம்.)

ஒருநாள் சாரு ஆபிதின் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு ஓவியர், சிறுகதை நாவல் எழுதக் கூடியவர் என்பதாக கூறுவார். ஒருமுறை ஆபிதினை சாரு வீடடில் சந்தித்தேன். அதில் பழக்கம் கொள்ளும் அளவிற்கு நானோ ஆபிதீனோ பேசிக்கொண்டதுகூட இல்லை. உண்மையில் ஆபிதீனிற்கு என்னை நினைவில் வைத்துக் கொள்வதும்கூட சாத்தியமற்ற ஒரு சந்திப்பு நிற்க...

நீண்ட நாட்களாக ஆபிதின் கதைகளை படிக்கும் எண்ணம் இருந்து வந்தது. அவரது கதைகள் படிக்க எனது சூழலில் கிடைக்கவில்லை. அல்லது தீவிரமாக அதனை தேடும் நிலையும் வாய்க்கவில்லை. அவரது எழுத்துக்களை படிக்கும் நீண்டநாள் எண்ணம் நிறைவேறியதைப்போல பதிவில் அதனை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது கதைகள் இரண்டினை சுவராஸ்யமான தலைப்புகளை கொண்டிருந்ததால் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து படித்தேன்.

1 பதிவு இணைய இதழில் ஜனவரி 2004-ல் வெளிவந்த கதை "இஸ்லாமிய கதை எழுத இனிய குறிப்புகள்".
2. திண்ணை.காம் செப்டம்பர் 2003-ல் வெளிவந்த "ஹே! ஸைத்தான்" கதை.

நீண்ட நாட்களாக தமிழ் சிற்றிதழ்கள் இணையம் போன்றவற்றடன் தொடர்பில்லாததால்.. இவற்றை உரிய காலங்களில் படிக்க இயலவில்லை. அது வருந்தக்கூடிய செய்திதான்। பின்நவினத்தவ கதையாடலில் ஒரு உத்தி நையாண்டி என்பது. நையாண்டியின் மூலம் உன்னதம் புணிதம் என்கிற விஷயங்களை கவிழ்த்து தலைகீழாக்கிவிடுவது. நையாண்டி என்பது ஒரு கதையாடல் உத்திதான் என்றாலும் கதையின் நையாண்டி ஒரு நகைச்சுவை உணர்வுடன் முடியாமல் வாசகனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வண்ணம் ஒரு ஆழ்ந்த அமைப்பை உள்ளார்ந்து கொண்டிருக்கும். கதை வாசித்தபின் ஒரு செயலூக்கமிக்க மெளனத்தை ஏற்படுத்தும். எடுத்துரைக்கப்படும் கதையாடலில் மேலமைப்பிற்குள் உள்ளார்ந்து ஓடும் கூர்மையான விமர்சனம் கதை ஏற்ற முனைந்த உணர்வு தளத்திற்கு வாசகனை இட்டுச் சென்றுவிடும். அத்தகைய உணர்வை புதுமைபித்தனின் கதைத்தொகுதிகளில் கீழ்கண்ட கதைகள் ஏற்படுத்தக்கூடியவை. "திருக்குறள் செய்த திருக்கூத்து" "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்""புதிய கந்தபுராணம்" "இலக்கிய மம்மநாயனார் புராணம்""கட்டில் பேசுகிறது""வேதாளம் சொன்னகதை""கட்டிலை விட்டிறங்கா கதை" போன்ற கதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் நகைச்சுவையை உருவாக்குவதுடன் சமூகம் சடங்குகள் ஆச்சாரங்கள் அல்லது பழகிய மணோபாவங்கள் என கெட்டித்தட்டிப்போயுள்ள புணிதங்களை கவிழ்த்துப் போட்டுவிடும்.

அப்படியொரு உணர்வை இவ்விருக்கதைகளும் உருவாக்கின. சிரிக்காமல் ஒரு வரிக்கூட படிக்க முடியவில்லை. முதல்கதை தமிழ் இஸ்லாமியர் நிலையை அப்படியே படம் பிடிக்கிறது. 3-வருடம் கழித்தும் அதன் இன்றையத் தன்மை மாறவேயில்லை. அதுதான் அக்கதையின் வெற்றி. இக்கதை இஸலாமிய எழுத்தாளன் கதை எழுதுவதற்கான 16-குறிப்புகளைத் தருகிறது. அக்குறிப்புகளினூடாக இஸ்லாம் குறித்த அறிவார்ந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இஸ்லாம் எப்படி பூசாரிகள் அதாவது உலாமாக்கள் அதாவது மத போதகர்கள் கையில் சிக்கிக் கொண்டு கெட்டிதட்டிப் போய்விட்டது என்பதை நுட்பமாக வஞ்சப் புகழ்ச்சியைப்போல பேசுகிறது. இக்கதையின் உள்ளமைப்பில் விமர்சிக்கப்படும் விஷயங்கள் ஏராளம். அவை ஒவ்வொன்றும் விரிவாக எழுதப்பட வேண்டியவை. மிகப்பெரிய விஷயங்களை அனாவசிமாக தனது நகைச்சவை எழுத்தின் மூலம் தூக்கிப்போடுகிறார் ஆபிதின். அந்த ஒரு வரி உருவாக அவர் திரட்டியிருக்கும் உள்ளார்ந்த விஷயங்கள் தரவுகள் தகவல்கள் ஆச்சர்யமூட்டுபவை.

மற்றோருகதை சன்-டீவி துவங்கி சேனல் டீவிகளையும் தமிழகத்தின் சேனல் அடிமை மனநிலையையும் நகைச்சவையாக முன்வைக்கிறது. இக்கதையும் தனது உடனடித்தன்மையை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இக்கதைகள் பற்றி எழுதுவதைவிட அதனை வாசிப்பதிலேயே பல அர்த்த சாத்தியங்களை வாசகன் உருவாக்கிக் கொள்ளமுடியும். வாசிப்புதான் எழுத்தை உருவாக்குகிறது என்கிற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவன் என்பதால் எனது கருத்தை இங்கு நிறுத்திவிட்டு கதையை நீங்கள் http://abedheen.googlepages.com/main.html இவ்விணைப்பைச் சொடுக்கி வாசிக்கத் துவங்கலாம்.

குறிப்பு: ஆபிதின் கதைகளை முழுமையாக வாசித்தபிறகு இதனை தொடரலாம்.

ஈழப்போரும் அமைதியின்மையும்

"முரண்கள் பற்றிய ஒரு ஆரம்பமாக இருக்க கூடிய பதிவு।குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் முதன்மை முரணை அடையாளங் கண்டு அதன் அடிப்படையில் நிறுவனப்படும் அமைப்புக்களே, மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு போராட்டத்தை நடாத்தக்கூடிய வல்லமையைப் பெறுகின்றன.வெற்றுக் கோசங்களின் அடிப்படையில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழலில் எழுந்த போராட்டங்களைப் பிரதியிடும் எவருமே வரலாற்றை எழுதப் போவதில்லை.ஈழப் போராட்டத்தில் இது நிதர்சனமாகத் தெரியும் உண்மை. " - அற்புதன் எழுதிய பின்னோட்டம்.

அற்புதனுக்கு... உங்கள் கருத்துக்கள் நிதர்சனமான உண்மைதான். ஈழப்போராட்டம் அதன் உபவிளைவாக நிகழும் அவலங்களும், நெஞ்சைப்பதறச் செய்பவை. நினைத்துப் பார்க்கிறேன், ஈழப்போராட்டத்திற்காக எனது கல்லூரி நாட்களின் பல போராட்ட வடிவங்களில் ஈடுபட்டுள்ளேன். அக்கதைகளே தனிக் கட்டுரையாக எழுதப்பட வேண்டியவை. ஈழப்போர்தான் என்னை ஒரு அரசியல்ரீதியாக சிந்திக்கவும் செயல்படவும் தூண்டியது.
தமிழகத்தின் ஒரு சிற்றூரைச் செர்ந்தவன் நான்। முதன்முதலாக உள்ளுர் மக்களைத்திரட்டி ஜெயவர்த்தனே கொடும்பாவி எரிப்பில் துவங்கியது எனது போராட்டம். எங்களுரூக்கு அருகில் ஏற்படுத்தபப்பட்டிருந்த இ.பி.ஆர்.எல்.எஃப்-அமைப்பிற்கு பொருளதவிகள் செய்தல், போன்றவற்றின் வழியாக வளர்ந்தது. பிறகு அரசியல் தெளிவடைந்ததாக எண்ணிக்கொண்ட காலங்களில் எங்கள் ஊரில் ஒரு சர்வகட்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்தோம். அதில் ஒரு சிறு நாடகம் ஈழப்போரின் முதுகில் குத்திய ராஜிவ் காந்தியாக நானே நடித்தும் இருக்கிறேன். ராஜிவ் காந்தி திருவையாறு இசைக்கல்லூரி திறப்பு விழாவிற்கு வந்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதிணைந்து -நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். (அனாதைகளின் வன்முறையை ரொமாணடிஸைஸ் ரஜனி படங்களைப்போல॥ இது சிறைச்சென்றதை ரொமாண்டிஸைஸ் செய்யும் நோக்கில் சொல்லப்படவில்லை.)

ஈழப்போரை ஆதரித்து ஒரு மாணவர் முண்ணனியை சென்னையில் தி।க. மற்றும் பொதுவுடமைக்கட்சிகளை இணைத்து உருவாக்கினோம். அதற்கு வழிகாட்டியது மாவோவின் இக்கோட்பாடுதான். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை திரட்டி ஒரு ஊர்வலமும் நடத்தினோம். அப்பொழுது இதனை செண்ணையில் நான் முழுநேரப்பணியாகவே வீட்டைவிட்டு வெளியேறி செய்து கொண்டிருந்தேன். லெணிணும் மாவோவுமே ஆதர்சம். நாற்பதற்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் ஈழப்போருக்கு ஆதரவாக பேசியிருக்கிறேன்.

கண்களில் புரட்சிப்பற்றிய கனவுகள் வழிய... புரட்சி அது ஒன்றே மந்திரச் சொல்... இழப்பதற்கு ஏதுமில்லை அடிமை விலங்குகளைத்தவிர பெறுவதற்கோ ஒரு பொன்னான உலகம் இருக்கிறது... என்று எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்த மந்திர வாசகம் அது... அது ஒரு உன்னதமான நாட்கள்தான்... பதிணைந்து ஆண்டுகளக்குமேல் ஓடிவிட்டது। நமது சகோதரத் தமிழர்களின் அவலம் ஒயவில்லை... தின வாழ்வு என்கிற மலம் கழிக்கும் பணியைத்தவிர வேறு ஒன்றம் அறியேன் பராபரமே என்று ஓடுகிறது எனக்கும் வாழ்க்கை. வாழ்க்கைச் சூழல் அடித்த சூறாவளி... கணிப்பொறியில் ஓடகிறது காலம் இன்று.

ஈழப்போர் இந்திய புரட்சிகர இயக்கங்களுக்கான ஒரு புத்துணர்வையும் பல கோட்பாட்டு விளக்கங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் மிகையாகாது। தேசிய இனக்கோட்பாடுபற்றி மார்க்சியர்களை மீழ்படிப்பிற்கு உட்படுத்தியது. பிரிந்து போகும் தன்னாட்சி உரிமை என்கிற லெனினியக் கோட்பாடே அப்பொழுதான் தூசி தட்டி எடுத்துப் புரட்டப்பட்டது. இவற்றை திரும்பவும் நினைத்துப் பார்க்கும்போது எல்லாம் "பொய்யாய் பழுங்கதையாய் மெல்லப் போய்விட்டது". ஈழம் ஒருநாள் மலரும் என்கிற நம்பிக்கை மட்டும் ஆழமாக ஒரு உள்ளுணர்வாக எஞ்சியிருக்கிறது... எல்லா யதார்தங்களையும் கடந்து.....

இன்னுமொரு நினைவுக் குறிப்பு... கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் செய்வோம் நாவலிற்கு முதன்முதலில் தோழர் ஒருவர் நடத்திய "நீண்ட பயணம்" இதழில் 85-ல் என நினைக்கிறேன் அறிமுக உரை ஒன்ற எழுதினேன்। அந்த நாவல் தற்சமயம் மீழ்பதிப்பாக வந்துள்ளது। கைவசம் என்னிடம் இல்லை. அதனை பெறுவதற்கும் இங்க வாயப்பில்லை. அந்நாவல் ஈழப்போராட்டம் குறித்து பலவற்றை முன்அனுமானிக்கிறது என்றே நினைக்கிறேன். வாய்ப்பிருந்தால் அந்நாவல் குறித்த ஒரு அறிமுகஉரை தோழர்கள் யாரேனும் எழுதலாம். எனது அறிமுக உரை இதழ் என்னிடம் இல்லை. கிடைப்பின் அதனை நான் பதிவில் இடுவேன். நினைவுபாதையில் பின்னோட்டத்தின் மூலம் பின்னோட்டம் போடவைத்த அற்புதனுக்கு நன்றி.
Share |
ஜமாலன். Blogger இயக்குவது.